Thursday, December 3, 2009

புத்தகம் புகுந்த கதை - 6

மறுபடியும் வேறு ஏதோ ஒரு குளத்தில் அதே கல் விழுந்தது. கூண்டு திறந்தது. இந்த முறை குளத்தின் நீர் சிவப்பாக இல்லை. என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளும் முன்னரே நான்கைந்து நபர்கள் உள்ளே நுழைந்தனர். "வணக்கம். உங்கள் முன் நிற்பவன் இந்நகரின் தலைவன், பெயர் புரந்தரன். உங்களுக்கு தமையன் முறையினன்" என்று அறிமுகம் செய்து கொண்டான். "தமயன்? அண்ணனா? நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க?" முடிப்பதற்குள் தடுத்து "மஹா.. உங்களுக்கு சந்தேகம் இருப்பின் இவரைச் சந்தியுங்கள். உங்களை இது நாள் வரை பராமரித்து வந்தவர், அதிதி. உங்கள் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்" என்று ஒரு படத்தைக் காட்டினார். "புரந்தரன்.. எனக்கு விளக்கமா சொல்லுங்க. இது என்ன இடம்?"

"எதையும் பேசுவதற்கு இது சமயமோ இடமோ அல்ல. உங்களுக்கு போக போக எல்லாம் தெரிய வரும்". மற்றவர்கள் பக்கம் திரும்பி "சித்ராங்கதாவின் உடல் கிடைத்ததா? வேறு ஏதேனும் தடயங்கள்?".

சித்ராங்கதாவின் உடல் தூக்கி வரப்பட்டது. புரந்தரன் அவள் கோட் பையில் இருந்து சில பொருட்களை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு "சரி வெளியில் நில்லுங்கள். உடலை தகுந்த மரியாதையுடன் அப்புறப்படுத்தி விடுங்கள். முன்னர் கூறியவை அனைத்தும் இன்னும் சிறிது நேரத்தில் தயாராக இருக்க வேண்டும்" என்று அவர்களுக்கு கட்டளையிட்டான் வேறு ஏதோ மொழியில் .

"மஹா உங்களுக்கு இந்த மொழி நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று கூர்மையாக பார்த்து விட்டு பின் அதே மொழியில் தொடர்ந்தார் "உங்கள் நிலை புரிகின்றது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை விட உங்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்வது அவசியம். சொல்லுங்கள் கண்ணனின் வாகனத்தில் ஏறியதில் இருந்து விண்கலம் இங்கு வந்து சேரும் வரை நடந்த அனைத்தையும் சொல்லுங்கள்".

கதையை ஓரிரு நொடிகளில் (!?) சொல்லி முடித்ததும் "டைசியா மற்றும் பெய்லீ. எல்லாம் தெரிந்திருக்கிறார்கள். பொருத்தமான பெயர். அவன் பெயர் குறிப்பிடப் படவில்லை. அந்தப் புத்தகம் இது தானே?" என்று அந்த புத்தகத்தை கையில் எடுத்தார். அவர் கழுத்தில் உள்ள அட்டிகையின் நடுவில் உள்ள பச்சைக்கல் மினுங்கியது. அந்த புத்தகத்தை திறக்காமலே திருப்பிக் கொடுத்துவிட்டு "எல்லாம் தெரிந்த கதை. மன்னிக்கவும் உங்கள் உடை நேரமின்மை காரணமாக உங்கள் அனுமதியின்றி மாற்றப் பட்டு இருக்கின்றது . சீக்கிரம் வாருங்கள் உங்கள் விண்கலம் புறப்படத் தயாராய் இருக்கிறது."

இந்த தீவின் அருகிலேயே இருந்த மற்றொரு தீவில் "இந்திரசேனரே.. இந்த வாகனம் உங்களுக்காகவே வடிவமைக்கப் பட்டது, உங்களுடையது . உங்களுக்கு தெரிய வேண்டியவை அனைத்தும் பதிவாக்கம் செய்யப்பட்டு உங்களிடமே கொடுக்கப் பட்டுள்ளது. தேவைப்படும் போது நீங்களே தேடித் தெளிந்து கொள்ளலாம். மீண்டும் புகாரில் இந்திரா விழாவின் பதினேழாம் நாள் சந்திப்போம் . நன்றி" புரந்தரன் விடை பெற்றார். வாகனம் கிளம்ப அனுமதி கோரியது. "சரி கிளம்பலாம்".... (தொடரும்)