Sunday, July 26, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 8

நிழல். வெளிச்சத்தின் மறுபுறம். வெளிச்சம் தலை நிழற்பூ. வெளிச்சமில்லாமல் நிழல் தனித்து இருக்க முடியாது. நிழல் இல்லாத வெளிச்சம் சகிக்க முடியாத கனல். ஏனெனில் வெளிச்சம் தனித்து வருவதில்லை அத்தோடு வெயிலையும் சேர்த்துக் கொண்டு தான் வருகிறது. வெயில் வெளிச்சத்தின் இல். வெளிச்சமும் நிழலும் அருகருகே இருக்கின்றன. வெளிச்சத்தின் வெம்மை நிழலிலும் இருக்கின்றது. எனவே நிழலில் இருப்பது குளுமை அன்று அது வெயிலுக்கு ஒரு ஆறுதல் அவ்வளவே.ஆனால் நிலவோ குளுமையானது. ஏனெனில் அது சூரியனின் நிழல் இல்லை. சூரியனின் பிரதிபலிப்பு. நிலவு சூரியனுக்கு எதிர். நிழல் சூரியனுக்குத் துணை அல்லது இணை. புராணம் என்ன சொல்கிறது?

சூரியனின் மனைவி சரண்யு, யமனின் தாயானவள், விடியல் மற்றும் மேகங்களின் தேவதை என விளிக்கப்படுகிறாள். சரண்யு சூரியனின் தகிப்பு தாளாமல், பூமிக்கு வந்து சூரியனின் ஒளிக் கண்களுக்கு மறைந்து தன் தோழி சாயாவுடன் வாழ்ந்து வருகிறாள். ஒரு நாள் சாயா இல்லாது சரண்யு தனித்து செல்லும் போது சூரியனின் பார்வையில் சிக்கிக் கொள்கிறாள். தான் இது வரை சூரியனின் பார்வையில் படாது வாழ்ந்து வந்ததன் காரணம் சாயா தேவி எனப்படும் நிழல் தேவியின் நட்பினால் என உணர்கிறாள். சூரியனுடன் செல்ல வேண்டுமானால் சூரியன் சாயாவை மணந்து தன்னுடன் அழைத்து வர சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். சூரியன் சம்மதிக்கிறான். இவ்வாறாக நிழல் வெளிச்சத்தின் அதிபதியாம் சூரியனின் மனைவியாகிறாள். இன்றும் சூரியனுடனே வாழ்ந்து வருகிறாள். இப்போது பதிவிரதா தர்மத்தின் படியும், வெளிச்சம் இல்லாது நிழல் இல்லை.

என்றோ ஏதோ வெளிச்சத்தின் உதவியால் நிழலில் எடுக்கப்பட்ட நிழல் இன்று வெளிச்சத்தின் பார்வையில். அந்த ஒளி நிழலாக்கி இருந்த நிழல் கண்ணன் மற்றும் மோகினியுடையது. அப்படியானால் அவர்கள்? படத்திற்குக் கீழே ஆங்கிலத்தில் "Kannan Vasudevan with Chitraangadha Hari" என்று இருந்தது. அது நிழற்படம் மட்டும் அல்ல. அது ஒரு புத்தகம். அந்தப் புத்தகம் எப்படி என் பைக்குள். யோசிக்க நேரமில்லை. அதோ அந்த ஓடையின் சலசலப்பு என்னை அழைக்கின்றது.

இப்பொழுது டார்ச்சை மட்டுமில்லை புத்தகத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். இரண்டும் என்னிரண்டு கையில். கால்களோ தரையில் சில நொடி பட்டு பல நொடி காற்றில் மிதந்தது. இப்பொழுது அந்த ஆண் குரங்கின் குரல் "Daisia..". டைசியா அந்தப் பெண்ணின் பெயராக இருக்க வேண்டும். ஆனால் குரல் வந்த திசை நான் செல்லும் திசையாக இருந்ததால், கால்கள் அதிக வினாடி தரையில் படத் தொடங்கியது.

நான் வேகத்தைக் குறைத்ததால் மின்மினிகள் தோன்றிய இடத்திற்கு முன்னமே நான் நின்று விட்டேன். எதிரில் அந்த குரங்கு. டைசியாவைப் பார்த்துவிட்டு என்னை நோக்கி ஆக்ரோஷமாக உறுமியது. அதைத் தாக்க என்னிடம் இருந்தவற்றுள் டார்ச்சே சரியான ஆயுதமாய் பட்டது. அத்தோடு புத்தகத்தை இழக்க நான் தயாராக இல்லை. அடுத்த நொடி டார்ச் அதை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அவசரத்தில் டார்ச்சை அணைக்காததால் அதன் வெளிச்சம் அது வருவதை அவனுக்கு உணர்த்தி இருக்க வேண்டும். அவன் விலகிக் கொண்டான். இனி என் கதி?... (தொடரும்)...