Sunday, July 5, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 3

வானில் சூரியன் சுத்தமாய் இல்லை. மேகங்கள் மறைத்து இருக்கிறது என்றால் சூரியனை மறைத்த மேகம் ஏன் நிலவை மறைக்கவில்லை. இது அந்தி வேளை என்றாலும் சூரியன் மறைய வில்லை என்பதை அங்கே சூழ்ந்து இருக்கும் வெளிச்சம் வெளிச்சம் போட்டு காட்டியது. கிரகண காலத்து சீதோஷணம் நிலவியது. முன் பனிக் காலத்து சிலீரென்ற காற்று தொடர்ந்து மேலே பட்டுக் கொண்டு இருந்தது. கிரகண காலங்களில் அம்மா வெளியே போகக் கூடாது என்று சொல்லுவாள். அவள் காரணம் ராகு கேது என்ற இரு நாகங்களின் விடம் சூழலில் சூழ்ந்து இருக்கும் என்பதே. நான் கற்ற விஞ்ஞானமோ "uv கதிர்கள், பாக்டீரியா, நுண் கிருமிகள்" என்று பலவற்றுக்கும் முடிச்சு போட்டது. எவ்வாறாயினும் இவ்வேளையில் வெளியே இருப்பது சரி அல்ல என்று பட்டது. சமீபத்தில் கிரகணம் வருவதாய் எந்த செய்திகளிலும் சொல்ல வில்லை.

முழு நிலவை கண்டால் கடல் கொந்தளிக்குமாம். பைத்தியங்களுக்கு பித்தம் தலைக்கு ஏறுமாம். எனக்கு நிலவைப் பார்க்க பயமாய் இருந்தது. சினிமாவின் உச்ச கட்ட கட்சி போல் ஓடிச் சென்று "I love you" என்று சொல்லி விடுவது என்று முடிவெடுத்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அவளைக் காணவில்லை. எந்த திசையில் செல்ல என்று தெரிய வில்லை. முன்பு நின்ற இடமாவது எப்படியாவது ஊர் போய்ச் சேர்வோம் என்று நம்பிக்கை அளித்து. இவ்விடம் நாலா புறமும் விடத்தை உறிஞ்சி வைத்துக் கொண்டு உமிழக் காத்துக் கொண்டிருந்தது.

நாங்கள் வந்த பாதையை நோக்கி கவனத்தைத் திருப்பினேன். சிறிது தூரத்தில் ஓடை ஒன்று மாநகராட்சிக் குழாய் உடைந்து தண்ணீர் உகுப்பது போல் சிறு ஓசையுடன் ஓடிக் கொண்டு இருந்தது. தார் சாலை எப்பொழுதோ முடிந்திருக்க, மணல் சாலையை ஈரமாக்கியவாறு ஓடை நீர் ஓடையின் பாதையிலிருந்து விலகி சாலையில் ஓடி வந்து கொண்டு இருந்தது. இதனால் நானும் அந்தக் க்ராதகியும் வந்த வண்டியின் தடம் தெளிவாகத் தெரிந்தது. நல்லது. இதே வழியில்.. இந்த தடத்தைப் பார்த்தவாறே சென்று விடலாம் என்று திரும்பி நடக்க ஆரம்பித்தேன். சிறிது தூரம் நடந்து வந்து மற்றோர் ஓடையின் அருகில் இருந்து திரும்பிப் பார்த்தேன். என் காலடித் தடங்கள் அந்த சகதியில் தெளிவாய்த் தெரிந்தன.

இன்னும் சற்று தூரத்தில்.. அதாவது நான் இறங்கிய இடத்தில் காலடித் தடங்கள் மறைந்து வண்டியின் சக்கரத் தடங்கள் ஆரம்பமாயின. எனது புத்தியில் சட்டென்று ஒன்று உறைத்தது. அவள் வண்டியில் எந்தப் பக்கமும் திரும்பாமல் நேராகச் சென்றாள். அப்படி ஆயின் என் காலடித் தடத்துடன் வண்டியின் சக்கரத் தடங்களும் இருக்க வேண்டுமே. அவள் அங்கிருந்து மறைந்து போகவில்லை. வண்டியில் செல்வதை நான் என் கண்களால் கண்டேனே.

ஓடை நீர் தடத்தை அழித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பலனை குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் சூழலுக்கு சாதகமாக்கி எனக்குள் தீர்ப்பு எழுதிக் கொண்டேன்.
அடுத்து என்ன? அவள் இதே சாலையில் இதோ இந்த ஓடைக்குள் இறக்கி அக்கரை சென்று அப்பால் மறைந்ததைக் கண்டிருந்தேன் அல்லவா. ஓடையில் இறங்குவது என்று முடிவாயிற்று. உடைகளைச் சுருட்டி விட்டுக் கொண்டு பையைத் தோள்களில் ஏற்றிக் கொண்டு நீரில் இறங்கினேன். நீர் அந்தக் குளிரிலும் அந்த சூழலுக்கு பொருந்தாத மிதமான சூட்டுடன் இருந்தது. ஓடை நான் எதிர் பார்த்ததை விட ஆழமாகவே இருந்தது. நான் முட்டளவு நீரில் நின்று கொண்டிருந்தேன். அவள் சென்ற பொது இந்த ஆழம் இல்லையே. இந்த ஆழத்தில் நான்கு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாதே. நான் அவளை மோகினிப் பிசாசு என்றே முடிவு செய்து கொண்டேன். நீரின் வேகம் அதிகமாயிற்று. என் கால்கள் நீரில் இழுக்கப்பட்டன. முட்டளவு நீரில் கால்கள் இழுக்கப் படுவதாவது? அனால் அது பிரமை இல்லை. அந்த மோகினிப் பிசாசு என்னை இங்கு அழைத்து வந்தது என்றால் எதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காகவாவது நான் பிழைப்பேன் என்று நம்பினேன். பிழைத்தேன்.... (தொடரும்)

No comments: