Monday, January 25, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 3

வெயிலோனின் முதல் கரணம் மண்ணைத் தொட்டதும் அங்கம் எங்கும் வெட்கம் பரவ நிலம் சிவந்தாள் பூமி. ஒவ்வொரு முறைத் தொடும் போதும் முதல் முறைத் தொடும் கன்னி போல் சிவப்பதால் என்னவோ பூமியை ஒரு நாள் கூட மலடியாய் விட்டதில்லை கதிரவன். அவன் தரும் மக்கட் செல்வங்களுக்கு எனவே அவன் வரும் நேரம் வரை தன்னை அலங்கரித்து அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து பிரகாசமாய் சிரிக்கிறாள். அந்த அன்னையின் முலைப்பால் குடித்துப் பெருகியவன் சமுத்திரராஜன், ஆனால் அவன் அந்த முலையைத் தொட்டதும் இல்லை கண்டதும் இல்லை. பால் குடிக்க தெரியாத தன் குழந்தைக்கு குழல் கொண்டு பீய்ச்சிப் புகட்டும் தாய் போல் நதியாய் அவன் வாயில் விழுந்து கொண்டே இருக்கும் படி செய்தாள். பால் வாய் புகும் இடம் தான் இந்த படகுத் துறை. அன்றும் தன் கிழத்தி பாலூட்டும் அழகைக் கண்டு பூரித்து நின்றான் கதிரவன், அதனால் தானோ என்னவோ அந்த நிமிடம் நீண்டு இருந்தது. பிள்ளைக்கு அமுதூட்டும் அன்னையை மாற்றான் கண் கொண்டு காண்பது தவறு என்று எண்ணினார்களோ என்னவோ படகுக்காரர்களோ, பயணிகளோ அல்லது வியாபாரிகளோ தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.

விளைவு, படகு காலியாக நின்றது இந்திரசேனனைத் தவிர. எத்தனை மூடைகள் எல்லாம் எங்கே இருந்தன? "வருக இந்திரசேனரே! கணவனின் கரம் பட்டு சிவந்து நிற்கும் தாயின் மடியில் கால் பதிக்கும் இளம் மகவாகுக. தாய்மை கடனுணர்ந்து தாய் இயநிலை ஏகுவள்". புதியவன் புன்னகை பூத்திருந்தான். "வியன்கொளல் வேண்டா. உதயம் காண் புத்தோர் நிலை கண்டுளம். நிறைமுகம் காண பொன்னி தனித்தாளிலை மாற்சிம்மனும் வந்துளம். மால் சிம்மன். " கால் பதித்தான். செம்மை நீங்கி மஞ்சள் பூசினாள். "கண்டீர்.. இயநிலை ஏகினள்." "வணக்கம்" என்றான். 'இவனுக்குப் புரியுமா?'. "முகமனுக்கு நன்றி. வணங்குதல் இறைவற்கே உரித்தாம். நிமதும் உரித்தாகுக." 'இதற்கும் ஒரு விளக்கம். பேசுவதற்கே ஒத்திகை பார்க்க வேண்டும் போல் உள்ளதே. எதுவும் பேச வேண்டாம் இல்லை இல்லை பேசற்க'..

கடல் நடந்து நிலம் பதித்ததும், "இந்திரசேனரே! சம்புத்தீபத்தின் முறைமைப் படி விருந்து எதிர்கொள்வம். நாவற்தழை அணிசெய் தாழைப்பாகையும், அடம்ப ஆரமும் ஏற்றுக்கொள்வீர்" என்றபடியே ஒரு மாலையும், ஒரு தொப்பியும் அணிவித்தான். அந்நேரம் எதோ ஒரு மேல சத்தம் கேட்டது. "நாவாய் பம்பை, திணையோன் கடலோனுக்கு வணக்கம் கூறி விழா தொடங்குதல் மரபு. தொடரும் வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்." 'இந்திர விழா தொடங்குகிறது போலும்' இதுதான் இந்திர சேனனுக்கு புரிந்தது. அவன் மனம் படகுத் துறையில் உள்ள சந்தையில் லயித்தது. ஒருவன் குழல் ஒன்றில் இருந்து பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டு இருந்தான். வெளிநாட்டினர் அவனைச் சூழ்ந்து இசையில் லயித்திருந்தனர். வாசித்தது பூபாளத்தை ஒத்திருந்தது. "இவன் ஊரன், அது மருத யாழ்" என்றான் மால் சிம்மன்.

அருகில் உப்பு, சிப்பி, மீன், முத்துக்கள் என வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. மீன் உணவுகள் சுடச் சுட பரிமாறப் பட்டன. முரசம் ஒலித்த பொழுது மட்டும் திசை நோக்கி வணங்கி விட்டு அவரவர் வேலையில் ஈடுபட்டனர். சிறிய சந்தை அது. தொலைவில் மீன்கள் காய்ந்து கொண்டு இருந்தன. அருகில் மீன்பிடி படகுகள் நிறுத்தப் பட்டு இருந்தன. மாற்சிம்மனும் ஒவ்வொன்றுக்கும் எதோ பெயர் சொல்லிக்கொண்டே வந்தான். "அவர்கள் பரதவர், அந்தப் படகுகள் திமில் என அறியப்படும். பெரும்பாலான பரதவர் மருவூர்த் துறையில் வசிக்கின்றனர்" என்பது அவன் சொன்னதன் சுருக்கம். "புலரியில் தொடங்கினம். பரதவர் கடலேகும் காலமாம், நெருங்கி கரை சேர்வாம்" என்றான். படகுத் துறைக்குச் சென்றோம். எங்கள் இருவர் தவிர இன்னும் நால்வர் மட்டும் இருந்தனர். ஆறு பேருக்கு ரொம்பவே பெரிய படகு அது. படகின் மேல் தளத்தில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். சூரியனை நோக்கி சென்ற படகு சிறிது நிதானித்து தெற்கு பின் மேற்கு என நகர்ந்தது.. (தொடரும்) ..........