Monday, December 28, 2009

புத்தகம் புகுந்த கதை - 9

மாயர்களின் சோதிடக் கணிப்புகள் உங்களை "மஹா" என்றே குறிப்பிடுகின்றன. அது ஏதோ ஒரு சங்கேதப் பெயர் அல்லது அடைமொழியாக இருக்கலாம். உங்களைப் பற்றிய ரகசியங்கள் எங்களுக்கு புரிந்து விடக் கூடாது என்பதர்க்கென்றே உருவாக்கப் பட்ட பெயர் என்று தெரிகின்றது. இந்தப் பெயர் நம்மவர்களில் அனைவருக்கும் பரிச்சியமான பெயர் என்பதாலும், நீங்கள் வரும் சமயம் இது என்று பலரும் எதிர்பார்ப்பதாலும் உங்களின் பாதுகாப்பு கருதி உங்களின் பெயர் "இந்திரசேனன்" என்று மாற்றப்பட்டது. புகாரின் பெருவாரியான மக்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் "நீங்கள் தான் மஹா" என்று அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள். புகாரில் நீங்கள் பெருவணிகன் புரந்தரனின் தம்பி என்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இது நாள் வரை உரோமாபுரியில் குருகுல வாசத்தில் இருந்ததாக சொல்லிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பூம்புகாரின் வரலாற்றை தெரிந்து கொள்வது மிக அவசியம்.

சினரம் என்னும் நாட்டை செம்பியன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். வள்ளன்மையில் தன்னிகர் இல்லாதவன் என்னும் பெயர் கொண்டு வாழ்ந்து வந்தான். வேதங்களில் கூறப்பட்டுள்ள நூறு விதமான யாகங்களும் செய்து இந்திரனுக்கு நிகரானவனானான். ஒரு நாள் அவன் அரசவையில் இருக்கும் பொது ஒரு புறாவானது பருந்திடம் இருந்து அடைக்கலம் தேடி அவன் மடி புகுந்தது. அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்றி, பருந்தின் பசிக்கு தன் தொடைக்கறியை உணவாகக் கொடுத்தான். அவன் செயலைப் பார்த்த இந்திரன் அவன் நாடு மழை வளனுடன் செல்வச் செழிப்பும் பெற்று விளங்குமாறு வரமருளிச் சென்றான். இந்திரனின் வரத்தால் நாடு எல்லா வளங்களுடனும் செழிப்புற இருந்தது. எனவே இந்திரனுக்கு தன் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் இந்திரனுக்கு விழா எடுக்க விரும்பினான். மேலும் வளங்களின் அரசனான இந்திரன் தன் நாட்டிலேயே இருந்தால் தன் நாட்டுக்கு எவ்வித குறையும் வராது என்று நம்பிய செம்பியன் கடற்கரையோரம் இந்திரனின் இருப்பிடமான அமராவதிக்கு இணையான நகர் ஒன்றை நிர்மாணித்தான். அதை அமராவதி என்றே பெயரிட்டு அழைத்தான். மண்ணகத்து வான்பதி என்று பின்னாளில் அழைக்கப் பட்ட அந்த மூதூர் தான் பூம்புகார்.

அதன் பின் செம்பியன் வழி வந்த சோழ மன்னர்கள் அந்நகரைப் போற்றிப் பாதுகாத்து மேலும் எழிலுறும் வண்ணம் வானுயர் மாடங்கள் எழுப்பினர். கரிகால் சோழனின் காலத்தில் தலைநகர் ஆன பின்னும் கூட இந்திரா விழா தொடர்ந்து எடுப்பிக்கப் பட்டு வந்தது. பின்னர் "வாகைச்சென்னி" என்னும் மன்னன் காலத்தில் தொடர்ச்சியாக இருபது வருடங்கள் இந்திரா விழா எடுக்காத காரணத்தால் இந்திரனால் அழிக்கப்பட்டதாக கருதப்பட்டது. நாம் செல்ல விருக்கும் புகார் அழிக்கப்பட்ட பூம்புகார் நகரத்தைப் போன்றே வடிவமைக்கப் பட்டது. மேலும் நகரின் பழமையைக் காக்கும் பொருட்டு நவீனத்தின் அடிச் சுவடே தெரியாத வண்ணம் தலைநகரத்திற்கு வெகு தொலைவில் அமைக்கப் பட்டு உள்ளது. பழைய புகார் நகரத்தின் அனைத்து அம்சங்களுடனும் அமைக்கப் பட்டுள்ளது. இது குறித்தும் நீங்கள் அந்நகர மக்களிடம் எதுவும் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள்.

உங்கள் உடை மற்றும் பேசும் மொழி ஆகியவை இந்த நகருக்கு ஏற்றார்போல் நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் புகார் நகரத்தில் நுழையும் போது உங்களுள் ஒரு மாற்றம் ஏற்படும். வெளி ஆட்கள் நகரில் நுழையும் போது ஏற்படும் இயல்பானதொரு மாற்றம் எனவே பயம் கொள்ளத் தேவையில்லை. இது இந்த நகரத்தின் பாதுகாப்புக்காக "மாயன்" பிரகலாதனால் ஏற்படுத்தப் பட்டது. அப்பொழுது.. (தொடரும்)....