Tuesday, February 16, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 6

முந்தைய நாள் முடிந்திருந்த வில் விழாவின் எஞ்சிய சுவடுகள் போல வில்களாய் வளைந்திருந்தன வேல மரங்கள் அந்த வில்லின் நாண் போல அகன்று, பரப்பிய புது மணலின் நெகிழ்வால் எந்த நேரமும் அம்புகளை எய்யக் காத்திருந்தது வணிகர் வீதி. இந்த விற்களை நிலத்தில் இருந்து நோக்கும் புகார் நகரத்தவருக்கு காரிகையர் விழிகளை ஞாபகப்படுத்தலாம். ஆனால் வானில் இருந்து வில் முனையை எதிர்கொள்ளும் சூரியன் வெளிறித் தான் போயிருந்தான். எந்த நேரத்திலும் அம்புகள் புறப்படக் கூடும் என்று பயந்து மேகக் கேடயங்களால் உடல் மறைத்து நடுங்கி நின்றான். பயந்தவர் தலை எப்போதும் கீழ் நோக்கியே தொங்கிக் கொண்டு இருக்கும், ஆனால் சூரியனுக்கு ஆபத்தே கீழ் திசையில் எனும் போது? ஆயினும் அவனை விடவும் கருத்தோடு இருக்க வேண்டியவர் புகார் வணிகரேயாம். ஏனெனில் அவர்கள் காண்பதோ காரிகையர் விழிகளையல்லவா? வெயிலவன் பயந்ததற்கு அது ஒன்று மட்டுமே காரணம் அல்ல, அவனும் வண்ண விழி வில்லை எதிர் திசையில் கண்ணுற்றிருந்தான். கரு விழி மாதரே மதி மயக்கும் போது, வண்ண விழியாள் வெயில் மயக்க மாட்டாளா? மாதர் தம் வில் விழி கவசங்களையும் துளைக்க வல்லதல்லவா? இதோ இன்னும் சிறிது நேரத்தில் மேகக் கேடயங்கள் உருகி துண்டங்களாகி புகாரின் மேல் விழப் போகின்றன. உச்சி மீதி வானிடிந்து வீழ்ந்தாலே பயம் கொள்ளாத் தமிழர்கள் மேகம் வீழ்வதற்கா பயம் கொள்வர்? எம் குலச் சிறார் இதோ வந்தது 'ஆலங்கட்டி' என்று குதித்து விளையாடப் போகுவர். ஒவ்வொரு இந்திர விழாவிற்கு யார் வரத் தவறினாலும் இந்திரனின் மூத்த தமையன் வருணன் வரத் தவறியதில்லை.

ஆலங்கட்டிகள் ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் விழுகிறதோ இல்லையோ நிச்சயம் ஆலமுற்றதில் விழும். வானத்தில் இருந்து விழும் மழைத்துளி நிச்சயம் ஆலம் விழுதோடு ஒப்பிடத் தக்கது தான், ஆனால் என் இந்த ஆலங்கட்டி மழை மட்டும் ஏன் இந்த பெயர் பெற வேண்டும்? மழை விழுதென்றால் விழுவது விதை எனக் கொண்டு கிடைக்கும் கட்டிகள் ஆலங்கட்டிகள் ஆகினவோ? ஒவ்வொரு வருடமும் நாவாய் பாம்பை முழங்கியதும் ஆலமுற்றத்து கடலோன் கோட்டத்தின் முற்றம் ஆலங்கட்டிகளால் நிரப்பப் படும். இன்று சற்றே தாமதம் போலும், எந்த நேரமும் வரலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்த எதிலும் மனம் கொள்ளாமல் சாலையில் நின்ற தந்தையின் மீது இந்திரசேனனின் கண்கள் குத்திட்டு நின்றன. தந்தையார் இந்திரசேனனை வரவேற்க வாசல் வரை வருவார் என்று நிச்சயம் எதிர்பார்த்திருந்தான் மாற்சிம்மன். உடன் முதன்மை வீதி மாளிகை அம்மையாரும் வந்திருந்தார். அந்த அம்மையாரைப் பார்த்ததும் ஆச்சர்யம் படர விட்ட இந்திரசேனனின் கண்கள், அவன் பேசிய மொழியை விட அதிக கருத்துக்களை அவ்வம்மையாருக்குத் தெரிவித்திருக்கக் கூடும். தந்தையும் அயல் நாட்டு வணிகரும் பேசிக்கொள்ளும் அந்த அதிவேக மதுர மொழியில் மூவரும் பேசிக் கொண்டனர். மறுபடியும் 'புரந்தரன், அழியாப்புலம்' போன்ற வார்த்தைகள் மட்டுமே அதிகம் தெறித்தன. அவர்கள் பேசிய தொனியில் இந்திரசேனன் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாகவும், மற்ற இருவரும் அவனுக்கு இயன்ற மட்டிலும் விளக்கம் சொல்லிக்கொண்டு இருப்பதாகவும் யூகித்தான். இந்திரசேனனின் குழப்பம் குறையவில்லை, அவர்கள் பேச்சு அவனது குழப்பத்தை அதிகரித்தது. மற்றவர்கள் கவனிப்பதை உணர்ந்த இருவரும் பின்னர் பேசிக் கொள்ளலாம் என உள்ளே நுழைந்தனர். இதற்குள் தாயார் மங்கல ஆரத்தி, காப்பு, கழிப்பு முதலியனவற்றை செய்து முடித்திருந்தார்.

உள்ளே நுழைந்ததும், தந்தையும் இந்திரசேனனும் தந்தையின் தனி அறைக்குள் சென்று விட்டனர். பின்னர் காலை உணவிற்கு சந்தித்த போது தான் மறுபடியும் இந்திரசேனனை சந்தித்தான். அதுவரை மதுரமொழியில் பேசியவர்கள் திடீரென்று குறுந்தமிழில் பேச ஆரம்பித்தனர். குறுந்தமிழ் என்பது மிகக் குறைவான தமிழ்ச் சொற்களைக் கொண்ட, அதிக இலக்கண விதிகளுக்கு உட்படாத, மருவிய சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்கள் அதிகம் விரவி வருவதும் ஆகும். சில வருடங்களுக்கு முன்பு தான் தந்தை அந்த மொழியை எனக்கு பயிற்றுவிப்பதற்காக மொழிப்பெயர்ப்போர் வீதியில் இருந்து ஒருவரை வரவழைத்து கற்றுத்தந்தார். இம்மொழி தமிழ் கற்றுக்கொள்ள சிரமப் படும் அயல் நாட்டு வணிகர்கள் பேசும் குறைத் தமிழ் என்று கூறியிருந்தார். ஆயினும் இது வரை யாரும் அவனிடம் அந்த மொழியில் பேசியதில்லை. மதுரமொழியைக் கற்றுவிக்காத தந்தை இந்த மொழியை பயிற்றுவித்ததன் நோக்கம் இதுதானா? இந்த மொழியை இந்திரசேனன் சரளமாக பேசினான், சிறிது நேர உரையாடலுக்குப் பின் "மாற்சிம்மா.. உனக்கு இந்த பாஷை தெரியும். இனி இந்திர சேனனிடம் இந்த பாசையிலேயே பேசலாமே. இந்திரசேனா.. இனி உனக்கு பயமில்லை தானே?" என்று தந்தையார் கூறிச் சிரித்தார். மிகுந்த காலமாக உண்ணாதவன் போல் ஆர்வத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இந்திர விழாவின் ஆரம்ப நாளாதலால் அரிசி உணவு சமைக்கப் பட்டிருந்தது. கை அலம்பும் வேளையில் கூரையில் கற்கள் விழ ஆரம்பித்தன.

நேற்றே வேழம்பனை வரச் சொல்லி இருந்தான். இந்த இருபது வருடங்களில் அவனுக்குத் துணை இணை எல்லாமே அவன் தான். குருகுலம் சென்ற சில வருடங்கள் மட்டும் தான் அவனோடு பேசாது இருந்த நாட்கள். சிறு வயது முதல் சென்ற வருடம் வரை குருகுலத்தில் இருந்ததால் இந்திர விழாவை இந்த முறை தான் தனியாக தந்தையின் பரிவாரங்கள் இல்லாது பார்க்கலாம் என்று எண்ணி இருந்தான். இதைக் கவனித்த அவன் தந்தை "யாரையோ எதிர்பார்ப்பது போல் உள்ளதே?" என்றார். "வேழம்பனை வரச் சொல்லி இருந்தேன், விழா நலம் காண உடன்போக்காய் அழைத்துச் செல்லலாம் என்று எண்ணம்" என்றான். "சொல்ல மறந்து விட்டேன். அவனை வேறு ஒரு அலுவல் காரணமாய் அனுப்பியுள்ளேன், இன்று இந்திர சேனனை அழைத்துச் செல்லலாமே, புதியவன் அல்லவா? நீ என்றால் ஒத்த வயதினன் பல விஷயங்கள் பேசலாமே என்று நினைத்தேன்". "சரி அப்பா அப்படியே ஆகட்டும்" என்றான். அலங்கட்டிகள் முற்றத்தில் நிரம்பியதும் வருணன் விடை பெற்றிருந்தான்.......... (தொடரும்)...