Thursday, December 31, 2009

புத்தகம் புகுந்த கதை - 10

'வெளி'யிலிருந்து "விண்கலம் புகார் நகரத்துக்குள் நுழைந்து விட்டது. ஆனால் தரை இறங்குவதற்கு அனுமதி கிடைக்க இன்னும் சில நேரம் பிடிக்கும். அதுவரை புகார் நகரைச் சுற்றிப் பார்க்க விரும்பினால் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும். விருப்பமா?".. "நன்றி.. கண்டிப்பாக..யப்.. பூ..! "

ஒரு குதிரையின் மீது அமர்ந்து கொண்டு இருந்தேன். தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட சாலை அது. சாலைகளில் தென்னை மாவிலை தோரணங்கள் கட்டப் பட்டு இருந்தன. கமகமவென்று சந்தன வாசம் வீசிக் கொண்டு இருந்தது. ஊரின் ஒரு மூலையில் இருந்து மேல தாள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டு இருந்தன. மேலே என்ன? எதோ ஒரு பறக்கும் தட்டு? வளையல் ஓசையைத் தொடர்ந்து பெண்களின் சிரிப்பொலி கேட்டது. தூரத்தில் பெண்கள் சிலர் வந்து கொண்டு இருந்தனர். நடுவில் ஒரு இளம்பெண் மிகையான அலங்காரங்களுடன் வந்து கொண்டு இருந்தாள். ஆபரணங்கள் அதிகமாய் மறைத்த அங்கம், குழல் மறைத்த பாதிமுகம், கருப்பு என்று சொல்லிவிட முடியாத சற்றே வெளுத்த நிறம். தொலைவில் வருவதால் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. குதிரையை விரட்டி அவர்களை நெருங்கினேன். மங்களகரமான முகம், அழகானதா? சொல்ல முடியவில்லை.. ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வதனம்.. ஆனால் யாரையும் கண்டு கொள்ளாத பாவம். திமிரா? இருக்காது..ஆனால் அந்த பாவம் அவளை அழகியாக்கியிருந்தது. "எக்ஸ்..சாரி.."

குதிரை பின்பக்கமாக நகர ஆரம்பித்தது. வேகமாக பின்புறம் ஓடியது. சாலை முன்புறம் நகர்ந்தது. குதிரை மறைந்தது. நின்று கொண்டு இருந்தேன். ஆனாலும் சாலை முன்புறம் அதிக வேகத்தில் நகர்ந்து கொண்டு தான் இருந்தது. நகரம் மறைய ஆரம்பித்தது. மறுபடியும் விண்கலத்தில்.. "ஸா..மன்னிக்கவும்.. தமிழில் பேச வேண்டும் என்பதை மறந்து விட்டேன்.." "பரவாயில்லை.. உங்களைத் திரும்ப அழைத்தது அதற்காக அல்ல.. தரை இறங்க அனுமதி கிடைத்து விட்டது." 'இயந்திரம் என்பது சரியாகத்தான் இருக்கிறது' நினைத்தேன். "மன்னிக்கவும். பல வாகனங்கள் வரிசையில் நிற்பதால் இப்பொழுது விட்டால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி வரும். உங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று வாங்கிய கால இடைவெளிக்குள் சேர்ப்பிக்க வேண்டிய கடமை வாகனங்களுக்கு இருக்கிறது."

தரை இறங்கிய பின் வெளியே.. "பின்னால் திரும்பி இடக்கையை மேல்நோக்கி கீழேயும், வலக்கையை கீழ்நோக்கி மேலேயும் வைத்து.. இரு கைகளையும் அமுக்குவது போல் இணையுங்கள்." செய்தேன். விண்கலம் மறைந்தது. திரும்பினேன். "கதவைத் திறந்து வெளியே சென்று, காத்திருக்கவும்.." என்று மீண்டும் அதே அசரீரி.

காத்திருக்கும் அறையில்.. எக்கச் சக்கமான நபர்கள் காத்து இருந்தார்கள். "இந்திரவிழா அல்லவா? அதான் இத்தனை கூட்டம்" அருகில் இருந்தவர் தமிழில். "விழாக் காலங்களுக்கு இன்னும் சில படகுகளை சேர்த்திருக்கலாம். இந்த அரசாங்கம் என்று தான் ஒழுங்காக செயல்படுமோ. யாரோ முக்கிய நபர் வருகிறார் என்று பல வின்கலன்களைக் காக்க வைத்து விட்டார்கள்." "இந்திரசேனன் அழியாப்புலத்திலிருந்து".. அழைத்தார்கள். "எங்கிருந்து வருகிறீர்கள்" எனக் கேட்டார் அவர். 'உரோமாபுரி என்றா சொல்வது.. ' யோசித்துக் கொண்டு இருக்கும் போதே.. ஒரு பெண் வந்து "இந்திரசேனரே.. உங்களைத் தான் அழைக்கிறார்கள்".. "தலைநகரத்தில் இருந்து தான் வருகிறீர்களா?" என்றார் அவர். "ம்" தலையை எல்லா திசையிலும் அசைத்தேன்.

அந்த பெண் அழைத்து சென்று "இங்கே கை வையுங்கள்" என்றாள். ஒரு சிறிய ஒளியூட்டப்பட்ட பலகை அது. வைத்தேன். இந்திரசேனன் வெகு வேகமாக என்னில் இருந்து தூக்கி எறியப்பட்டான். நான் காணாமல் போய் இருந்தேன்.. இல்லை இருந்தது. ... (அடுத்த பாகத்தில் தொடரும்)...

Monday, December 28, 2009

புத்தகம் புகுந்த கதை - 9

மாயர்களின் சோதிடக் கணிப்புகள் உங்களை "மஹா" என்றே குறிப்பிடுகின்றன. அது ஏதோ ஒரு சங்கேதப் பெயர் அல்லது அடைமொழியாக இருக்கலாம். உங்களைப் பற்றிய ரகசியங்கள் எங்களுக்கு புரிந்து விடக் கூடாது என்பதர்க்கென்றே உருவாக்கப் பட்ட பெயர் என்று தெரிகின்றது. இந்தப் பெயர் நம்மவர்களில் அனைவருக்கும் பரிச்சியமான பெயர் என்பதாலும், நீங்கள் வரும் சமயம் இது என்று பலரும் எதிர்பார்ப்பதாலும் உங்களின் பாதுகாப்பு கருதி உங்களின் பெயர் "இந்திரசேனன்" என்று மாற்றப்பட்டது. புகாரின் பெருவாரியான மக்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் "நீங்கள் தான் மஹா" என்று அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள். புகாரில் நீங்கள் பெருவணிகன் புரந்தரனின் தம்பி என்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இது நாள் வரை உரோமாபுரியில் குருகுல வாசத்தில் இருந்ததாக சொல்லிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பூம்புகாரின் வரலாற்றை தெரிந்து கொள்வது மிக அவசியம்.

சினரம் என்னும் நாட்டை செம்பியன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். வள்ளன்மையில் தன்னிகர் இல்லாதவன் என்னும் பெயர் கொண்டு வாழ்ந்து வந்தான். வேதங்களில் கூறப்பட்டுள்ள நூறு விதமான யாகங்களும் செய்து இந்திரனுக்கு நிகரானவனானான். ஒரு நாள் அவன் அரசவையில் இருக்கும் பொது ஒரு புறாவானது பருந்திடம் இருந்து அடைக்கலம் தேடி அவன் மடி புகுந்தது. அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்றி, பருந்தின் பசிக்கு தன் தொடைக்கறியை உணவாகக் கொடுத்தான். அவன் செயலைப் பார்த்த இந்திரன் அவன் நாடு மழை வளனுடன் செல்வச் செழிப்பும் பெற்று விளங்குமாறு வரமருளிச் சென்றான். இந்திரனின் வரத்தால் நாடு எல்லா வளங்களுடனும் செழிப்புற இருந்தது. எனவே இந்திரனுக்கு தன் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் இந்திரனுக்கு விழா எடுக்க விரும்பினான். மேலும் வளங்களின் அரசனான இந்திரன் தன் நாட்டிலேயே இருந்தால் தன் நாட்டுக்கு எவ்வித குறையும் வராது என்று நம்பிய செம்பியன் கடற்கரையோரம் இந்திரனின் இருப்பிடமான அமராவதிக்கு இணையான நகர் ஒன்றை நிர்மாணித்தான். அதை அமராவதி என்றே பெயரிட்டு அழைத்தான். மண்ணகத்து வான்பதி என்று பின்னாளில் அழைக்கப் பட்ட அந்த மூதூர் தான் பூம்புகார்.

அதன் பின் செம்பியன் வழி வந்த சோழ மன்னர்கள் அந்நகரைப் போற்றிப் பாதுகாத்து மேலும் எழிலுறும் வண்ணம் வானுயர் மாடங்கள் எழுப்பினர். கரிகால் சோழனின் காலத்தில் தலைநகர் ஆன பின்னும் கூட இந்திரா விழா தொடர்ந்து எடுப்பிக்கப் பட்டு வந்தது. பின்னர் "வாகைச்சென்னி" என்னும் மன்னன் காலத்தில் தொடர்ச்சியாக இருபது வருடங்கள் இந்திரா விழா எடுக்காத காரணத்தால் இந்திரனால் அழிக்கப்பட்டதாக கருதப்பட்டது. நாம் செல்ல விருக்கும் புகார் அழிக்கப்பட்ட பூம்புகார் நகரத்தைப் போன்றே வடிவமைக்கப் பட்டது. மேலும் நகரின் பழமையைக் காக்கும் பொருட்டு நவீனத்தின் அடிச் சுவடே தெரியாத வண்ணம் தலைநகரத்திற்கு வெகு தொலைவில் அமைக்கப் பட்டு உள்ளது. பழைய புகார் நகரத்தின் அனைத்து அம்சங்களுடனும் அமைக்கப் பட்டுள்ளது. இது குறித்தும் நீங்கள் அந்நகர மக்களிடம் எதுவும் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள்.

உங்கள் உடை மற்றும் பேசும் மொழி ஆகியவை இந்த நகருக்கு ஏற்றார்போல் நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் புகார் நகரத்தில் நுழையும் போது உங்களுள் ஒரு மாற்றம் ஏற்படும். வெளி ஆட்கள் நகரில் நுழையும் போது ஏற்படும் இயல்பானதொரு மாற்றம் எனவே பயம் கொள்ளத் தேவையில்லை. இது இந்த நகரத்தின் பாதுகாப்புக்காக "மாயன்" பிரகலாதனால் ஏற்படுத்தப் பட்டது. அப்பொழுது.. (தொடரும்)....

Sunday, December 20, 2009

புத்தகம் புகுந்த கதை - 8

டைசியா மற்றும் அவள் துணையும் எதிரி நாட்டைச் சார்ந்தவர்கள். இவர்கள் கீழ்த் திசையில் உள்ள மாய இனத்தைச் சார்ந்தவர்கள், பெரும்பாலும் சிங்கம் அல்லது குரங்குகளின் உருவில் அறியப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் மனிதர்களின் கலப்பால் மனித உருவத்தையும் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பேசும் மாய மொழி இன்றளவும் சங்கேதக் குறி நிபுணர்களால் விடுவிக்க முடியாத ஒரு அதிசய மொழி ஆகும். விஞ்ஞான தொழில் நுட்பத்தில் கை தேர்ந்தவர்கள். நம்மை விடவும் புத்திசாலிகள். புத்திசாலிகளுக்கே உரித்தான வித்தியாசக் குணங்களால் அவர்களால் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் அதிலும் முக்கியமாக ஒற்றுமையுடனும் வாழ முடியவில்லை. தங்கள் திறமைக்கு ஏற்ற வாழ்க்கை தங்களுக்கு அமையவில்லை என்ற குறை உடையவர்கள். இதன் பொருட்டே நம்மீது பொறாமை உணர்வு கொண்டு பகைமை பாராட்டி வருகிறார்கள். ஆயினும் மாய இனத்தவர்களிடையே ஒரு சில நல்லவர்களும் இருந்தார்கள். அவர்களின் உதவியால் மட்டுமே நாம் இந்த அளவு வளர்ச்சி காண முடிந்தது. இதற்கு கைமாறாக நாம் அவர்களுக்குக் கொடுத்தது மாயர்களுக்கு இன்றளவும் கிடைக்காத நிம்மதி.

ஆய்வகத்தில் இருந்த இரு குரங்குகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு இது வரை கண்டு பிடிக்கப் படவில்லை. மேலும் கண்ணன், சித்ராங்கதா மற்றும் அந்த ஆய்வகக் குரங்குகளும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் இறந்து போனதற்கான சாட்சியங்கள் நமக்கு பல வருடங்களாகவே வந்த வண்ணம் உள்ளன. நம்முடைய அடுத்த அரசன் இது வரை யார் என்றே தெரியாத நிலையில் அவரைக் கொல்வதர்க்கென்றே மாயர்களால் உருவாக்கம் செய்யப்பட்டவன் பெய்லீ. அவனே மாயர்களின் கணிப்புகள்(ஜோதிடங்கள்) பலவற்றிலும் இடம் பெறுகின்றான். நமக்கு கிடைத்த மிகச் சில குறிப்புகளை மிகுந்த முயற்சியுடன் ஆராய்ந்ததில் உங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைத்தன.

அனால் உங்களைக் கண்டறிவதில் பல சிரமங்கள் இருந்தன. மாயர்களின் குறிப்பு படி கண்ணன் அல்லது சித்ராங்கதா அறிமுகமான மூன்று நாட்களில் நீங்கள் பெய்லீயை சந்தித்து விட்டு இங்கு வந்து சேர்வீர்கள். ஆனால் இது வரை நீங்கள் இருவரில் யாரையும் நேரில் சந்திக்காததால் நீங்கள் இந்த சமயத்தில் வருவீர்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கண்ணனின் புகைப்படம் மூலம் ஏற்பட்ட அறிமுகமே போதுமானது என்ற கோணத்தில் நாங்கள் எண்ணவில்லை. நாங்கள் இன்னும் குறைந்தது ஒரு மாத காலம் ஆகும் என்றே நினைத்திருந்தோம்.

மாயர்களின் மேதாவித்தனம் மரபு சார்ந்தது. மிகவும் புத்திசாலிகளான மாயர்களே மன்னர் ஆகின்றனர். குறிப்புகளின் படி பெய்லீ மாயர்களின் மன்னர் வழி வந்தவன். அவன் தந்தை மன்னன் என்று அறியப்படவில்லை என்றாலும் அவன் மறுசுழற்சி நாளுக்குள் மன்னன் ஆவான் என்று நம் கணிப்புகள் உரைக்கின்றன. ஆயினும் மறுசுழற்சி நாள் வரை அவன் எந்த படையெடுப்பும் மேற்கொள்வதாக நம்மவர்களின் கணிப்பில் இல்லை. மாயர்களுக்கு மறுசுழற்சி நாள் என்ற ஒன்று கிடையாது என்பதால் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அதற்கப்பாலும் கணிக்கப்பட்டு உள்ளன. ஆனால் நம் கணிப்புகள் யாவும் அந்த நாளுடன் முடிவுறுகின்றன. (தொடரும்)...

Sunday, December 13, 2009

புத்தகம் புகுந்த கதை - 7

விண்கலம் கிளம்பிற்று அதிவேகமாக. "யார் இந்த புரந்தரன்?" என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே "விண்கலம் விண்வெளி தகவல் மையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு விட்டது. இனி விண்வெளியின் கால நியதிகள் பின்பற்றப் படும்" என்று விண்கலத்தின் ஒரு பிரதான 'வெளி'யில் இருந்து சத்தம் வந்தது. அது மேலும் "முன்பே குறிப்பிட்ட இலக்கான பழம் பெருநகர் பூம்புகார் நோக்கி விண்கலம் பயணித்துக்கொண்டு இருக்கிறது. மாற்றம் ஏதாவது இருப்பின் தெரிவிக்கலாம்."

'புரந்தரன் தான் இலக்கை நிர்ணயித்திருக்க வேண்டும்'. "ம்ம்.. மாற்றம் ஏதும் இல்லை. செல்லும் பாதையின் வரைபடம் எதாவது இருக்கிறதா?" "உள்ளது. உங்களுக்காக இதோ இங்கே. வார்த்தையால் ஆன இடைமுகம் வேண்டாமெனில் நிறுத்திக் கொள்ளவும். தலைநகரத்தில் இருந்து பூம்புகார் செல்லும் பாதையில் மேரு மலையின் முடிவில் வரும் கன்னல் கடலைக் கடந்து ஜம்புநாடு வருகின்றது. ஜம்புநாட்டின் முக்கிய நகரங்களான கபாடபுரம், பாண்டிய நாட்டின் கூடல் மா மதுரை, சித்திரக்கூடம் நகரங்களைக் கடந்து, சோழரின் புகார் நகரை அடைகின்றோம். சித்திரம் வழியான இடைமுகம் வலது புறம் உள்ள திரையில் தொடர்ந்து காண்பிக்கப் படும். புகார் புவியின் கால நியதிப்படி இன்னும் இரண்டு மணி நேர பயணத் தொலைவில் இருக்கின்றது".

ஒலி வடிவான இடைமுகத்தை நிறுத்தி விட்டு, 'என்னிடமே அனைத்து தகவல்களும் பதிவாக்கம் செய்யப் பட்டு தரப் பட்டுள்ளது' என்றால் 'எதில்? இந்த விண்வெளிக் கலத்திலா?' மறுபடியும் ஏதோ திரையில் படம் தோன்ற ஆரம்பித்தது அதை பார்க்க விரும்பாமல் வேறு திசையில் திரும்பிக்கொண்டேன். 'இவன் யார் எனக்கு பெயர் வைக்க? மகாவாம் இந்திரசேனனாம்? என் பெயரை மாற்றியதோடு இல்லாமல் என் அம்மா பெயரையும் 'அதிதி' என்று. ஆம் அவன் என்ன மொழி பேசினான்? எனக்கு தமிழ் ஆங்கிலம் தவிர வேறு மொழி எதுவும் தெரியாதே? எப்படி அதை புரிந்து கொண்டேன்? சித்ராங்கதா, டைசியா, பெய்லீ இவர்களுக்கும் கண்ணனுக்கும் என்ன சம்பந்தம்? கண்ணன் உயிரோடு இருக்கிறாரா? என்னை அழைத்து வந்தது கண்ணன் தானா? இந்தப் புத்தகத்தை ஒரு நொடியில் எப்படி படித்தார் புரந்தரன்?' புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திறந்தேன். எழுத்துக்கள் வரி வரியாக தோன்ற ஆரம்பித்தன.

"நீங்கள் செல்ல வேண்டிய நகர் பூம்புகார். இந்திர விழாவின் முந்தைய தினத்தில் அங்கு போய் சேருவீர்கள். பதினேழாம் நாள் புரந்தரன் உங்களை சந்திப்பார். நீங்கள் அங்கு இருபத்து எட்டு நாட்கள் தங்கி இருப்பீர்கள். உங்களுக்கு மறு சுழற்சி நாள் வரை எந்த பிரச்சனையும் வராது. அதன் பின் உங்களுக்கு பெய்லீயால் ஏதேனும் ஆபத்து நிகழலாம். அதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்க்கான பயிற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப் படும். மறுசுழற்சி நாள் வரையில் ஆன சம்பவங்கள் அனைத்தும் கணிக்கப் பட்டு வைக்கப் பட்டு உள்ளன. எனவே கடந்த கால, நிகழ்கால மற்றும் மறுசுழற்சி நாள் வரையிலான எதிர்கால நிகழ்வுகளும் உங்களுக்கு மறு சுழற்சி நாளுக்குள் தெரிவிக்கப் படும். ஆனால் இந்த மறு சுழற்சி நாள் வெகு தொலைவில் இல்லை..
அது 2012 டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு ... (தொடரும்)...

Thursday, December 3, 2009

புத்தகம் புகுந்த கதை - 6

மறுபடியும் வேறு ஏதோ ஒரு குளத்தில் அதே கல் விழுந்தது. கூண்டு திறந்தது. இந்த முறை குளத்தின் நீர் சிவப்பாக இல்லை. என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளும் முன்னரே நான்கைந்து நபர்கள் உள்ளே நுழைந்தனர். "வணக்கம். உங்கள் முன் நிற்பவன் இந்நகரின் தலைவன், பெயர் புரந்தரன். உங்களுக்கு தமையன் முறையினன்" என்று அறிமுகம் செய்து கொண்டான். "தமயன்? அண்ணனா? நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க?" முடிப்பதற்குள் தடுத்து "மஹா.. உங்களுக்கு சந்தேகம் இருப்பின் இவரைச் சந்தியுங்கள். உங்களை இது நாள் வரை பராமரித்து வந்தவர், அதிதி. உங்கள் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்" என்று ஒரு படத்தைக் காட்டினார். "புரந்தரன்.. எனக்கு விளக்கமா சொல்லுங்க. இது என்ன இடம்?"

"எதையும் பேசுவதற்கு இது சமயமோ இடமோ அல்ல. உங்களுக்கு போக போக எல்லாம் தெரிய வரும்". மற்றவர்கள் பக்கம் திரும்பி "சித்ராங்கதாவின் உடல் கிடைத்ததா? வேறு ஏதேனும் தடயங்கள்?".

சித்ராங்கதாவின் உடல் தூக்கி வரப்பட்டது. புரந்தரன் அவள் கோட் பையில் இருந்து சில பொருட்களை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு "சரி வெளியில் நில்லுங்கள். உடலை தகுந்த மரியாதையுடன் அப்புறப்படுத்தி விடுங்கள். முன்னர் கூறியவை அனைத்தும் இன்னும் சிறிது நேரத்தில் தயாராக இருக்க வேண்டும்" என்று அவர்களுக்கு கட்டளையிட்டான் வேறு ஏதோ மொழியில் .

"மஹா உங்களுக்கு இந்த மொழி நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று கூர்மையாக பார்த்து விட்டு பின் அதே மொழியில் தொடர்ந்தார் "உங்கள் நிலை புரிகின்றது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை விட உங்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்வது அவசியம். சொல்லுங்கள் கண்ணனின் வாகனத்தில் ஏறியதில் இருந்து விண்கலம் இங்கு வந்து சேரும் வரை நடந்த அனைத்தையும் சொல்லுங்கள்".

கதையை ஓரிரு நொடிகளில் (!?) சொல்லி முடித்ததும் "டைசியா மற்றும் பெய்லீ. எல்லாம் தெரிந்திருக்கிறார்கள். பொருத்தமான பெயர். அவன் பெயர் குறிப்பிடப் படவில்லை. அந்தப் புத்தகம் இது தானே?" என்று அந்த புத்தகத்தை கையில் எடுத்தார். அவர் கழுத்தில் உள்ள அட்டிகையின் நடுவில் உள்ள பச்சைக்கல் மினுங்கியது. அந்த புத்தகத்தை திறக்காமலே திருப்பிக் கொடுத்துவிட்டு "எல்லாம் தெரிந்த கதை. மன்னிக்கவும் உங்கள் உடை நேரமின்மை காரணமாக உங்கள் அனுமதியின்றி மாற்றப் பட்டு இருக்கின்றது . சீக்கிரம் வாருங்கள் உங்கள் விண்கலம் புறப்படத் தயாராய் இருக்கிறது."

இந்த தீவின் அருகிலேயே இருந்த மற்றொரு தீவில் "இந்திரசேனரே.. இந்த வாகனம் உங்களுக்காகவே வடிவமைக்கப் பட்டது, உங்களுடையது . உங்களுக்கு தெரிய வேண்டியவை அனைத்தும் பதிவாக்கம் செய்யப்பட்டு உங்களிடமே கொடுக்கப் பட்டுள்ளது. தேவைப்படும் போது நீங்களே தேடித் தெளிந்து கொள்ளலாம். மீண்டும் புகாரில் இந்திரா விழாவின் பதினேழாம் நாள் சந்திப்போம் . நன்றி" புரந்தரன் விடை பெற்றார். வாகனம் கிளம்ப அனுமதி கோரியது. "சரி கிளம்பலாம்".... (தொடரும்)

Wednesday, November 25, 2009

புத்தகம் புகுந்த கதை - 5

விண்கலம் அதன் பாதையில் சீராக சென்று கொண்டு இருந்தது. எனது என்ன ஓட்டம் புத்தகத்தில் கூறிய கதையிலேயே நின்று கொண்டு இருந்தது. மறுபடியும் படித்தேன். அந்த குரங்குகள் நான் பார்த்த குரங்குகள் தானா என்று எனக்கு சந்தேகம் வராமல் இல்லை. ஆனால் சம்பவம் நடந்த காலம் அறுதியிட்டு கூற முடியாததாக இருந்தது. கண்ணன் கால்கரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பின் நடந்த சம்பவம் என்பது புகைப் படத்தில் தெளிவாக தெரிந்தது. எனவே கடந்த இரண்டு வருடங்களுக்குள் நடந்திருக்கலாம். கண்ணன் ஆரம்பத்திலேயே ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருப்பதால் அது முடிவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும்.

கண்ணன் எடுத்துச் சென்றது குரங்குக்குட்டி தான் என்று என் உள்மனம் சொல்லியது. பெய்லீக்கு குறைந்தது ஐந்து வயதாவது இருக்க வேண்டும். எனவே அந்த குட்டி பெய்லீ இல்லவே இல்லை. டைசியா இவன் தாய் என்றால் இரண்டு வருடங்களுக்கு முன் இவர்கள் மனிதர்களால் பிடிக்கப்பட்ட போது பெய்லீ எங்கே இருந்திருப்பான்? அல்லது பிடிபட்டவர்கள் பெய்லீயின் பெற்றோர்கள் இல்லை என்றால் அவர்களுக்கும் பெய்லீயின் உடனிருந்தவர்களுக்கும் என்ன தொடர்பு? ஆய்வுக் கூடத்தில் இருந்த ஆண் குரங்கு இன்னும் உயிருடன் இருக்கிறதா? ஒரு வேளை அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள என்னை கடத்தி இருப்பார்களோ?

நிச்சயம் தேவை இல்லை. ஏனெனில் சித்ராங்கதா இங்கு தானே இருக்கிறாள். எப்படி யோசித்தாலும் சித்ராங்கதா இந்த அனைத்து குரங்குகளுக்கும் வேண்டியவள். கண்ணனுக்கு ஆய்வகக் குரங்குகள் வேண்டியதாய் இருக்கலாம். ஆனால் கண்ணன் பேசியது இந்த பேய்க் குரங்கின் குரலில் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியென்றால் இந்த பேய்க் குரங்குகள் கண்ணனையும் சித்ராங்கதாவையும் பயன்படுத்தி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த விண்கலத்தின் உதவியுடன் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. பேய்க் குரங்குகள் உயிரோடு இல்லாததால் இந்த விண்கலம் இப்பொழுது மற்றொருவரின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருக்க வேண்டும்.

யார் அவர்? இந்த குரங்குகளுக்கு வேண்டியவரா? அவர் கட்டுப்பாட்டில் தான் கண்ணனும் சித்ராங்கதாவும் இப்பொழுது இருக்க வேண்டும். இந்த விண்கலம் இறங்கும் இடத்தில் தான் நான் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளப் போகிறேன். இன்னும் எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. விண்கலம் வேகத்தைக் குறைத்து கீழே இறங்க ஆரம்பித்தது. கீழே மின்விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அதி நவீன நகரம் என்னை வரவேற்க காத்துக் கொண்டிருந்தது. ..( தொடரும் ).....

Tuesday, November 24, 2009

புத்தகம் புகுந்த கதை - 4

ஆண் குரங்கின் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் தினமும் குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக அதன் உடல் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகிக் கொண்டே வந்தது. ஃப்ளு காய்ச்சலுக்கான பாலும் வேலை செய்யவில்லை. பெண் குரங்கின் உடலில் அது கர்ப்பமாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரிய வில்லை. பிரசவம் நேர்ந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் காணப் படவில்லை. எனவே கண்ணன் எடுத்துச் சென்றது குரங்கு குட்டி தான் என்று உறுதியாக நம்ப முடியவில்லை. ஆனால் இக்குரங்குகளை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே அனைத்தும் மர்மமாகவே இருப்பதால் எதையும் தெளிவாக விளக்க முடியவில்லை.

இதற்கு மேல் அந்த புத்தகத்தில் அவர்களைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை. பெய்லி அவன் நின்று கொண்டிருந்த இடத்தில் இல்லை. ஓடையின் மறு கரை இன்னும் இருளாகவே இருந்தது. இவ்வளவு நேரமாகியும் பசி எடுக்காதது ஆச்சர்யமாக இருந்தது. இந்த தீவில் இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமா என்று தெரிந்து கொள்ள தீவைச் சுற்றி வட்டமிட்டேன். எல்லா இடத்திலும் சிறு சிறு செடி கொடிகள் அடர்ந்து இருந்தன. தப்பித்து செல்ல எதாவது கிடைக்குமா என்று அலசி ஆராய்ந்தேன். ஒன்றும் புலப்படவில்லை.

சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் நெருங்கியது. திடீரென்று நிலம் அதிரத் தொடங்கியது. ஓடையில் இருந்தது பெரும் இரைச்சலுடன் கண்ணாடி தகடுகள் மேலெழும்பின. கண்ணாடி எழும்பிய வேகத்தில் நீர் அதிக வேகத்துடன் வெகு தூரத்திற்கு சிதறி விழுந்தது. திடீரென்று பிரகாசம் அதிகம் ஆகியது. பயத்தில் நான் பின் வாங்கினேன். இரைச்சல் குறைந்தது. ஆனால் இது என்ன சத்தம். சித்ராங்கதாவின் வண்டி ஹாரன் சத்தம். திரும்பினேன். சித்ராங்கதா இல்லை. அவள் வண்டி மட்டும் நின்று கொண்டு இருந்தது. வேகமாக வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். வண்டி நகர ஆரம்பித்தது. வேகமாக நகர்ந்து ஓடை அருகே சென்ற போது வண்டி கண்ணாடியில் முட்டி நின்று போனது.

கண்ணாடிக்கூண்டுக்குள் அடைக்கப் பட்டுவிட்டேன். யாரோ என்னை சிறை எடுக்கிறார்கள் என்று புரிந்தது. கூண்டுக்குள் மின் விளக்கு வெளிச்சம் பரவியது. என்னைச் சுற்றி இருந்த சூழல் மாறியது. சில நொடிகளில் ஏதோ ஒரு நவீன ஆய்வுக் கூடத்தின் உள்ளே இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றியது. நான் அமர்ந்து இருந்த வண்டி உறுமத் தொடங்கியது. அக்சிலடேரை முருக்கியதும்.. அதி வேகத்துடன் கூண்டு மேல் நோக்கி சென்றது. பின் சீரான வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. கீழே ஒரு குளம் பெரிய கல் ஒன்று விழுந்தது போல் ததும்பிக் கொண்டு இருந்தது. வேறு எதுவும் இருளில் தெரியவில்லை. எங்கு செல்கிறோம் என்று தெரியாமலே எனது மூன்றாவது பயணம் ஆரம்பமாகியது. ... (தொடரும்)...

Sunday, November 22, 2009

புத்தகம் புகுந்த கதை - 3

ஆராய்ச்சிக் கூடத்தின் மையப் பகுதி இருபத்து நான்கு மணி நேரமும் காமெராவினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. காமெராவின் கேசட் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றப்படும். மே மாதம் 22 ஆம் தேதி காலை 4 மணிக்கு புதிய கேசட் மாற்றப்பட்டு ஓடிக் கொண்டு இருந்தது. 4:10 க்கு ஏதோ ஒரு மோட்டார் வாகனத்தின் சத்தத்தை தொடர்ந்து சித்ராங்கதா ஹரி என்னும் கால்கரி பல்கலைக்கழக மாணவி உள்ளே நுழைகிறார். அவரைத் தொடர்ந்து அதே பல்கலைக் கழக மாணவர் கண்ணன் வாசுதேவனும் உள்ளே நுழைகிறார். அந்தப் பெண் நேராக அந்தக் குரங்குகள் அடைக்கப் பட்டிருக்கும் கூண்டை நோக்கி செல்கிறாள். அதன்பின் கேசட்டில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக நடந்தவை எதுவும் பதிவாகவில்லை.

"ஒரே இருட்டு. மூன்றாக மடிக்கப்பட்டு இருந்த உடல் மெல்ல விரியத் தொடங்குகிறது. மூச்சு அடைக்கின்றது. என்னை மூழ்கடித்திருந்த நீரின் மட்டம் படிப் படியாக குறையத் தொடங்கியது. என் உடல் உந்தி வெளிய தள்ளப் பட்டது. எனக்கு அழ வேண்டும் என்று தோன்றியது. நான் அழத் தொடங்கினேன்."

சரியாக ஆறு மணிக்கு அடுத்த கேசட் பதிவு செய்யும் நேரத்தில் அந்தப் பெண் அங்கில்லை. கண்ணன் மட்டும் தன் கையில் ஒரு துணிப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு கூடத்தை விட்டு வெளியேறுகின்றான். ஆனால் ஆராய்ச்சிக் கூடத்தின் எந்தப் பொருட்களும் களவாடப் படவில்லை.

ஆராய்ச்சிக் கூடத்தை சோதனை செய்த போது அவர்களின் கை ரேகைகள் மட்டும் சிக்கின. கமெராவில் கண்ட அடையாள அட்டையை வைத்துக் கொண்டு விசாரித்ததில் கால்கரி பல்கலைக்கழகத்தில் அவர்கள் இருவரும் படிக்க வில்லை என்பதும் அவர்களின் அடையாள எண் உண்மையானது அல்ல என்றும் கண்டறியப் பட்டது. அவர்கள் யாரென்று தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகின்றது

இந்த சம்பவத்திற்குப் பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அந்தக் குரங்குகளின் சிறப்பு அம்சங்கள் மறைந்திருந்தன. அவை ஒலி எழுப்பும் சக்தி இழந்திருந்தன. பார்ப்பதற்கும் சாதாரண சிம்பன்சி குரங்குகளை ஒத்திருந்தன. இரு குரங்குகளின் கண்களும் மஞ்சள் நிறம் படர்ந்து மங்கி இருந்தன. பின்னர் அவற்றின் ஜீன்களை ஆராய்ந்த போது சாதாரண சிம்பன்சியிடமிருந்து அவை எந்த அளவிலும் உயர்ந்தது என்று படவில்லை. துரதிர்ஷ்ட வசமாக அக்குரங்குகளிடம் இருந்து எடுத்து வைக்கப் பட்டு இருந்த உரோமங்களும், குருதி மாதிரியும் காணாமல் போய் இருந்தன.

இதை விடவும் திடுக்கிடும் மாற்றங்கள் அவற்றின் உடலில் நிகழ்ந்திருந்தன. அவை...

புத்தகம் புகுந்த கதை - 2

இந்த சிம்பன்சிகள் மனித உருவத்திற்கு மிகவும் நெருங்கிய வடிவினதாய், ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழி பேசும் தன்மை கொண்டனவாய் இருந்தன. இவற்றின் ஜீன் கூறுகளை ஆராய்ந்து அறிவது மனித ஜினோம் ஆராய்ச்சியின் மைல்கல் என உணர்ந்த ஆராய்ச்சிக் கூடத்தினர் தலைமையகத்திற்கு இதைப் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பு ஒன்றை அனுப்பி வைத்தனர். இந்த குரங்குகளின் குருதி மாதிரிகளும், உரோமங்களும் ஆராய்ச்சிக்கென தனியே எடுக்கப் பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

இந்தக் குரங்குகளின் பிறப்பிடம் தொடர்ந்து சர்சைக்குள்ளன விஷயமாகவே இருந்து வந்தன. முதலில் ஆப்ரிக்காவில் இருந்து வரும் கப்பல்கள் ஏதேனும் ஒன்றில் இவை வந்து இருக்கலாம் என்று கருதப் பட்டு வந்தது. ஆனால் பின்னர் நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சிறிது சந்தேகத்தைக் கிளப்பின. ஆண் குரங்கின் இரத்தத்தை பரிசோதனை செய்த பொது அது ஒரு பெயரிடப்படாத ஃப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த காய்ச்சலுக்கான கிருமிகள் பற்றி மெடிக்கல் கவுன்சிலில் விசாரித்ததில் இது மத்திய அமெரிக்காவில் மிருகங்களிடம் எட்டு வருடங்களுக்கு முன் பரவி வந்த புதிய வகை காய்ச்சலுக்கான கிருமிகளுடன் ஒத்துப் போனது தெரிய வந்தது. இதன் மூலம் இவை அப்பகுதியில் வாழ்ந்து இருக்கக் கூடும் என சந்தேகம் கிளம்பியது.

இந்த நோயால் பதிக்கப் பட்ட விலங்குகள் கூட்டம் கூட்டமாக இறந்ததும் பின் எல் சல்வடார் அரசின் தலையீட்டால் பல விலங்குகள் குணப்படுத்தப் பட்டதும் தெரிய வந்தது. இந்த ஆண் குரங்கு அப்போதில் இருந்தே இந்த கிருமியால் பதிக்கப் பட்டிருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் இதனால் இந்த குரங்குக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அபாரமாய் இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதன் பின்னர் பெண் குரங்கை ஆராய்ந்ததில் எவ்வித கிருமி தக்குதலுக்குண்டான அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் அது கர்ப்பமாக இருந்த விஷயம் வெளிப்பட்டது. மேலும் மேலும் வெளிப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் அதிசயத்தைக் கொடுத்துக்கொண்டு இருந்த வேளையில் ஆராய்ச்சிக் கூடத்தினர் தலைமையகத்தின் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த சமயத்தில் தான் புத்தகத்தின் முகப்பில் காணப்படும் இருவரும் சம்பவ தினத்தன்று ஆராய்ச்சிக் கூடத்தில் நுழைந்தனர். அன்று ஏற்பட்ட நிகழ்வைப் பற்றிய குற்றப் புலனாய்வு துறை சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து....

Friday, October 23, 2009

புத்தகம் புகுந்த கதை - 1

அமெரிக்காவின் என்.ஐ.ஹச் (National Institutes of Health) ஐச் சார்ந்த National Centre for Human Genome Research (NCHGR) மாரிலாந்து மாகாணத்தின் பெத்திஸ்தா என்னும் நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. சிம்பன்ஷி வகைக் குரங்குகளின் செல் கட்டமைப்பு ஆராய்ச்சியைத் தொடர்ந்து மனிதர்களின் ஜினோமை ஆராய்ச்சி செய்வதற்க்காக பிரத்யேகமாக அமைக்கப் பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆராய்ச்சிக் கூடங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பற்பல இடங்களில் அமைந்து இருக்கின்றன.

NCHGR இன் முக்கியமான, மனித ஜினோம் ஆராய்ச்சிக்கு வித்திட்ட கனடா நாட்டின் ஆராய்ச்சி கூடம் MANU (பெயர் மாற்றப் பட்டுள்ளது). மனித ஜினோம் ஆராய்ச்சிக்கு தேவையான பல ஆராய்ச்சிக் கூறுகள்(specimen) இங்கு பாதுகாக்கப் பட்டு வந்தன.

இந்த ஆராய்ச்சிக் கூடத்திற்கு கடந்த மே மாதம் பன்னிரண்டாம் தேதி ஒரு ஜோடி சிம்பன்ஷி குரங்குகள் அருகில் உள்ள காட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன. சிம்பன்ஷி குரங்குகள் Pan என்னும் பேரினத்தைச் சார்ந்தவை. இவை பெரும்பாலும் ஆப்ரிக்க கண்டங்களில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. Paniscus, Troglodytes என இரு சிற்றினங்கள் மட்டுமே இது வரை கண்டறியப் பட்டு உள்ளன. சிம்பன்ஷிகள் சுமார் ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே மனித பரிணாம வளர்ச்சியில் இருந்து கிளை பிரிந்திருந்தன.எனவே மனிதர்களுக்கு நெருங்கிய உறவினராய் இருந்தும் கூட மனிதர்களில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றன.

கனடா காட்டில் இருந்து கொண்டு வந்த இந்த ஜோடி பொதுவான சிம்பன்ஷிகளில் இருந்து பல விஷயங்களுள் மாறுபட்டு இருந்தன. அவற்றுள் குறிப்பிட தகுந்தன ... (தொடரும்) ...

Tuesday, August 18, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 10

சூரியன். சூரியன் தன் ஏழு குதிரைகளுள் மஞ்சள் வண்ணக் குதிரையை மட்டும் முன்னால் விட்டு வேகமாக விரட்டிக் கொண்டிருந்தான். சற்று நேரம் வரை முன்னால் வந்து கொண்டிருந்த சிவப்பு நிறக் குதிரை களைத்து மெதுவாக பின் வாங்கிக் கொண்டிருந்த காலை நேரம். இரு குதிரைகளின் தேஜஸ் நிலத்தைப் பொன்னிரமாக்கிக் கொண்டிருந்தது. வானமாகிய பொற்கொல்லன் ஏதேனும் தங்கம் கிடைக்குமா என்று மேகத்தை சல்லடை ஆக்கி சலித்துக் கொண்டிருந்தான். அவனது உத்வேகத்தைப் பார்த்தால் அவன் தன் முயற்சியில் இன்னும் சில நேரத்தில் வென்று பொன்னைப் பிரித்து வெண்ணொளி மட்டும் பூமியை வந்து அடையும் படி செய்து விடுவான்.

ஆனால் பெய்லீ நின்றிருந்த இடம் மட்டும் இருளாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அவன் ஓடையின் மறு கரையில் நின்று இருந்தான். ஓடையின் மறு புறம் முழுவதும் இன்னும் விடிய வில்லை. அவனால் ஓடையை கடந்து வர முடியாது என்பது முந்தைய இரவு நிகழ்ச்சிகளால் உறுதிப் படுத்தப் பட்டு விட்டதால் நான் சலனமற்று இருந்தேன். அவனது தாய் தந்தையை இழந்த துக்கமும், அதற்கு காரணமான என் மீதான கோபமும் அவனது முகத்தில் தெரிந்தது. அவனது பார்வையை தவிர்க்க எண்ணி மறுபுறம் முகத்தைத் திருப்பினேன்.

நேற்று இருட்டில் பார்த்ததால் விளங்காத அவ்விடத்தின் நில அமைப்பு இப்போது நன்றாக தெரிந்தது. நேற்று இரு இணை ஓடைகளாக எண்ணி இருந்த நீர்நிலை வட்டமான அகழி என்பதும், அதில் இருந்த நீர் சிவப்பு நிறத்தில் இருப்பதும் , நான் இருப்பது அந்த அகழியால் சூழப்பட்ட சதுப்பு நிலப் பரப்பு என்பதும் புலனாயிற்று. நான் இருந்த நிலப் பரப்பு பகலாகவும் அகழியின் மறுபுறம் இருளாகவும் இருந்தது. நேற்று குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றம் காலத்தால் அன்று இட மாற்றத்தால் என்பது புரிய எனக்கு அதிக நேரம் எடுக்க வில்லை.

நான் அகழியால் சூழப்பட்ட பகுதியால் இருப்பதால் கால்நடையாக இங்கிருந்து வெளியேறுவது என்பது நடக்காத காரியம். யார் உதவியும் இல்லாமல் இங்கிருந்து வெளியேற முடியாது. எனவே அங்கேயே காத்திருப்பது என முடிவு செய்தேன். கால் இன்னும் ஈரமாகவே இருந்தது. குனிந்து பார்த்த போது காலில் சிவப்பு நிற சாயம் ஒட்டிக் கொண்டிருந்தது. இது பட்டு தான் டைசியா இறந்திருக்க வேண்டும். இந்த நிலப் பரப்பு முழுவதும் இந்த சிவப்பு நிற நீர் சகதியாக கிடந்தது. எனது தொடைப் பகுதியிலும் இந்த சிவப்பு நிற சாயம் ஒட்டிக் கொண்டிருந்தது. நான் சித்ராங்கதாவின் வண்டியில் பையை மடியில் வைத்துக் கொண்டு வந்த போது பட்டிருக்க வேண்டும். அப்படி என்றால் கண்ணன் இறக்கி விட்ட இடமும் இதே போல் சிவப்பு நிற சாயம் படர்ந்த இடமாகவே இருக்க வேண்டும்.

இப்படி யோசிக்க யோசிக்க எதாவது வந்து கொண்டே இருக்கும். ஆனால் புத்தகத்தில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆவலில் யோசனைக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்து விட்டு புத்தகத்தை திறந்து படிக்கலானேன். .. (தொடரும் அடுத்த பாகத்தில் ).....





Monday, August 3, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 9

நீர். வாழ்வின் ஜீவாதாரம். எதையும் கரைக்க வல்லது, கல் நெஞ்சக்காரர்களின் மனதைத் தவிர. வீரியம் ஆனவை நீரில் கரையும் போது நீர்த்துப் போகின்றன. வீரியமற்றவை நீரில் கரையும் போது நீர் அப்பொருளின் கரிசல் ஆகின்றது. நெருப்பு பொருளின் தன்மை பார்த்து செயல்படாத தாய், ஆனால் நீர் பொருளின் தகுதி அறிந்து வழங்கும் குரு. எனவே நீரின் தன்மை என்று உரத்துச் சொல்வதற்கில்லை. வேதியியல் படி நீர் நிறம், மணம், சுவை அற்றது தனித்திருக்கையில். ஆனால் உலகில் எதுவும் தனித்து தன்னிச்சையாக இருக்க இயலாது.

கங்கை நதி விஷ்ணுவின் காலடியில், அரங்கனின் காலை வருடிச் செல்லும் காவிரியின் சகக் கிழத்தியாய், இருந்த புராண காலத்தில் பகீரதன் என்னும் மன்னன் வாழ்ந்து வந்தான். அவனே கங்கை விஷ்ணுவின் காலடியில் இருந்து சிவனின் தலைக்கு இடம் பெயரக் காரணமாய் இருந்தான். விஷ்ணுவின் காலடியில் இருந்த வரை மென்மையாய் இருந்தவள் சிவனின் தலைக்கு வந்ததும் உக்ரவதி ஆனாள். இந்த உக்கிரம் தலைக்கு வந்ததனால் வந்த தலைக் கனம் அன்று. தெய்வத்தின் அடி வருடி புண்ணியம் பெறுதலையே தொழிலாய்க் கொண்டவளுக்கு பாவிகளின் உடல் வருடி பாவத்தை சம்பாதிப்பது கொடூரமான அவஸ்தையாய் இருந்தது. அவள் மனம் அறிந்து மாதேவன், பாவிகளின் பாவங்கள் கங்கையால் நீர்த்துப் போகக் கடவது என்றும் புண்ணியர்களின் புண்ணியங்கள் கங்கை நீரின் வளமையால் வலுத்துப் போகக் கடவதேன்றும் அருளி கங்கையை புண்ணியம் மட்டுமே பெரும் புண்ணிய நதி ஆக்கினான்.

எதிர்பாராத சம்பவம் ஒன்று என் கண்ண முன்னே நடந்தது. எதை துரதிர்ஷ்டம் என எண்ணினேனோ அதுவே அதிர்ஷ்டமாய் முடிந்தது. அவனைத் தாக்குவதற்காக எறியப்பட்ட டார்ச் அவன் விலகியதால் பின்னால் இருந்த ஓடை நீரில் விழுந்தது. விழுந்த வேகத்தில் நீர்த் திவலைகள் காற்றில் சிதறின. ஒரு துளி அவன் மீது பட்டிருக்க வேண்டும். அவன் கூச்சல் போட்டுக் கொண்டே தன் நினைவின்றி இங்கும் அங்குமாய் ஓடி தவறி ஓடையிலே விழுந்து மேலும் துடித்துக்கொண்டே துடிப்படைக்கினான்.

"Dad". இது அந்தப் பொடியனின் குரல் தான். அவன் வருவதற்குள் நான் தப்பித்தாக வேண்டும். வேகமாக ஓடையை நோக்கி ஓடினேன். அவன் என் பின்னால் விரட்டிக் கொண்டு வந்தான். "Bailey!.. Dont go near him. Your life is much more important to us" என்று டைசியா கத்தியதும் மறு பேச்சில்லாமல் திரும்பி ஓடி விட்டான். நான் இதற்குள் ஓடைக்குள் இறங்கி விட்டிருந்தேன். ஒரு வழியாக பெரும் கண்டத்தில் தப்பித்த சந்தோஷத்தில் மறு கரை அடைந்தேன்.

பொழுது நன்கு இருட்டி இருந்தது. களைப்பு மிகுதியால் அங்கேயே படுத்து உறங்கி விட்டு இருந்தேன். நான் விழித்து எழுந்த போது நன்கு விடிந்திருந்தது. குளிர் குறைந்து வெயில் தன் வீரியத்தைக் கூட்டத் தொடங்கி இருந்தது. கண்களைக் கசக்கிய படியே திரும்பினால் அந்தப் பொடியன் பெய்லீ கும்மிருட்டில் (?!) கொலை வெறியோடு வெறித்துக் கொண்டிருந்தான்.. (தொடரும்)...

Sunday, July 26, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 8

நிழல். வெளிச்சத்தின் மறுபுறம். வெளிச்சம் தலை நிழற்பூ. வெளிச்சமில்லாமல் நிழல் தனித்து இருக்க முடியாது. நிழல் இல்லாத வெளிச்சம் சகிக்க முடியாத கனல். ஏனெனில் வெளிச்சம் தனித்து வருவதில்லை அத்தோடு வெயிலையும் சேர்த்துக் கொண்டு தான் வருகிறது. வெயில் வெளிச்சத்தின் இல். வெளிச்சமும் நிழலும் அருகருகே இருக்கின்றன. வெளிச்சத்தின் வெம்மை நிழலிலும் இருக்கின்றது. எனவே நிழலில் இருப்பது குளுமை அன்று அது வெயிலுக்கு ஒரு ஆறுதல் அவ்வளவே.ஆனால் நிலவோ குளுமையானது. ஏனெனில் அது சூரியனின் நிழல் இல்லை. சூரியனின் பிரதிபலிப்பு. நிலவு சூரியனுக்கு எதிர். நிழல் சூரியனுக்குத் துணை அல்லது இணை. புராணம் என்ன சொல்கிறது?

சூரியனின் மனைவி சரண்யு, யமனின் தாயானவள், விடியல் மற்றும் மேகங்களின் தேவதை என விளிக்கப்படுகிறாள். சரண்யு சூரியனின் தகிப்பு தாளாமல், பூமிக்கு வந்து சூரியனின் ஒளிக் கண்களுக்கு மறைந்து தன் தோழி சாயாவுடன் வாழ்ந்து வருகிறாள். ஒரு நாள் சாயா இல்லாது சரண்யு தனித்து செல்லும் போது சூரியனின் பார்வையில் சிக்கிக் கொள்கிறாள். தான் இது வரை சூரியனின் பார்வையில் படாது வாழ்ந்து வந்ததன் காரணம் சாயா தேவி எனப்படும் நிழல் தேவியின் நட்பினால் என உணர்கிறாள். சூரியனுடன் செல்ல வேண்டுமானால் சூரியன் சாயாவை மணந்து தன்னுடன் அழைத்து வர சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். சூரியன் சம்மதிக்கிறான். இவ்வாறாக நிழல் வெளிச்சத்தின் அதிபதியாம் சூரியனின் மனைவியாகிறாள். இன்றும் சூரியனுடனே வாழ்ந்து வருகிறாள். இப்போது பதிவிரதா தர்மத்தின் படியும், வெளிச்சம் இல்லாது நிழல் இல்லை.

என்றோ ஏதோ வெளிச்சத்தின் உதவியால் நிழலில் எடுக்கப்பட்ட நிழல் இன்று வெளிச்சத்தின் பார்வையில். அந்த ஒளி நிழலாக்கி இருந்த நிழல் கண்ணன் மற்றும் மோகினியுடையது. அப்படியானால் அவர்கள்? படத்திற்குக் கீழே ஆங்கிலத்தில் "Kannan Vasudevan with Chitraangadha Hari" என்று இருந்தது. அது நிழற்படம் மட்டும் அல்ல. அது ஒரு புத்தகம். அந்தப் புத்தகம் எப்படி என் பைக்குள். யோசிக்க நேரமில்லை. அதோ அந்த ஓடையின் சலசலப்பு என்னை அழைக்கின்றது.

இப்பொழுது டார்ச்சை மட்டுமில்லை புத்தகத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். இரண்டும் என்னிரண்டு கையில். கால்களோ தரையில் சில நொடி பட்டு பல நொடி காற்றில் மிதந்தது. இப்பொழுது அந்த ஆண் குரங்கின் குரல் "Daisia..". டைசியா அந்தப் பெண்ணின் பெயராக இருக்க வேண்டும். ஆனால் குரல் வந்த திசை நான் செல்லும் திசையாக இருந்ததால், கால்கள் அதிக வினாடி தரையில் படத் தொடங்கியது.

நான் வேகத்தைக் குறைத்ததால் மின்மினிகள் தோன்றிய இடத்திற்கு முன்னமே நான் நின்று விட்டேன். எதிரில் அந்த குரங்கு. டைசியாவைப் பார்த்துவிட்டு என்னை நோக்கி ஆக்ரோஷமாக உறுமியது. அதைத் தாக்க என்னிடம் இருந்தவற்றுள் டார்ச்சே சரியான ஆயுதமாய் பட்டது. அத்தோடு புத்தகத்தை இழக்க நான் தயாராக இல்லை. அடுத்த நொடி டார்ச் அதை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அவசரத்தில் டார்ச்சை அணைக்காததால் அதன் வெளிச்சம் அது வருவதை அவனுக்கு உணர்த்தி இருக்க வேண்டும். அவன் விலகிக் கொண்டான். இனி என் கதி?... (தொடரும்)...

Wednesday, July 22, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 7

நெருப்பு. அழியா பூதம். அமைதியானது கனன்று எழும் வரை. குரூரமானது அமிழ்ந்து அடங்கும் வரை. சட்டென்று நொடியில் உருவாகும் வல்லமை கொண்டது. நெருப்பு கொண்ட இடம் தன் அடையாளத்தை அழித்துக் கொள்கிறது. நேற்றைய நிலை இன்று இல்லை என்று ஆக்கும் மகா சக்தி. இதனாலோ என்னவோ பூதங்களுள் ஒன்றாய் கருதப் படுகின்றது. நல்லோர் தீயோர் என்று பார்க்காது புடைத்துண்ணும் பூதம். எமனின் கைக் கூலி. கல்லுக்குள் ஒளிந்து இருக்கும் நெருப்பு உரசும் போது பற்றிக் கொள்கின்றது. கங்கில் பற்றிக் கொண்ட நெருப்பு விசுறும் போது பற்றி எழுகின்றது. உள்ளத்துள் எழுகின்ற நெருப்பு நாவிற்கு வரும் போது கனல் தெறிக்கின்றது.

ஆனாலும் சில நெருப்புகள் வீட்டில் செல்லப் பிள்ளைகள் போல் வளர்க்கப் படுகின்றன அடுப்பங்கரையில். பிரகாசித்திருக்க அணையாது காக்கப் படுகின்றன தெய்வ சந்நிதானத்தில். தேவர்களிடத்து யாசிக்க நெய்யூற்றி வளர்த்தப் படுகின்றன யாகக் குண்டத்தில். புல் இரவு முழுவதும் சேகரித்து வைத்த தலைக் கனத்தை அதிகாலையில் எங்கோ தூரத்து எழும் நெருப்புக் கோளம் கரைத்து விடுகின்றது. மாநகர் கூடலில், பெண்கள், குழந்தைகள், அறவோர், பசுக்களன்றி ஏனையோருக்கு அப்பத்தினி தெய்வம் வைத்த நெருப்பும் நல் வகையினதாம். கூண்டுக்குள் அடைபட்ட நெருப்பு வழித் துணையாய் அமைவதோடன்றி, பயத்தையும் விரட்டி அடிக்கின்றது.

மோகினியின் கையில் இருந்த பை அவளது கூர்மையான கை விரல் நகங்களால் கிழிக்கப் பட்டிருக்க வேண்டும். என் பையில் இருந்த டார்ச் அவள் பறக்கும் போது வேறு திசையில் எகிறி விழுந்து ஓடைக் கரைப் பாதைக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டு விழுந்து கிடந்தது. "Let him come out of the stream" ஞாபகத்திற்கு வந்தது. அவர்கள் ஏன் நான் ஓடையை கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். புரிந்தது. அவர்களால் ஓடையைக் கடக்க முடியாது. நான் செல்ல வேண்டிய இடமும் அதுதான். ஆனால் இந்தக் குரங்கு மனுஷி என்ன ஆனாள்?

"Mom" என்றபடியே இரு சிறு மின்மினிகள் காற்றில் தோன்றின. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஏற்கனவே தெரிந்த இரு மின்மினிகளை நோக்கி அவை பறக்கத் தொடங்கின. இது தான் சரியான சமயம். ஆனால் இன்னும் இரு மின்மினிகள் இங்கே இருக்கின்றதே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம் பிறந்து விட்டது எனக்கு. இங்கேயும் சாவு அங்கேயும் சாவு என்ற நிலையில் எதற்கும் மனம் துணிந்து விடுகின்றது.

டார்ச்சை நோக்கி ஓடினேன். இந்த இருண்ட பிரதேசத்தில் எனக்கு வழி காட்ட அதுவும் தேவை எனப் படவே அதை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து குனியும் போதுதான் கவனித்தேன். ஒளி ஓடைப் பாதைக்கு மட்டும் இல்லாமல், ஒரு நிழற்படத்திற்கும் வெளிச்சம் தந்து கொண்டு இருந்தது. அதில் சிரித்துக் கொண்டு இருந்தவர்கள் இருவர். அவர்கள் ..(தொடரும்).....

Tuesday, July 14, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 6

இருள். அனைத்தையும் விழுங்கக் கூடிய வல்லமை கொண்ட இருள். தன்னை நிகர்த்தார் இவ்வுலகில் இல் எனும் இறுமாப்பு கொண்ட இருள். பிரபஞ்சத்தின் கருந்துகள்கள் எதையும் விழுங்கி, விடுகின்ற ஏப்பத்தயும் கூட வெளிவிடாமல் அதையும் விழுங்கிக் கொள்ளுமாம். இருள் தன்னேர் இல்லான் ஆயின் இன்று உலகத்தில் இருளன்றி எதுவும் இராதே. இருள் மண், மரம், காடு, நீர் ஏன் மனிதர்களின் நம்பிக்கைகளைக் கூட விழுங்கி விடும் வல்லமை கொண்டது. இருளில் மனிதன் பாம்புக்கும் பேய்க்கும் பயப்படுவதில்லை. இருளுக்கு மட்டுமே பயம் கொள்கின்றான்.

மகாபாரதத்தில் வரும் சிறு சிறு சம்பவங்களில் பாண்டவர்களின் முதல்வனான யுதிற்றனின் பெருமை கூறும் ஒரு சம்பவம் இருள் பற்றியது. பறவையின் கண்களை மட்டுமே குறி பார்த்து அர்ஜுனன் வென்ற பின் நடப்பதாய் வரும் சம்பவம். இம்முறை துரோணர் ஒரு சிறு அறையைக் கொடுத்து பாண்டவர்களைத் தனியாயும் கௌரவர்களைத் தனியாயும் நிரப்பச் சொல்கிறார். கௌரவர்கள் தம் அறையில் வண்டி வண்டியாய்ப் பொன்னை நிரப்பி, அறை நிறைய பொன் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். துரோணர் ஒரு அம்பை கதவிடுக்கில் விட்டு அப்போது அந்த அம்பு இருந்த இடம் நிரம்பாமல் இருப்பதால் அவர்கள் தோற்றதாய் அறிவிக்கிறார். பாண்டவர்கள் தம் அறையில் ஒரு சிறு அகல் விளக்கை ஏற்றி வைத்து அவர்கள் அறையில் வெளிச்சம் நிறைந்து இருப்பதாய்ச் சொல்கின்றனர். அவர்களே வென்றதாய் அறிவிக்கப் படுகின்றனர்.

அரக்கர்கள் பிரம்மாவிடம் வரம் கேட்கும் பொது இன்ன இன்ன உயிர்களால் தன்னுயிர் அழியாதிருக்க வரம் வேண்டுவார்கள். அவர்களது பட்டியல் தன்னை விட மிகச் சிறந்தவர்களை உள்ளடக்கியதாய் இருக்கும். அதன் பின் எல்லா புராணங்களையும் போல அவர்களின் பட்டியலில் இல்லாத ஒரு அவதாரம் அவ்வரக்கர்களை அழிக்கும். அதே அரக்கர்கள் போல் தான் இருளும் இறுமாப்பு கொண்டு அலைகின்றது. அதற்கென்ன தெரியும் ஒரு சிறு அகல் விளக்கு எல்லா இருளையும் களைய வல்லதென்று.

என்னால் தப்பிக்க முடியுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அவர்கள் உரையாடலில் அவர்கள் கண்களைத் திறந்தால் நான் தப்பிக்க முடியும் என்றொரு வாக்கியம் வந்தது என்னுள் மேற்கண்ட கேள்வியை எழுப்பி இருந்தது.
இந்த கரடு முரடான இடத்தில் காலடி அரவம் கேட்காமல் அவர்கள் நகர்வது விந்தையாய் இருந்தது. நிச்சயம் அவர்கள் நகர்கிறார்கள் என்று என் உள் உணர்வு மட்டும் உரைத்துக் கொண்டிருந்தது. எந்த நொடியும் அவர்கள் என்னைப் பிடித்துக் கொள்வார்கள் என்ற நிலையில் என் கடைசி நொடிகளை நான் என் கை விரல்களில் எண்ணிக் கொண்டிருந்தேன்.

"I got him" மோகினியின் குரலைத் தொடர்ந்து இரு மின்மினிகள் என் கால் எட்டும் தூரத்தில் அதாவது என் பை தொங்கிக் கொண்டு இருந்த இடத்தில் தோன்றின. அவள் பையை நானாக நினைத்துக் கத்தி இருந்தாள். இப்பொழுது அவள் என்னைப் பார்த்திருப்பாள். என் மரணத்தை சிறிது நேரம் தள்ளிப் போட கிடைத்த வாய்ப்பாக எண்ணி அவளை எட்டி உதைத்தேன். ஒரு பெரிய அலறலோடு பையைப் பிடித்த வண்ணம் அவள் காற்றில் பறந்து கொண்டிருந்தாள். அவளில் இருந்து ஒரு தனி ஒளி பிரிந்து ஆலமரத்தின் குடைக்கு வெளியே விழுந்தது. அது ..(தொடரும்)....




Sunday, July 5, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 5

இருள் நீடிக்கிறது. பிரபஞ்சத்தில் இல்லாத இருள். பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்களால் ஒளி உண்டு. இங்கு அதுவும் இல்லை. இங்கு எதுவும் இல்லை. இருள் மட்டும் தான் இருக்கிறது. அதை நிலவால் களவாட இயலாது. இவ்விருள் நிலவின் கைக்கு எட்டாத தூரத்தில். ஆனால் இந்த இருளும் நிரந்தரம் அல்ல. நிலவால் கூட களவாட இயலாத இருளை மின் மினிப் பூச்சிகள் களவாட இயலும். முதன் முறை வெளிச்சத்திற்கு பயப்படுகின்றேன். மின்மினிப் பூச்சிக்கும். அந்த மின்மினிப் பூச்சிகள் மட்டும் இங்கு வந்தால் நான் இனி வெளிச்சமே காண முடியாது எனத் தோன்றியது . நீல மின்மினிகள். ஆம் நீல நிற LED மாதிரி பளிச் என்ற வெகு தூரம் காணக் கிடைக்கின்ற பிரகாசமான நீல நிற மின்மினிகள்.

இப்போது சொல்ல வில்லை என்றால் எப்போதுமே என்னால் சொல்ல முடியாது என எண்ணுகிறேன். கண்ணனின் குரலுக்கு ஏற்ற மனிதன் அல்லாத உருவம் துரத்துவதாய் சொன்னேன் அல்லவா. ஆனால் அதை முழுவதுமாய் மனிதன் இல்லை என்று மறுத்துக் கூற முடியாது. அரை மனிதன். அரை என்றால் உயரத்தில் அல்ல. பரிணாமத்தில். சற்றே குரங்கு என்று சொல்லி விடக் கூடிய அரை மனிதன். அரையில் ஏதுமில்லா அரை மனிதன். புகார் வச்சிரக் கோட்டத்து காபாலிகனையும் கால் தூசி என்று என்ன வைக்கும் கொடுமையான உருவம் கொண்ட இரத்தம் குடிக்கும் காட்டேரி. இரத்தக் காட்டேரி. ஆங்கிலத்தில் Dracula. அவன் வாயில் வீசும் பசும் இரத்தத்தின் கவுச்சி நெடி இன்னும் என் நாசியில் நீடித்து இருக்கிறது. அவன் வாயின் கோரப் பற்களின் வாயிலாக குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவனாய் இருக்கலாம் எனக் கருத வாய்ப்பளித்தான். கண்கள் மிருகங்களுக்கே உரித்தான இருட்டிலும் பளிச் என்று தெரியும் ஒளிமிக்க கண்களாய் இருந்தது. நீளமாய் இருந்தது. ஆனால் மிக நீலமாய் இருந்தது. அவன் எந்நேரத்திலும் வரக் கூடும். அவன் அந்த நீல மின்மினிப் பூச்சிகளைக் கண்களில் ஏந்தி எக்கணமும் வரக் கூடும்.

அதற்கு முன், என் சுமையைக் குறைத்தாக வேண்டும். பையை அருகில் தென்பட்ட ஒரு விழுதில் கட்டித் தொங்க விட்டேன். இன்னும் இருள் இருக்கிறது. கண்களுக்குப் பழகாத இருள்.அரை மனிதனின் கண்களுக்குப் பழக்கப் படாத இருளாகவே நீடிக்க வேண்டும். இருள் நீடிக்கின்றது. இருள் இன்னமும் நீடிக்க வேண்டும். மின்மினிப் பூச்சிகளால் களவாட முடியாத இருளாகவே நீடிக்க வேண்டும். ஆனால் என் கண்களுக்கு எட்டாத ஓடைக் கரையில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டு தானே இருக்கிறான். அந்த மின்மினிகளுக்கு ஒளியை ஏற்றிக் கொண்டு தானே இருக்கிறான்.

ஒளி பெற்ற மின்மினிகள் ஆறு. ஆறும் ஆல மரத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தன. பறந்தன அல்லது மிதந்தன. அருகில் மிக அருகில் ஒரு குழந்தையின் சிணுங்கல். "I wanna taste his blood". அதே நாராசமான அமெரிக்க ஆங்கிலம். தமிழ் மழலையின் சங்கீதம் ஆங்கிலத்தில் சிறிதும் துளிர்க்கவில்லை. ஆனால் சங்கீதமாய்க் கேட்டன நான்கு காதுகளுக்கு. மோகினி உரைத்தாள் "Dear, just close your eyes for awhile. I will catch that insect for you". "Darling, Dont open your eyes. Otherwise that insect will trace us and will try to escape." இக்குரல் கண்ணனுடயதாய் இருந்தது. மின்மினிகள் மறைந்தன. (தொடர்ந்து வருகின்றது)...

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 4

வானம் இருண்டு இருந்து. கோபுர தீபம் அணைந்தாலும் ஆலயத்தின் பள்ளியறை தீபம் மட்டும் இன்னும் அமிழ்த்தப் படவில்லை. நிலவு முன்னைக் காட்டிலும் இன்னும் பிரகாசமாய் அதி பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டு இருந்தது. பால் நிலவு, நிலாச் சோறு எல்லாம் அர்த்தம் அற்றதாகி இருந்தது. தலைவனைப் பிரிந்த தலைவி பாலை நிலவைப் பாழ் நிலவே என வர்ணித்தது மட்டும் ஏனோ அர்த்தம் செறிந்ததாய்த் தோன்றியது. இருந்த வெளிச்சமும் நிலவினுடயது. வெயிலுக்கு பயந்து பாம்பின் பட நிழலில் ஒதுங்கிய தவளையின் கதை ஏனோ நினைவில் வந்து உறுத்தியது. ஏன் இந்த எண்ணம். பாம்பும் நிலவும் எப்படி ஒன்றாக முடியும். இருவரும் பரம எதிரிகள் என்று இலக்கியமும் அம்மாவும் கூட சொல்லி இருக்கிறார்கள். ஒரு வேளை நாக பூஷண சந்திர மௌலியாகிய சிவன் சமரசம் செய்து இருப்பரோ. இப்பொழுது கடவுளையும் நான் நம்புவதாய் இல்லை. எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மோகினி தான். அவள் தான் என்னைக் காப்பாற்றுவாள்.

ஆம். காப்பாற்றினாள். நான் கரையில் ..ஓடையின் அக்கரையில்... மோகினியின் அக்கறையில்... நிலவின் ஒளி ஓடை நீரை இரத்தமாய் மாற்றிக் காண்பித்தது. அது இரத்தம் தானா என்று ஊர்ஜிதம் செய்ய நான் விரும்ப வில்லை. அதோ அந்த ஆல மரம் வாரல் என்பன போல் மறித்துக் கை காட்டிற்று. அந்த மோகினி அந்த மரத்தின் பின் சென்று தானே மறைந்தாள். ஒரு வேளை அது அவள் தற்கொலை செய்த இடமாய் இருக்குமோ. ஒரு வேளை அவள் மோகினியாய் இல்லாமல்லிருந்தால்? நான் அம்மரத்தை நோக்கியே செல்வது எனத் தீர்மானித்தேன். ஆனால் நான் கேட்பது என்ன?

"He is there"ஒரு ஆண் குரல் . "Let him come out of the stream" இது பெண்.

முதலில் ஒலித்தது கண்ணன் குரல். அடுத்தது மோகினி. அவர்கள் இங்கே தான் இருக்கிறார்கள். மிக அருகில். நான் ஓடையில் இருந்து வெளியே வரக் காத்திருக்கிறார்கள். கண்ணனை சந்திக்கும் ஆவலில் வேகமாய்.. அந்தக் குரல்கள் எண்ணி இருக்காத வேகத்தில்.. ஓடையில் இருந்து எகிறிக் குதித்து வெளியேறினேன். குரல் வந்த திக்கில் உள்ள ஒரு மரம் சலசலத்தது.

கண்ணனின் குரல் கண்ணனின் உருவத்திற்குப் பொருந்தவில்லை என்றேன் அல்லவா. இதோ இங்கே என் கண் முன் ஓடி வரும் உருவத்திற்கு கச்சிதமாய்ப் பொருந்தும். ஆனால் அந்த உருவம் ஒரு மனிதனுடயது இல்லை. நான் அதைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டு நின்றேன் என்றால் அது என்னைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடி விடும். நான் அங்கு நிற்கவில்லை. அதோ அந்த ஆல மரத்தை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறேன். மூச்சிரைக்க. என் பயணப் பையுடன். அந்த ஆலமரம் தான் எனக்கு நிம்மதி தரும் என, எந்த விதமான நிம்மதி என அறியாமல்... (தொடர்கிறது...)

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 3

வானில் சூரியன் சுத்தமாய் இல்லை. மேகங்கள் மறைத்து இருக்கிறது என்றால் சூரியனை மறைத்த மேகம் ஏன் நிலவை மறைக்கவில்லை. இது அந்தி வேளை என்றாலும் சூரியன் மறைய வில்லை என்பதை அங்கே சூழ்ந்து இருக்கும் வெளிச்சம் வெளிச்சம் போட்டு காட்டியது. கிரகண காலத்து சீதோஷணம் நிலவியது. முன் பனிக் காலத்து சிலீரென்ற காற்று தொடர்ந்து மேலே பட்டுக் கொண்டு இருந்தது. கிரகண காலங்களில் அம்மா வெளியே போகக் கூடாது என்று சொல்லுவாள். அவள் காரணம் ராகு கேது என்ற இரு நாகங்களின் விடம் சூழலில் சூழ்ந்து இருக்கும் என்பதே. நான் கற்ற விஞ்ஞானமோ "uv கதிர்கள், பாக்டீரியா, நுண் கிருமிகள்" என்று பலவற்றுக்கும் முடிச்சு போட்டது. எவ்வாறாயினும் இவ்வேளையில் வெளியே இருப்பது சரி அல்ல என்று பட்டது. சமீபத்தில் கிரகணம் வருவதாய் எந்த செய்திகளிலும் சொல்ல வில்லை.

முழு நிலவை கண்டால் கடல் கொந்தளிக்குமாம். பைத்தியங்களுக்கு பித்தம் தலைக்கு ஏறுமாம். எனக்கு நிலவைப் பார்க்க பயமாய் இருந்தது. சினிமாவின் உச்ச கட்ட கட்சி போல் ஓடிச் சென்று "I love you" என்று சொல்லி விடுவது என்று முடிவெடுத்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அவளைக் காணவில்லை. எந்த திசையில் செல்ல என்று தெரிய வில்லை. முன்பு நின்ற இடமாவது எப்படியாவது ஊர் போய்ச் சேர்வோம் என்று நம்பிக்கை அளித்து. இவ்விடம் நாலா புறமும் விடத்தை உறிஞ்சி வைத்துக் கொண்டு உமிழக் காத்துக் கொண்டிருந்தது.

நாங்கள் வந்த பாதையை நோக்கி கவனத்தைத் திருப்பினேன். சிறிது தூரத்தில் ஓடை ஒன்று மாநகராட்சிக் குழாய் உடைந்து தண்ணீர் உகுப்பது போல் சிறு ஓசையுடன் ஓடிக் கொண்டு இருந்தது. தார் சாலை எப்பொழுதோ முடிந்திருக்க, மணல் சாலையை ஈரமாக்கியவாறு ஓடை நீர் ஓடையின் பாதையிலிருந்து விலகி சாலையில் ஓடி வந்து கொண்டு இருந்தது. இதனால் நானும் அந்தக் க்ராதகியும் வந்த வண்டியின் தடம் தெளிவாகத் தெரிந்தது. நல்லது. இதே வழியில்.. இந்த தடத்தைப் பார்த்தவாறே சென்று விடலாம் என்று திரும்பி நடக்க ஆரம்பித்தேன். சிறிது தூரம் நடந்து வந்து மற்றோர் ஓடையின் அருகில் இருந்து திரும்பிப் பார்த்தேன். என் காலடித் தடங்கள் அந்த சகதியில் தெளிவாய்த் தெரிந்தன.

இன்னும் சற்று தூரத்தில்.. அதாவது நான் இறங்கிய இடத்தில் காலடித் தடங்கள் மறைந்து வண்டியின் சக்கரத் தடங்கள் ஆரம்பமாயின. எனது புத்தியில் சட்டென்று ஒன்று உறைத்தது. அவள் வண்டியில் எந்தப் பக்கமும் திரும்பாமல் நேராகச் சென்றாள். அப்படி ஆயின் என் காலடித் தடத்துடன் வண்டியின் சக்கரத் தடங்களும் இருக்க வேண்டுமே. அவள் அங்கிருந்து மறைந்து போகவில்லை. வண்டியில் செல்வதை நான் என் கண்களால் கண்டேனே.

ஓடை நீர் தடத்தை அழித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பலனை குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் சூழலுக்கு சாதகமாக்கி எனக்குள் தீர்ப்பு எழுதிக் கொண்டேன்.
அடுத்து என்ன? அவள் இதே சாலையில் இதோ இந்த ஓடைக்குள் இறக்கி அக்கரை சென்று அப்பால் மறைந்ததைக் கண்டிருந்தேன் அல்லவா. ஓடையில் இறங்குவது என்று முடிவாயிற்று. உடைகளைச் சுருட்டி விட்டுக் கொண்டு பையைத் தோள்களில் ஏற்றிக் கொண்டு நீரில் இறங்கினேன். நீர் அந்தக் குளிரிலும் அந்த சூழலுக்கு பொருந்தாத மிதமான சூட்டுடன் இருந்தது. ஓடை நான் எதிர் பார்த்ததை விட ஆழமாகவே இருந்தது. நான் முட்டளவு நீரில் நின்று கொண்டிருந்தேன். அவள் சென்ற பொது இந்த ஆழம் இல்லையே. இந்த ஆழத்தில் நான்கு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாதே. நான் அவளை மோகினிப் பிசாசு என்றே முடிவு செய்து கொண்டேன். நீரின் வேகம் அதிகமாயிற்று. என் கால்கள் நீரில் இழுக்கப்பட்டன. முட்டளவு நீரில் கால்கள் இழுக்கப் படுவதாவது? அனால் அது பிரமை இல்லை. அந்த மோகினிப் பிசாசு என்னை இங்கு அழைத்து வந்தது என்றால் எதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காகவாவது நான் பிழைப்பேன் என்று நம்பினேன். பிழைத்தேன்.... (தொடரும்)

Saturday, July 4, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் -2

மழை மட்டும் பெய்திருந்தால் கூதிர் என்றே சொல்லக்கூடிய வானிலை. ஆயிரம் கைகள் ஆதவனை மறைத்தாற்போல் மேகங்கள் சூரியனின் பிரகாசத்தைக் குறைத்துக் காட்ட முயற்சித்து தோற்ற வண்ணம் இருந்தன. மணி நான்கை நெருங்கி இருக்கலாம். கண்ணன் என்னை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு அரை மணி நேரம் ஆகிவிட்டு இருந்தது. ஜன நடமாட்டம் குறைவு என்பதை விட இல்லை என்பதே சரி என்று பட்டது. இது வரை மனிதர்களோ வாகனங்களோ அவ்வழி வழியே சென்றதாகவே படவில்லை. நகரத்தில் இது வரை நான் வந்து அறியாத இடமாக இருந்தது. எங்கே இருக்கிறேன் என்பதே தெரியாமல் என்ன செய்ய. குருவிடம் வந்து அழைத்து போக சொல்லலாம் என்று அலைபேசியில் அவனைத் தொடர்பு கொள்ள முனைந்தேன். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் அலைபேசியும் தொடர்பு அற்று போய் கொட்டக் கொட்ட என்னை வெறித்துப் பார்த்துச் சிரித்தது....

பின் புறம் ஏதோ வாகனம் வந்து நின்றது போல் தோன்றிற்று. திரும்பி பார்த்தால் அழகான ஒரு பெண் தன்னுடைய scooty இல் நின்று கொண்டு இருந்தாள். அந்த அழகான ஆச்சரியத்தில் என்னால் ஏதும் பேச இயலவில்லை. அவளே வந்து "lift?" என்று கூறினாள்.இல்லை இல்லை கூவினாள். கவனிக்க.. "வேறு வழி இல்லாததால்" ஆவலுடன் செல்ல சம்மதித்தேன். என்னுடைய பயணப் பையில் சற்று முன் நூலகத்தில் எடுத்த புத்தகங்களும் மேலும் சில பாட புத்தகங்களும் சேர்ந்து பெரிய சுமையாக என் மடியில் அமர்ந்து மாநகராட்சியின் வேகத்தடைகளை நான் பாராட்ட முடியாத வண்ணம் பார்த்துக் கொண்டன.

Lift என்ற ஒரு வார்த்தைக்குப் பிறகு அவள் பேசிய எதுவும் என் காதில் விழவில்லை. ஆனாலும் அவள் ஏதோ பேசிக்கொண்டே வருகிறாள் என்பது மட்டும் தெரிந்தது. என்னுள் ஏதோ சிம்பொனி இசையை இளைய ராஜா உருவாக்கிக் கொண்டு இருந்தார். நான் அதன் லயத்தில் லயித்து இருந்து விட்டேன். திடீரென்று வண்டி நின்றது. அந்த இடம் மேலும் புதியதாய் இருந்தது. குளிர் அதிகமாய் இருந்தது. என் பற்கள் நடுங்கின. நான் வண்டியில் இருந்து இறங்கினேன். அவள் மிகுந்த கோபத்தோடு என்னை நோக்கினாள். கண்ணன் பேசிய அதே அமெரிக்க ஆங்கிலத்தில் "I am asking you.. What do you say.. Do you love me or not?". "pardon !?" இம்முறை நான் ஆச்சர்யத்தில் உறையவில்லை.

நான் அவள் கிறக்கத்தில் இருந்து மீள வரவில்லை என்றாலும், முதல் சந்திப்பிலேயே ஒரு பெண் இப்படிக் கேட்பாள் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியாததால் எனக்கு சிறிது சந்தேகம் தோன்றியது. அதனால் பொய்யா உண்மையா என்று கூட யோசிக்காமல் அவளது அடுத்த கேள்வியை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் "எனக்குக் கல்யாணம் ஆகி விட்டது" என்றேன். "Go to Hell" என்றபடியே என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் என்னை அந்த வனாந்திரத்தில் அம்போ என்று விட்டு விட்டுச் சென்று விட்டாள்.... (தொடரும்)...

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும்

நண்பகல் பன்னிரண்டு மணி இருக்கும் எனத் தோன்றியது. தமிழ் நாடு கோடைக்கே உரித்தான வெண்ணொளியை மைதானமெங்கும் பரப்பி விட்டு அக்கா குருவியின் சங்கீதத்துக்கு செவி சாய்த்துக் கேட்டுக்கொண்டிருக்கிறது. சூரியன் தன் கிழத்தி சாயாவுடன் உலா செல்ல இயலாத மைதானத்தை சுட்டுப் பொசுக்கி விடும் எண்ணத்தில் வெறித்துக் கொண்டிருக்கிறான். எனக்குப் பசியோடு தாகமும் சேர்ந்து கொண்டது. மைதானத்தைச் சுற்றி செல்லும் முன் நூலகத்தை மூடி விடக்கூடும். கல்லூரி முடிவடைந்து விட்டதால் நூலகப் பணியாளர்கள் சிறிதும் தாமதிப்பதில்லை. பதினான்கு நாட்களுக்கு முன் பரிட்சைக்காக எடுத்த புத்தகங்களை ஒப்படைக்க இன்று கடைசி நாள். புத்தகத்தை ஒப்படைத்து விட்டு மெஸ்சுக்கு சென்று சாப்பிட வேண்டும். எனவே மைதானத்தைக் குறுக்காக கடந்து நூலகம் அடைக்கும் முன் புத்தகத்தை ஒப்படைதாக வேண்டிய கட்டாயம். நூலகத்தை நெருங்குகையில், சாலையில் மைதானத்தைச் சுற்றி நூலகத்தை அடைந்து கொண்டிருக்கும் வசந்த்தை நோக்கி கை அசைத்தேன். பின் இருவருமாக நூலகத்தில் நுழைந்த போது....
அங்கு வழக்கமாக காணப்படும் நூலகத்திற்கான அறிகுறிகள் அதிகமாய் தென்பட வில்லை. ஒரே ஒரு நூலகர் மட்டும் இருந்தார். நூல்களை ஒப்புவித்து விட்டு, விடுமுறையில் படிக்க நாவல் பகுதிக்குச் சென்று பெயர் கூட பார்க்காமல் நான்கு நாவல்களை எடுத்து நூலகரிடம் கொடுத்தேன். புத்தகங்களுள் ஒன்றுக்கு அடையாள எண் இல்லை என்று சொல்லி விட்டு, அதைத் தரவுப்பலகையில் ஏற்றம் செய்து விட்டு புது எண் இட்டுக் கொண்டிருந்தார். அந்த இடைவெளியில் நூலகத்தின் வெளியே குருவின் பேச்சுக் குரல் அழைத்தது. குரு என்னை விட ஒரு வயது சிறியவன். நூலகம் மூடும் சமயமாதலால் அவனை உள்ளே விட அனுமதி மறுக்க படுவதாக அவர்கள் உரையாடலில் புரிந்தது. அவனிடம் தான் என்னை பேருந்து நிலையத்தில் கொண்டு விடும் படி கேட்டிருந்தேன்.

"என்னண்ண அடுத்து என்ன?" என்றான். "US Universities கெடைக்காது போல தோணுது. என்னோட மார்க் கம்மி ஆச்சே. எதாவது கனடா universitiesல தான் முயற்சிக்கணும். professor யாரோ ஒரு சீனியர் மெயில் ஐடி கொடுத்தார். கண்ணனாம். கனடால தான் படிக்றாராம். அலும்னில விசாரிச்சு போட்டோ, போன் நம்பர் கூட வாங்கி வச்சுருக்கேன் " இது நான். அதற்குள்...

"I am kannan. I am an alumni of this college. I came to meet professor Rajendran. He told about you. He asked me to help you. I went to your room. Your roommate told me that you are in library. " முதுகைத் தட்டியவர் ஸ்பஷ்டமான அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்லி முடித்தார். வசந்த் சாலையில் நின்று அவன் தான் அனுப்பியதாய் ஜாடை செய்தான். நான் குருவிடம் விடை பெற்று கொண்டு கண்ணனின் காரில் ஏறி அமர்ந்தேன். இதற்குள் என்னைப் பேருந்து நிலையத்தில் விட கண்ணன் தயாராய் இருப்பதாக கூறினார். நான் விடுதிக்கு சென்று பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது வசந்த் மெஸ்சுக்கு சென்று திரும்பி வந்தான். அவனிடமும் விடை பெற்று கார் வளாகத்தைக் கடந்து சாலையை அடைந்தது.

காரின் குளிர்ந்த வெப்ப நிலையும், ஒளி எதிர்க்கும் கண்ணாடிகளும் வெயிலின் தாக்கத்தை சிறிது குறைத்திருந்தன. கண்ணன் தொடர்ந்து அமெரிக்க ஆங்கிலத்திலேயே தன் உருவத்திற்கு சற்றும் பொருந்தாத குரலுடன் பேசிக்கொண்டே வந்தார். ஆனாலும் அவர் பேச்சில் சற்று கவர்ச்சி இருக்கத்தான் செய்தது. அவரது அலைபேசி சிணுங்கியது. எடுத்து எதுவுமே சொல்லாமல் வெகு நேரம் கேட்டு கொண்டு இருந்து விட்டு.. "If you dont mind, I will drop you to the nearest bus stop. I have some urgent work to do. I am sorry" என்றார். ....(தொடரும்)