Sunday, December 13, 2009

புத்தகம் புகுந்த கதை - 7

விண்கலம் கிளம்பிற்று அதிவேகமாக. "யார் இந்த புரந்தரன்?" என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே "விண்கலம் விண்வெளி தகவல் மையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு விட்டது. இனி விண்வெளியின் கால நியதிகள் பின்பற்றப் படும்" என்று விண்கலத்தின் ஒரு பிரதான 'வெளி'யில் இருந்து சத்தம் வந்தது. அது மேலும் "முன்பே குறிப்பிட்ட இலக்கான பழம் பெருநகர் பூம்புகார் நோக்கி விண்கலம் பயணித்துக்கொண்டு இருக்கிறது. மாற்றம் ஏதாவது இருப்பின் தெரிவிக்கலாம்."

'புரந்தரன் தான் இலக்கை நிர்ணயித்திருக்க வேண்டும்'. "ம்ம்.. மாற்றம் ஏதும் இல்லை. செல்லும் பாதையின் வரைபடம் எதாவது இருக்கிறதா?" "உள்ளது. உங்களுக்காக இதோ இங்கே. வார்த்தையால் ஆன இடைமுகம் வேண்டாமெனில் நிறுத்திக் கொள்ளவும். தலைநகரத்தில் இருந்து பூம்புகார் செல்லும் பாதையில் மேரு மலையின் முடிவில் வரும் கன்னல் கடலைக் கடந்து ஜம்புநாடு வருகின்றது. ஜம்புநாட்டின் முக்கிய நகரங்களான கபாடபுரம், பாண்டிய நாட்டின் கூடல் மா மதுரை, சித்திரக்கூடம் நகரங்களைக் கடந்து, சோழரின் புகார் நகரை அடைகின்றோம். சித்திரம் வழியான இடைமுகம் வலது புறம் உள்ள திரையில் தொடர்ந்து காண்பிக்கப் படும். புகார் புவியின் கால நியதிப்படி இன்னும் இரண்டு மணி நேர பயணத் தொலைவில் இருக்கின்றது".

ஒலி வடிவான இடைமுகத்தை நிறுத்தி விட்டு, 'என்னிடமே அனைத்து தகவல்களும் பதிவாக்கம் செய்யப் பட்டு தரப் பட்டுள்ளது' என்றால் 'எதில்? இந்த விண்வெளிக் கலத்திலா?' மறுபடியும் ஏதோ திரையில் படம் தோன்ற ஆரம்பித்தது அதை பார்க்க விரும்பாமல் வேறு திசையில் திரும்பிக்கொண்டேன். 'இவன் யார் எனக்கு பெயர் வைக்க? மகாவாம் இந்திரசேனனாம்? என் பெயரை மாற்றியதோடு இல்லாமல் என் அம்மா பெயரையும் 'அதிதி' என்று. ஆம் அவன் என்ன மொழி பேசினான்? எனக்கு தமிழ் ஆங்கிலம் தவிர வேறு மொழி எதுவும் தெரியாதே? எப்படி அதை புரிந்து கொண்டேன்? சித்ராங்கதா, டைசியா, பெய்லீ இவர்களுக்கும் கண்ணனுக்கும் என்ன சம்பந்தம்? கண்ணன் உயிரோடு இருக்கிறாரா? என்னை அழைத்து வந்தது கண்ணன் தானா? இந்தப் புத்தகத்தை ஒரு நொடியில் எப்படி படித்தார் புரந்தரன்?' புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திறந்தேன். எழுத்துக்கள் வரி வரியாக தோன்ற ஆரம்பித்தன.

"நீங்கள் செல்ல வேண்டிய நகர் பூம்புகார். இந்திர விழாவின் முந்தைய தினத்தில் அங்கு போய் சேருவீர்கள். பதினேழாம் நாள் புரந்தரன் உங்களை சந்திப்பார். நீங்கள் அங்கு இருபத்து எட்டு நாட்கள் தங்கி இருப்பீர்கள். உங்களுக்கு மறு சுழற்சி நாள் வரை எந்த பிரச்சனையும் வராது. அதன் பின் உங்களுக்கு பெய்லீயால் ஏதேனும் ஆபத்து நிகழலாம். அதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்க்கான பயிற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப் படும். மறுசுழற்சி நாள் வரையில் ஆன சம்பவங்கள் அனைத்தும் கணிக்கப் பட்டு வைக்கப் பட்டு உள்ளன. எனவே கடந்த கால, நிகழ்கால மற்றும் மறுசுழற்சி நாள் வரையிலான எதிர்கால நிகழ்வுகளும் உங்களுக்கு மறு சுழற்சி நாளுக்குள் தெரிவிக்கப் படும். ஆனால் இந்த மறு சுழற்சி நாள் வெகு தொலைவில் இல்லை..
அது 2012 டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு ... (தொடரும்)...