Tuesday, August 18, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 10

சூரியன். சூரியன் தன் ஏழு குதிரைகளுள் மஞ்சள் வண்ணக் குதிரையை மட்டும் முன்னால் விட்டு வேகமாக விரட்டிக் கொண்டிருந்தான். சற்று நேரம் வரை முன்னால் வந்து கொண்டிருந்த சிவப்பு நிறக் குதிரை களைத்து மெதுவாக பின் வாங்கிக் கொண்டிருந்த காலை நேரம். இரு குதிரைகளின் தேஜஸ் நிலத்தைப் பொன்னிரமாக்கிக் கொண்டிருந்தது. வானமாகிய பொற்கொல்லன் ஏதேனும் தங்கம் கிடைக்குமா என்று மேகத்தை சல்லடை ஆக்கி சலித்துக் கொண்டிருந்தான். அவனது உத்வேகத்தைப் பார்த்தால் அவன் தன் முயற்சியில் இன்னும் சில நேரத்தில் வென்று பொன்னைப் பிரித்து வெண்ணொளி மட்டும் பூமியை வந்து அடையும் படி செய்து விடுவான்.

ஆனால் பெய்லீ நின்றிருந்த இடம் மட்டும் இருளாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அவன் ஓடையின் மறு கரையில் நின்று இருந்தான். ஓடையின் மறு புறம் முழுவதும் இன்னும் விடிய வில்லை. அவனால் ஓடையை கடந்து வர முடியாது என்பது முந்தைய இரவு நிகழ்ச்சிகளால் உறுதிப் படுத்தப் பட்டு விட்டதால் நான் சலனமற்று இருந்தேன். அவனது தாய் தந்தையை இழந்த துக்கமும், அதற்கு காரணமான என் மீதான கோபமும் அவனது முகத்தில் தெரிந்தது. அவனது பார்வையை தவிர்க்க எண்ணி மறுபுறம் முகத்தைத் திருப்பினேன்.

நேற்று இருட்டில் பார்த்ததால் விளங்காத அவ்விடத்தின் நில அமைப்பு இப்போது நன்றாக தெரிந்தது. நேற்று இரு இணை ஓடைகளாக எண்ணி இருந்த நீர்நிலை வட்டமான அகழி என்பதும், அதில் இருந்த நீர் சிவப்பு நிறத்தில் இருப்பதும் , நான் இருப்பது அந்த அகழியால் சூழப்பட்ட சதுப்பு நிலப் பரப்பு என்பதும் புலனாயிற்று. நான் இருந்த நிலப் பரப்பு பகலாகவும் அகழியின் மறுபுறம் இருளாகவும் இருந்தது. நேற்று குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றம் காலத்தால் அன்று இட மாற்றத்தால் என்பது புரிய எனக்கு அதிக நேரம் எடுக்க வில்லை.

நான் அகழியால் சூழப்பட்ட பகுதியால் இருப்பதால் கால்நடையாக இங்கிருந்து வெளியேறுவது என்பது நடக்காத காரியம். யார் உதவியும் இல்லாமல் இங்கிருந்து வெளியேற முடியாது. எனவே அங்கேயே காத்திருப்பது என முடிவு செய்தேன். கால் இன்னும் ஈரமாகவே இருந்தது. குனிந்து பார்த்த போது காலில் சிவப்பு நிற சாயம் ஒட்டிக் கொண்டிருந்தது. இது பட்டு தான் டைசியா இறந்திருக்க வேண்டும். இந்த நிலப் பரப்பு முழுவதும் இந்த சிவப்பு நிற நீர் சகதியாக கிடந்தது. எனது தொடைப் பகுதியிலும் இந்த சிவப்பு நிற சாயம் ஒட்டிக் கொண்டிருந்தது. நான் சித்ராங்கதாவின் வண்டியில் பையை மடியில் வைத்துக் கொண்டு வந்த போது பட்டிருக்க வேண்டும். அப்படி என்றால் கண்ணன் இறக்கி விட்ட இடமும் இதே போல் சிவப்பு நிற சாயம் படர்ந்த இடமாகவே இருக்க வேண்டும்.

இப்படி யோசிக்க யோசிக்க எதாவது வந்து கொண்டே இருக்கும். ஆனால் புத்தகத்தில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆவலில் யோசனைக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்து விட்டு புத்தகத்தை திறந்து படிக்கலானேன். .. (தொடரும் அடுத்த பாகத்தில் ).....

Monday, August 3, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 9

நீர். வாழ்வின் ஜீவாதாரம். எதையும் கரைக்க வல்லது, கல் நெஞ்சக்காரர்களின் மனதைத் தவிர. வீரியம் ஆனவை நீரில் கரையும் போது நீர்த்துப் போகின்றன. வீரியமற்றவை நீரில் கரையும் போது நீர் அப்பொருளின் கரிசல் ஆகின்றது. நெருப்பு பொருளின் தன்மை பார்த்து செயல்படாத தாய், ஆனால் நீர் பொருளின் தகுதி அறிந்து வழங்கும் குரு. எனவே நீரின் தன்மை என்று உரத்துச் சொல்வதற்கில்லை. வேதியியல் படி நீர் நிறம், மணம், சுவை அற்றது தனித்திருக்கையில். ஆனால் உலகில் எதுவும் தனித்து தன்னிச்சையாக இருக்க இயலாது.

கங்கை நதி விஷ்ணுவின் காலடியில், அரங்கனின் காலை வருடிச் செல்லும் காவிரியின் சகக் கிழத்தியாய், இருந்த புராண காலத்தில் பகீரதன் என்னும் மன்னன் வாழ்ந்து வந்தான். அவனே கங்கை விஷ்ணுவின் காலடியில் இருந்து சிவனின் தலைக்கு இடம் பெயரக் காரணமாய் இருந்தான். விஷ்ணுவின் காலடியில் இருந்த வரை மென்மையாய் இருந்தவள் சிவனின் தலைக்கு வந்ததும் உக்ரவதி ஆனாள். இந்த உக்கிரம் தலைக்கு வந்ததனால் வந்த தலைக் கனம் அன்று. தெய்வத்தின் அடி வருடி புண்ணியம் பெறுதலையே தொழிலாய்க் கொண்டவளுக்கு பாவிகளின் உடல் வருடி பாவத்தை சம்பாதிப்பது கொடூரமான அவஸ்தையாய் இருந்தது. அவள் மனம் அறிந்து மாதேவன், பாவிகளின் பாவங்கள் கங்கையால் நீர்த்துப் போகக் கடவது என்றும் புண்ணியர்களின் புண்ணியங்கள் கங்கை நீரின் வளமையால் வலுத்துப் போகக் கடவதேன்றும் அருளி கங்கையை புண்ணியம் மட்டுமே பெரும் புண்ணிய நதி ஆக்கினான்.

எதிர்பாராத சம்பவம் ஒன்று என் கண்ண முன்னே நடந்தது. எதை துரதிர்ஷ்டம் என எண்ணினேனோ அதுவே அதிர்ஷ்டமாய் முடிந்தது. அவனைத் தாக்குவதற்காக எறியப்பட்ட டார்ச் அவன் விலகியதால் பின்னால் இருந்த ஓடை நீரில் விழுந்தது. விழுந்த வேகத்தில் நீர்த் திவலைகள் காற்றில் சிதறின. ஒரு துளி அவன் மீது பட்டிருக்க வேண்டும். அவன் கூச்சல் போட்டுக் கொண்டே தன் நினைவின்றி இங்கும் அங்குமாய் ஓடி தவறி ஓடையிலே விழுந்து மேலும் துடித்துக்கொண்டே துடிப்படைக்கினான்.

"Dad". இது அந்தப் பொடியனின் குரல் தான். அவன் வருவதற்குள் நான் தப்பித்தாக வேண்டும். வேகமாக ஓடையை நோக்கி ஓடினேன். அவன் என் பின்னால் விரட்டிக் கொண்டு வந்தான். "Bailey!.. Dont go near him. Your life is much more important to us" என்று டைசியா கத்தியதும் மறு பேச்சில்லாமல் திரும்பி ஓடி விட்டான். நான் இதற்குள் ஓடைக்குள் இறங்கி விட்டிருந்தேன். ஒரு வழியாக பெரும் கண்டத்தில் தப்பித்த சந்தோஷத்தில் மறு கரை அடைந்தேன்.

பொழுது நன்கு இருட்டி இருந்தது. களைப்பு மிகுதியால் அங்கேயே படுத்து உறங்கி விட்டு இருந்தேன். நான் விழித்து எழுந்த போது நன்கு விடிந்திருந்தது. குளிர் குறைந்து வெயில் தன் வீரியத்தைக் கூட்டத் தொடங்கி இருந்தது. கண்களைக் கசக்கிய படியே திரும்பினால் அந்தப் பொடியன் பெய்லீ கும்மிருட்டில் (?!) கொலை வெறியோடு வெறித்துக் கொண்டிருந்தான்.. (தொடரும்)...