Wednesday, November 25, 2009

புத்தகம் புகுந்த கதை - 5

விண்கலம் அதன் பாதையில் சீராக சென்று கொண்டு இருந்தது. எனது என்ன ஓட்டம் புத்தகத்தில் கூறிய கதையிலேயே நின்று கொண்டு இருந்தது. மறுபடியும் படித்தேன். அந்த குரங்குகள் நான் பார்த்த குரங்குகள் தானா என்று எனக்கு சந்தேகம் வராமல் இல்லை. ஆனால் சம்பவம் நடந்த காலம் அறுதியிட்டு கூற முடியாததாக இருந்தது. கண்ணன் கால்கரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பின் நடந்த சம்பவம் என்பது புகைப் படத்தில் தெளிவாக தெரிந்தது. எனவே கடந்த இரண்டு வருடங்களுக்குள் நடந்திருக்கலாம். கண்ணன் ஆரம்பத்திலேயே ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருப்பதால் அது முடிவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும்.

கண்ணன் எடுத்துச் சென்றது குரங்குக்குட்டி தான் என்று என் உள்மனம் சொல்லியது. பெய்லீக்கு குறைந்தது ஐந்து வயதாவது இருக்க வேண்டும். எனவே அந்த குட்டி பெய்லீ இல்லவே இல்லை. டைசியா இவன் தாய் என்றால் இரண்டு வருடங்களுக்கு முன் இவர்கள் மனிதர்களால் பிடிக்கப்பட்ட போது பெய்லீ எங்கே இருந்திருப்பான்? அல்லது பிடிபட்டவர்கள் பெய்லீயின் பெற்றோர்கள் இல்லை என்றால் அவர்களுக்கும் பெய்லீயின் உடனிருந்தவர்களுக்கும் என்ன தொடர்பு? ஆய்வுக் கூடத்தில் இருந்த ஆண் குரங்கு இன்னும் உயிருடன் இருக்கிறதா? ஒரு வேளை அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள என்னை கடத்தி இருப்பார்களோ?

நிச்சயம் தேவை இல்லை. ஏனெனில் சித்ராங்கதா இங்கு தானே இருக்கிறாள். எப்படி யோசித்தாலும் சித்ராங்கதா இந்த அனைத்து குரங்குகளுக்கும் வேண்டியவள். கண்ணனுக்கு ஆய்வகக் குரங்குகள் வேண்டியதாய் இருக்கலாம். ஆனால் கண்ணன் பேசியது இந்த பேய்க் குரங்கின் குரலில் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியென்றால் இந்த பேய்க் குரங்குகள் கண்ணனையும் சித்ராங்கதாவையும் பயன்படுத்தி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த விண்கலத்தின் உதவியுடன் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. பேய்க் குரங்குகள் உயிரோடு இல்லாததால் இந்த விண்கலம் இப்பொழுது மற்றொருவரின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருக்க வேண்டும்.

யார் அவர்? இந்த குரங்குகளுக்கு வேண்டியவரா? அவர் கட்டுப்பாட்டில் தான் கண்ணனும் சித்ராங்கதாவும் இப்பொழுது இருக்க வேண்டும். இந்த விண்கலம் இறங்கும் இடத்தில் தான் நான் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளப் போகிறேன். இன்னும் எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. விண்கலம் வேகத்தைக் குறைத்து கீழே இறங்க ஆரம்பித்தது. கீழே மின்விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அதி நவீன நகரம் என்னை வரவேற்க காத்துக் கொண்டிருந்தது. ..( தொடரும் ).....