Sunday, January 10, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 2

மாற்சிம்மன் கழிமுகத்தீவிற்கு இது முதல் முறை அல்ல என்றாலும், இம்முறை வந்திருப்பதன் நோக்கம் சாமானியம் ஆனது அல்ல என்பதால், தீவே புதியதாய் தோற்றம் அளித்தது. முதல் ஜாமத்திலேயே தந்தையாரால் எழுப்பப்பட்டதும், பின் அவரது தனி ரதத்தில் பட்டினப்பாக்கத்திலிருந்து மருவூர்பாக்கம் படகுத் துறையை அடைந்ததும் சில கணங்களில் நடந்தது போல் இருந்தது. இதோ படகு இன்னும் அரை நாழிகையில் கழிமுகத்தீவை அடைந்துவிடும். இப்பொழுதே தீவின் பிரமாண்டம் படிப்படியாக குறையத் தொடங்கி இருந்தது. பஞ்சபூதங்களுள் வெளியும் நிலனும் அருகாமையில் அதன் பிரமாண்டத்தை குறைத்துக் கொள்கின்றன. நீரும் காற்றும் இதற்கு எதிரணி. நெருப்பு என்றுமே தன்னை குறைத்தும் கூட்டியும் காட்டியதில்லை. புதியவர் அதிலும் முக்கியமானவர் வருகிறார் என்றால் தந்தை தானே நிறைமுகம் சென்று வரவேற்பது தான் வழக்கம். நகரவழக்கு கழிமுகம் என்றாலும் கூட தந்தை ஒரு போதும் கழிமுகம் என்று கூறியதில்லை. அதை நிறைமுகம் எனக்கூறி அதற்கு 'இடக்கரடக்கல்' என்று இலக்கணக் குறிப்பும் கொடுப்பார். காவிரி கடலில் கழிவதில்லை எனவும் அங்கு சென்று நிறைவதாகவும் கூறுவார். மேலும் விருந்தினர் விடைபெறும் இடத்திற்கு கழிமுகம் என்ற பெயர் வைப்பது விருந்தோம்பலுக்கு எதிரானது. விருந்தினரை நிறைமுகதுடன் வரவேற்பதாலும், நிறைமுகதுடன் விடையளிப்பதாலும் அத்தீவிற்கு 'நிறைமுகக்காயல்' என்பதே சாலச் சிறந்த பெயர் என்பது அவர் வாதம்.

தந்தையோ பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் பெருவணிகர்களில் முன்னவர். அவரது வர்த்தகங்கள் எல்லாம் புகார் துறைமுகத்தில் தான் நடக்கும். நிறைமுகத்தீவுத் துறையோ சிறு வணிகர் வந்திறங்கும் இடம். இங்கு அவர் வாணிப நிமித்தமாக வர சாத்தியமில்லை. ஆயினும் அவர் புகார்த்துறைக்கு சென்றதை விட நிறைமுகத்துறைக்கு சென்றது தான் அதிகம். அங்கிருந்து அவர் அழைத்து வரும் நபர்களுடன் ஏதோ ஒரு பரிமொழியில் பேசிக்கொள்வார். அதன் பெயர் மதுரமொழி என்பதும், 'அழியாப்புலம், புரந்தரன், மகா, மாயர்கள், மதுரர்கள்' ஆகிய பெயர்கள் அதிகம் அடிபடும் என்பது மட்டுமே தெரியும். இவர்களில் புரந்தரன் என்பவர் தந்தையின் நெருங்கிய நண்பர். பல முறை அவரைப் பார்த்தும் இருக்கிறான். அவருக்கு முதன்மை வீதியில் ஒரு பெரிய மாளிகை இருந்தும் எப்பொழுது வந்தாலும் அவர்கள் வீட்டில் தான் தங்குவார். அவரது மாளிகையில் வேலையாட்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் தந்தையார் தான் அவரை அங்கு செல்ல விட்டதில்லை. நேற்று முன்பகல் ஒரு பெரிய அம்மாள் அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து அந்த வீட்டில் பற்பல வேலைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று முன்னிரவு வரை தந்தை அங்கிருந்து தானே முன் நின்று வேலையை மேற்பார்வை இட்டார். வழக்கமாக பெரியகருப்பர் தான் இது போன்ற வேலைகளை பார்த்துக் கொள்வார். ஆனால் தந்தை தானே முன்னின்று கவனிப்பது ஆச்சர்யம் அளித்தது. அதுமட்டும் அல்லாமல் அந்த அம்மாளை வரவேற்க தாயாரையும் நிறைமுகத்தீவிற்கு நேற்று அழைத்துச் சென்றது, அவர்கள் பெண் என்பதால் நடந்த ஏற்பாடு என்று நினைத்தவனுக்கு தந்தையின் இந்த அக்கறை அந்த அம்மாள் ஏதோ முக்கியமானவர் என்று அவனுக்கு உணர்த்திற்று.

இன்று காலை வரை அந்த அம்மாள் தான் முக்கியமானவர் என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு இந்த தடபுடல் எல்லாம் வரவிருக்கும் ஒரு இளைஞனுக்கு என்றவுடன் அவனைக் காணும் ஆவலுடன் அவன் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகம் ஆயிற்று. தந்தையின் தனி ரதம் ஒன்றும் சாமானியம் அல்லவே. அதில் அமர்ந்து செல்வதற்கே ஒரு தனித் தகுதி வேண்டுமே. உண்மையில் அவன் அமர்வதே இது தான் முதன்முறை. அவர் கூறியதின் சாராம்சம் இதுதான் "இந்திரசேனன் என்னும் இளைஞன் நிறைமுகத்தீவின் சீன யவனர் படகுத் துறைக்கு வருவான். அவன் புரந்தரனுக்கு இளவல், அவ்வம்மையாரின் புதல்வன். அவன் உரோமாபுரி குருகுல வாசத்திலிருந்து வருகின்றான். அவனை அனைத்து மரியாதைகளுடன் அழைத்து வர வேண்டும்." இவ்வளவு தான். சரி உரோமாபுரி மேற்கில் இருக்கிறது, சீனமோ கிழக்கில் இருக்கிறது, இவன் ஏன் சீனப் படகுத் துறைக்கு வருகிறான். மேலும் அந்த அம்மையார் புரந்தரனின் தாயார் என்பதும் அவனுக்கு புது தகவல். நேற்று முன்னிரவு வரை ஏற்பட்ட களைப்பினால் தான் அவர் தன்னை அனுப்புவதாக முதலில் எண்ணினான். ஆனால் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது, அவனின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அவன் சீனப் படகுத்துறைக்கு வந்த போது கரையில் சிறு கடைகள் திறக்கப்பட்டு கொண்டிருந்தன. வழக்கமாக காணப்படும் பல கடைகள் மறைந்திருந்தன. இந்திரவிழாவின் காரணமாய் கடையை நகருக்குள் திறந்திருக்கலாம். கடைகள் குறைவு எனினும் வணிகர்கள் அதிகமாய் வரும் பொருளுக்காக காத்திருந்தனர். அதிலும் சீனம் தான் கற்பூரம், மூலிகைகள், வாசனையூட்டும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஏற்றுமதியில் முதலிடம். விழாக் காலங்களில் இவற்றுக்கு ஏற்படும் தேவை அதிகம் என்பதால் சீன வணிகர்கள் வரத்தும் சமீப காலங்களில் அதிகரித்து இருந்தது. ஆனால் தேவை அதிகம் என்பதால் இவற்றின் விலை விண்ணை எட்டுவது ஒவ்வொரு விழாவின் போதும் நடப்பதே. சில வணிகர்கள் அதிக இலாபம் ஈட்டும் நோக்குடன் நேரடிக் கொள்முதல் செய்ய இங்கு வந்திருப்பது இயல்பு என்றே பட்டது. அந்தக் கூட்டம் சலசலப்பின்றி இருப்பதில் இருந்து இன்னும் படகு வரவில்லை என்று தெரிந்தது. தந்தை அளித்த சித்திரத்தை எடுத்து நோக்கினான். எந்தச் சித்திரக்காரன் எனத் தெரியவில்லை, இந்த அளவிற்கு தத்ரூபமாக வரையும் சித்திரக்காரன் புகாரில் நிச்சயம் இல்லை. மேலும் இது சித்திரம் என்பதை விட அவனின் நிழல் அல்லது நகல் எனும்படி இருந்தது. தவிரவும் சீனத்திலோ, பாரசீகத்திலோ இத்தகைய காகிதங்கள் நிச்சயம் இல்லை. வளவளப்பாய் இருந்தது. சித்திரத்தை மனதில் இருத்திக் கொண்டான். சலசலப்பு ஏற்பட்டது. படகு வந்து கொண்டிருக்கவேண்டும். நிமிர்ந்து நோக்கினான்.. ஒரு படகு சீனக் கொடியுடன் வந்து கொண்டு இருந்தது. ... (தொடரும்) ....