Saturday, July 4, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் -2

மழை மட்டும் பெய்திருந்தால் கூதிர் என்றே சொல்லக்கூடிய வானிலை. ஆயிரம் கைகள் ஆதவனை மறைத்தாற்போல் மேகங்கள் சூரியனின் பிரகாசத்தைக் குறைத்துக் காட்ட முயற்சித்து தோற்ற வண்ணம் இருந்தன. மணி நான்கை நெருங்கி இருக்கலாம். கண்ணன் என்னை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு அரை மணி நேரம் ஆகிவிட்டு இருந்தது. ஜன நடமாட்டம் குறைவு என்பதை விட இல்லை என்பதே சரி என்று பட்டது. இது வரை மனிதர்களோ வாகனங்களோ அவ்வழி வழியே சென்றதாகவே படவில்லை. நகரத்தில் இது வரை நான் வந்து அறியாத இடமாக இருந்தது. எங்கே இருக்கிறேன் என்பதே தெரியாமல் என்ன செய்ய. குருவிடம் வந்து அழைத்து போக சொல்லலாம் என்று அலைபேசியில் அவனைத் தொடர்பு கொள்ள முனைந்தேன். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் அலைபேசியும் தொடர்பு அற்று போய் கொட்டக் கொட்ட என்னை வெறித்துப் பார்த்துச் சிரித்தது....

பின் புறம் ஏதோ வாகனம் வந்து நின்றது போல் தோன்றிற்று. திரும்பி பார்த்தால் அழகான ஒரு பெண் தன்னுடைய scooty இல் நின்று கொண்டு இருந்தாள். அந்த அழகான ஆச்சரியத்தில் என்னால் ஏதும் பேச இயலவில்லை. அவளே வந்து "lift?" என்று கூறினாள்.இல்லை இல்லை கூவினாள். கவனிக்க.. "வேறு வழி இல்லாததால்" ஆவலுடன் செல்ல சம்மதித்தேன். என்னுடைய பயணப் பையில் சற்று முன் நூலகத்தில் எடுத்த புத்தகங்களும் மேலும் சில பாட புத்தகங்களும் சேர்ந்து பெரிய சுமையாக என் மடியில் அமர்ந்து மாநகராட்சியின் வேகத்தடைகளை நான் பாராட்ட முடியாத வண்ணம் பார்த்துக் கொண்டன.

Lift என்ற ஒரு வார்த்தைக்குப் பிறகு அவள் பேசிய எதுவும் என் காதில் விழவில்லை. ஆனாலும் அவள் ஏதோ பேசிக்கொண்டே வருகிறாள் என்பது மட்டும் தெரிந்தது. என்னுள் ஏதோ சிம்பொனி இசையை இளைய ராஜா உருவாக்கிக் கொண்டு இருந்தார். நான் அதன் லயத்தில் லயித்து இருந்து விட்டேன். திடீரென்று வண்டி நின்றது. அந்த இடம் மேலும் புதியதாய் இருந்தது. குளிர் அதிகமாய் இருந்தது. என் பற்கள் நடுங்கின. நான் வண்டியில் இருந்து இறங்கினேன். அவள் மிகுந்த கோபத்தோடு என்னை நோக்கினாள். கண்ணன் பேசிய அதே அமெரிக்க ஆங்கிலத்தில் "I am asking you.. What do you say.. Do you love me or not?". "pardon !?" இம்முறை நான் ஆச்சர்யத்தில் உறையவில்லை.

நான் அவள் கிறக்கத்தில் இருந்து மீள வரவில்லை என்றாலும், முதல் சந்திப்பிலேயே ஒரு பெண் இப்படிக் கேட்பாள் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியாததால் எனக்கு சிறிது சந்தேகம் தோன்றியது. அதனால் பொய்யா உண்மையா என்று கூட யோசிக்காமல் அவளது அடுத்த கேள்வியை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் "எனக்குக் கல்யாணம் ஆகி விட்டது" என்றேன். "Go to Hell" என்றபடியே என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் என்னை அந்த வனாந்திரத்தில் அம்போ என்று விட்டு விட்டுச் சென்று விட்டாள்.... (தொடரும்)...

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும்

நண்பகல் பன்னிரண்டு மணி இருக்கும் எனத் தோன்றியது. தமிழ் நாடு கோடைக்கே உரித்தான வெண்ணொளியை மைதானமெங்கும் பரப்பி விட்டு அக்கா குருவியின் சங்கீதத்துக்கு செவி சாய்த்துக் கேட்டுக்கொண்டிருக்கிறது. சூரியன் தன் கிழத்தி சாயாவுடன் உலா செல்ல இயலாத மைதானத்தை சுட்டுப் பொசுக்கி விடும் எண்ணத்தில் வெறித்துக் கொண்டிருக்கிறான். எனக்குப் பசியோடு தாகமும் சேர்ந்து கொண்டது. மைதானத்தைச் சுற்றி செல்லும் முன் நூலகத்தை மூடி விடக்கூடும். கல்லூரி முடிவடைந்து விட்டதால் நூலகப் பணியாளர்கள் சிறிதும் தாமதிப்பதில்லை. பதினான்கு நாட்களுக்கு முன் பரிட்சைக்காக எடுத்த புத்தகங்களை ஒப்படைக்க இன்று கடைசி நாள். புத்தகத்தை ஒப்படைத்து விட்டு மெஸ்சுக்கு சென்று சாப்பிட வேண்டும். எனவே மைதானத்தைக் குறுக்காக கடந்து நூலகம் அடைக்கும் முன் புத்தகத்தை ஒப்படைதாக வேண்டிய கட்டாயம். நூலகத்தை நெருங்குகையில், சாலையில் மைதானத்தைச் சுற்றி நூலகத்தை அடைந்து கொண்டிருக்கும் வசந்த்தை நோக்கி கை அசைத்தேன். பின் இருவருமாக நூலகத்தில் நுழைந்த போது....
அங்கு வழக்கமாக காணப்படும் நூலகத்திற்கான அறிகுறிகள் அதிகமாய் தென்பட வில்லை. ஒரே ஒரு நூலகர் மட்டும் இருந்தார். நூல்களை ஒப்புவித்து விட்டு, விடுமுறையில் படிக்க நாவல் பகுதிக்குச் சென்று பெயர் கூட பார்க்காமல் நான்கு நாவல்களை எடுத்து நூலகரிடம் கொடுத்தேன். புத்தகங்களுள் ஒன்றுக்கு அடையாள எண் இல்லை என்று சொல்லி விட்டு, அதைத் தரவுப்பலகையில் ஏற்றம் செய்து விட்டு புது எண் இட்டுக் கொண்டிருந்தார். அந்த இடைவெளியில் நூலகத்தின் வெளியே குருவின் பேச்சுக் குரல் அழைத்தது. குரு என்னை விட ஒரு வயது சிறியவன். நூலகம் மூடும் சமயமாதலால் அவனை உள்ளே விட அனுமதி மறுக்க படுவதாக அவர்கள் உரையாடலில் புரிந்தது. அவனிடம் தான் என்னை பேருந்து நிலையத்தில் கொண்டு விடும் படி கேட்டிருந்தேன்.

"என்னண்ண அடுத்து என்ன?" என்றான். "US Universities கெடைக்காது போல தோணுது. என்னோட மார்க் கம்மி ஆச்சே. எதாவது கனடா universitiesல தான் முயற்சிக்கணும். professor யாரோ ஒரு சீனியர் மெயில் ஐடி கொடுத்தார். கண்ணனாம். கனடால தான் படிக்றாராம். அலும்னில விசாரிச்சு போட்டோ, போன் நம்பர் கூட வாங்கி வச்சுருக்கேன் " இது நான். அதற்குள்...

"I am kannan. I am an alumni of this college. I came to meet professor Rajendran. He told about you. He asked me to help you. I went to your room. Your roommate told me that you are in library. " முதுகைத் தட்டியவர் ஸ்பஷ்டமான அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்லி முடித்தார். வசந்த் சாலையில் நின்று அவன் தான் அனுப்பியதாய் ஜாடை செய்தான். நான் குருவிடம் விடை பெற்று கொண்டு கண்ணனின் காரில் ஏறி அமர்ந்தேன். இதற்குள் என்னைப் பேருந்து நிலையத்தில் விட கண்ணன் தயாராய் இருப்பதாக கூறினார். நான் விடுதிக்கு சென்று பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது வசந்த் மெஸ்சுக்கு சென்று திரும்பி வந்தான். அவனிடமும் விடை பெற்று கார் வளாகத்தைக் கடந்து சாலையை அடைந்தது.

காரின் குளிர்ந்த வெப்ப நிலையும், ஒளி எதிர்க்கும் கண்ணாடிகளும் வெயிலின் தாக்கத்தை சிறிது குறைத்திருந்தன. கண்ணன் தொடர்ந்து அமெரிக்க ஆங்கிலத்திலேயே தன் உருவத்திற்கு சற்றும் பொருந்தாத குரலுடன் பேசிக்கொண்டே வந்தார். ஆனாலும் அவர் பேச்சில் சற்று கவர்ச்சி இருக்கத்தான் செய்தது. அவரது அலைபேசி சிணுங்கியது. எடுத்து எதுவுமே சொல்லாமல் வெகு நேரம் கேட்டு கொண்டு இருந்து விட்டு.. "If you dont mind, I will drop you to the nearest bus stop. I have some urgent work to do. I am sorry" என்றார். ....(தொடரும்)