Saturday, July 4, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் -2

மழை மட்டும் பெய்திருந்தால் கூதிர் என்றே சொல்லக்கூடிய வானிலை. ஆயிரம் கைகள் ஆதவனை மறைத்தாற்போல் மேகங்கள் சூரியனின் பிரகாசத்தைக் குறைத்துக் காட்ட முயற்சித்து தோற்ற வண்ணம் இருந்தன. மணி நான்கை நெருங்கி இருக்கலாம். கண்ணன் என்னை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு அரை மணி நேரம் ஆகிவிட்டு இருந்தது. ஜன நடமாட்டம் குறைவு என்பதை விட இல்லை என்பதே சரி என்று பட்டது. இது வரை மனிதர்களோ வாகனங்களோ அவ்வழி வழியே சென்றதாகவே படவில்லை. நகரத்தில் இது வரை நான் வந்து அறியாத இடமாக இருந்தது. எங்கே இருக்கிறேன் என்பதே தெரியாமல் என்ன செய்ய. குருவிடம் வந்து அழைத்து போக சொல்லலாம் என்று அலைபேசியில் அவனைத் தொடர்பு கொள்ள முனைந்தேன். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் அலைபேசியும் தொடர்பு அற்று போய் கொட்டக் கொட்ட என்னை வெறித்துப் பார்த்துச் சிரித்தது....

பின் புறம் ஏதோ வாகனம் வந்து நின்றது போல் தோன்றிற்று. திரும்பி பார்த்தால் அழகான ஒரு பெண் தன்னுடைய scooty இல் நின்று கொண்டு இருந்தாள். அந்த அழகான ஆச்சரியத்தில் என்னால் ஏதும் பேச இயலவில்லை. அவளே வந்து "lift?" என்று கூறினாள்.இல்லை இல்லை கூவினாள். கவனிக்க.. "வேறு வழி இல்லாததால்" ஆவலுடன் செல்ல சம்மதித்தேன். என்னுடைய பயணப் பையில் சற்று முன் நூலகத்தில் எடுத்த புத்தகங்களும் மேலும் சில பாட புத்தகங்களும் சேர்ந்து பெரிய சுமையாக என் மடியில் அமர்ந்து மாநகராட்சியின் வேகத்தடைகளை நான் பாராட்ட முடியாத வண்ணம் பார்த்துக் கொண்டன.

Lift என்ற ஒரு வார்த்தைக்குப் பிறகு அவள் பேசிய எதுவும் என் காதில் விழவில்லை. ஆனாலும் அவள் ஏதோ பேசிக்கொண்டே வருகிறாள் என்பது மட்டும் தெரிந்தது. என்னுள் ஏதோ சிம்பொனி இசையை இளைய ராஜா உருவாக்கிக் கொண்டு இருந்தார். நான் அதன் லயத்தில் லயித்து இருந்து விட்டேன். திடீரென்று வண்டி நின்றது. அந்த இடம் மேலும் புதியதாய் இருந்தது. குளிர் அதிகமாய் இருந்தது. என் பற்கள் நடுங்கின. நான் வண்டியில் இருந்து இறங்கினேன். அவள் மிகுந்த கோபத்தோடு என்னை நோக்கினாள். கண்ணன் பேசிய அதே அமெரிக்க ஆங்கிலத்தில் "I am asking you.. What do you say.. Do you love me or not?". "pardon !?" இம்முறை நான் ஆச்சர்யத்தில் உறையவில்லை.

நான் அவள் கிறக்கத்தில் இருந்து மீள வரவில்லை என்றாலும், முதல் சந்திப்பிலேயே ஒரு பெண் இப்படிக் கேட்பாள் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியாததால் எனக்கு சிறிது சந்தேகம் தோன்றியது. அதனால் பொய்யா உண்மையா என்று கூட யோசிக்காமல் அவளது அடுத்த கேள்வியை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் "எனக்குக் கல்யாணம் ஆகி விட்டது" என்றேன். "Go to Hell" என்றபடியே என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் என்னை அந்த வனாந்திரத்தில் அம்போ என்று விட்டு விட்டுச் சென்று விட்டாள்.... (தொடரும்)...

No comments: