Tuesday, November 24, 2009

புத்தகம் புகுந்த கதை - 4

ஆண் குரங்கின் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் தினமும் குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக அதன் உடல் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகிக் கொண்டே வந்தது. ஃப்ளு காய்ச்சலுக்கான பாலும் வேலை செய்யவில்லை. பெண் குரங்கின் உடலில் அது கர்ப்பமாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரிய வில்லை. பிரசவம் நேர்ந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் காணப் படவில்லை. எனவே கண்ணன் எடுத்துச் சென்றது குரங்கு குட்டி தான் என்று உறுதியாக நம்ப முடியவில்லை. ஆனால் இக்குரங்குகளை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே அனைத்தும் மர்மமாகவே இருப்பதால் எதையும் தெளிவாக விளக்க முடியவில்லை.

இதற்கு மேல் அந்த புத்தகத்தில் அவர்களைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை. பெய்லி அவன் நின்று கொண்டிருந்த இடத்தில் இல்லை. ஓடையின் மறு கரை இன்னும் இருளாகவே இருந்தது. இவ்வளவு நேரமாகியும் பசி எடுக்காதது ஆச்சர்யமாக இருந்தது. இந்த தீவில் இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமா என்று தெரிந்து கொள்ள தீவைச் சுற்றி வட்டமிட்டேன். எல்லா இடத்திலும் சிறு சிறு செடி கொடிகள் அடர்ந்து இருந்தன. தப்பித்து செல்ல எதாவது கிடைக்குமா என்று அலசி ஆராய்ந்தேன். ஒன்றும் புலப்படவில்லை.

சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் நெருங்கியது. திடீரென்று நிலம் அதிரத் தொடங்கியது. ஓடையில் இருந்தது பெரும் இரைச்சலுடன் கண்ணாடி தகடுகள் மேலெழும்பின. கண்ணாடி எழும்பிய வேகத்தில் நீர் அதிக வேகத்துடன் வெகு தூரத்திற்கு சிதறி விழுந்தது. திடீரென்று பிரகாசம் அதிகம் ஆகியது. பயத்தில் நான் பின் வாங்கினேன். இரைச்சல் குறைந்தது. ஆனால் இது என்ன சத்தம். சித்ராங்கதாவின் வண்டி ஹாரன் சத்தம். திரும்பினேன். சித்ராங்கதா இல்லை. அவள் வண்டி மட்டும் நின்று கொண்டு இருந்தது. வேகமாக வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். வண்டி நகர ஆரம்பித்தது. வேகமாக நகர்ந்து ஓடை அருகே சென்ற போது வண்டி கண்ணாடியில் முட்டி நின்று போனது.

கண்ணாடிக்கூண்டுக்குள் அடைக்கப் பட்டுவிட்டேன். யாரோ என்னை சிறை எடுக்கிறார்கள் என்று புரிந்தது. கூண்டுக்குள் மின் விளக்கு வெளிச்சம் பரவியது. என்னைச் சுற்றி இருந்த சூழல் மாறியது. சில நொடிகளில் ஏதோ ஒரு நவீன ஆய்வுக் கூடத்தின் உள்ளே இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றியது. நான் அமர்ந்து இருந்த வண்டி உறுமத் தொடங்கியது. அக்சிலடேரை முருக்கியதும்.. அதி வேகத்துடன் கூண்டு மேல் நோக்கி சென்றது. பின் சீரான வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. கீழே ஒரு குளம் பெரிய கல் ஒன்று விழுந்தது போல் ததும்பிக் கொண்டு இருந்தது. வேறு எதுவும் இருளில் தெரியவில்லை. எங்கு செல்கிறோம் என்று தெரியாமலே எனது மூன்றாவது பயணம் ஆரம்பமாகியது. ... (தொடரும்)...