Monday, January 25, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 3

வெயிலோனின் முதல் கரணம் மண்ணைத் தொட்டதும் அங்கம் எங்கும் வெட்கம் பரவ நிலம் சிவந்தாள் பூமி. ஒவ்வொரு முறைத் தொடும் போதும் முதல் முறைத் தொடும் கன்னி போல் சிவப்பதால் என்னவோ பூமியை ஒரு நாள் கூட மலடியாய் விட்டதில்லை கதிரவன். அவன் தரும் மக்கட் செல்வங்களுக்கு எனவே அவன் வரும் நேரம் வரை தன்னை அலங்கரித்து அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து பிரகாசமாய் சிரிக்கிறாள். அந்த அன்னையின் முலைப்பால் குடித்துப் பெருகியவன் சமுத்திரராஜன், ஆனால் அவன் அந்த முலையைத் தொட்டதும் இல்லை கண்டதும் இல்லை. பால் குடிக்க தெரியாத தன் குழந்தைக்கு குழல் கொண்டு பீய்ச்சிப் புகட்டும் தாய் போல் நதியாய் அவன் வாயில் விழுந்து கொண்டே இருக்கும் படி செய்தாள். பால் வாய் புகும் இடம் தான் இந்த படகுத் துறை. அன்றும் தன் கிழத்தி பாலூட்டும் அழகைக் கண்டு பூரித்து நின்றான் கதிரவன், அதனால் தானோ என்னவோ அந்த நிமிடம் நீண்டு இருந்தது. பிள்ளைக்கு அமுதூட்டும் அன்னையை மாற்றான் கண் கொண்டு காண்பது தவறு என்று எண்ணினார்களோ என்னவோ படகுக்காரர்களோ, பயணிகளோ அல்லது வியாபாரிகளோ தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.

விளைவு, படகு காலியாக நின்றது இந்திரசேனனைத் தவிர. எத்தனை மூடைகள் எல்லாம் எங்கே இருந்தன? "வருக இந்திரசேனரே! கணவனின் கரம் பட்டு சிவந்து நிற்கும் தாயின் மடியில் கால் பதிக்கும் இளம் மகவாகுக. தாய்மை கடனுணர்ந்து தாய் இயநிலை ஏகுவள்". புதியவன் புன்னகை பூத்திருந்தான். "வியன்கொளல் வேண்டா. உதயம் காண் புத்தோர் நிலை கண்டுளம். நிறைமுகம் காண பொன்னி தனித்தாளிலை மாற்சிம்மனும் வந்துளம். மால் சிம்மன். " கால் பதித்தான். செம்மை நீங்கி மஞ்சள் பூசினாள். "கண்டீர்.. இயநிலை ஏகினள்." "வணக்கம்" என்றான். 'இவனுக்குப் புரியுமா?'. "முகமனுக்கு நன்றி. வணங்குதல் இறைவற்கே உரித்தாம். நிமதும் உரித்தாகுக." 'இதற்கும் ஒரு விளக்கம். பேசுவதற்கே ஒத்திகை பார்க்க வேண்டும் போல் உள்ளதே. எதுவும் பேச வேண்டாம் இல்லை இல்லை பேசற்க'..

கடல் நடந்து நிலம் பதித்ததும், "இந்திரசேனரே! சம்புத்தீபத்தின் முறைமைப் படி விருந்து எதிர்கொள்வம். நாவற்தழை அணிசெய் தாழைப்பாகையும், அடம்ப ஆரமும் ஏற்றுக்கொள்வீர்" என்றபடியே ஒரு மாலையும், ஒரு தொப்பியும் அணிவித்தான். அந்நேரம் எதோ ஒரு மேல சத்தம் கேட்டது. "நாவாய் பம்பை, திணையோன் கடலோனுக்கு வணக்கம் கூறி விழா தொடங்குதல் மரபு. தொடரும் வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்." 'இந்திர விழா தொடங்குகிறது போலும்' இதுதான் இந்திர சேனனுக்கு புரிந்தது. அவன் மனம் படகுத் துறையில் உள்ள சந்தையில் லயித்தது. ஒருவன் குழல் ஒன்றில் இருந்து பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டு இருந்தான். வெளிநாட்டினர் அவனைச் சூழ்ந்து இசையில் லயித்திருந்தனர். வாசித்தது பூபாளத்தை ஒத்திருந்தது. "இவன் ஊரன், அது மருத யாழ்" என்றான் மால் சிம்மன்.

அருகில் உப்பு, சிப்பி, மீன், முத்துக்கள் என வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. மீன் உணவுகள் சுடச் சுட பரிமாறப் பட்டன. முரசம் ஒலித்த பொழுது மட்டும் திசை நோக்கி வணங்கி விட்டு அவரவர் வேலையில் ஈடுபட்டனர். சிறிய சந்தை அது. தொலைவில் மீன்கள் காய்ந்து கொண்டு இருந்தன. அருகில் மீன்பிடி படகுகள் நிறுத்தப் பட்டு இருந்தன. மாற்சிம்மனும் ஒவ்வொன்றுக்கும் எதோ பெயர் சொல்லிக்கொண்டே வந்தான். "அவர்கள் பரதவர், அந்தப் படகுகள் திமில் என அறியப்படும். பெரும்பாலான பரதவர் மருவூர்த் துறையில் வசிக்கின்றனர்" என்பது அவன் சொன்னதன் சுருக்கம். "புலரியில் தொடங்கினம். பரதவர் கடலேகும் காலமாம், நெருங்கி கரை சேர்வாம்" என்றான். படகுத் துறைக்குச் சென்றோம். எங்கள் இருவர் தவிர இன்னும் நால்வர் மட்டும் இருந்தனர். ஆறு பேருக்கு ரொம்பவே பெரிய படகு அது. படகின் மேல் தளத்தில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். சூரியனை நோக்கி சென்ற படகு சிறிது நிதானித்து தெற்கு பின் மேற்கு என நகர்ந்தது.. (தொடரும்) ..........

Sunday, January 10, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 2

மாற்சிம்மன் கழிமுகத்தீவிற்கு இது முதல் முறை அல்ல என்றாலும், இம்முறை வந்திருப்பதன் நோக்கம் சாமானியம் ஆனது அல்ல என்பதால், தீவே புதியதாய் தோற்றம் அளித்தது. முதல் ஜாமத்திலேயே தந்தையாரால் எழுப்பப்பட்டதும், பின் அவரது தனி ரதத்தில் பட்டினப்பாக்கத்திலிருந்து மருவூர்பாக்கம் படகுத் துறையை அடைந்ததும் சில கணங்களில் நடந்தது போல் இருந்தது. இதோ படகு இன்னும் அரை நாழிகையில் கழிமுகத்தீவை அடைந்துவிடும். இப்பொழுதே தீவின் பிரமாண்டம் படிப்படியாக குறையத் தொடங்கி இருந்தது. பஞ்சபூதங்களுள் வெளியும் நிலனும் அருகாமையில் அதன் பிரமாண்டத்தை குறைத்துக் கொள்கின்றன. நீரும் காற்றும் இதற்கு எதிரணி. நெருப்பு என்றுமே தன்னை குறைத்தும் கூட்டியும் காட்டியதில்லை. புதியவர் அதிலும் முக்கியமானவர் வருகிறார் என்றால் தந்தை தானே நிறைமுகம் சென்று வரவேற்பது தான் வழக்கம். நகரவழக்கு கழிமுகம் என்றாலும் கூட தந்தை ஒரு போதும் கழிமுகம் என்று கூறியதில்லை. அதை நிறைமுகம் எனக்கூறி அதற்கு 'இடக்கரடக்கல்' என்று இலக்கணக் குறிப்பும் கொடுப்பார். காவிரி கடலில் கழிவதில்லை எனவும் அங்கு சென்று நிறைவதாகவும் கூறுவார். மேலும் விருந்தினர் விடைபெறும் இடத்திற்கு கழிமுகம் என்ற பெயர் வைப்பது விருந்தோம்பலுக்கு எதிரானது. விருந்தினரை நிறைமுகதுடன் வரவேற்பதாலும், நிறைமுகதுடன் விடையளிப்பதாலும் அத்தீவிற்கு 'நிறைமுகக்காயல்' என்பதே சாலச் சிறந்த பெயர் என்பது அவர் வாதம்.

தந்தையோ பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் பெருவணிகர்களில் முன்னவர். அவரது வர்த்தகங்கள் எல்லாம் புகார் துறைமுகத்தில் தான் நடக்கும். நிறைமுகத்தீவுத் துறையோ சிறு வணிகர் வந்திறங்கும் இடம். இங்கு அவர் வாணிப நிமித்தமாக வர சாத்தியமில்லை. ஆயினும் அவர் புகார்த்துறைக்கு சென்றதை விட நிறைமுகத்துறைக்கு சென்றது தான் அதிகம். அங்கிருந்து அவர் அழைத்து வரும் நபர்களுடன் ஏதோ ஒரு பரிமொழியில் பேசிக்கொள்வார். அதன் பெயர் மதுரமொழி என்பதும், 'அழியாப்புலம், புரந்தரன், மகா, மாயர்கள், மதுரர்கள்' ஆகிய பெயர்கள் அதிகம் அடிபடும் என்பது மட்டுமே தெரியும். இவர்களில் புரந்தரன் என்பவர் தந்தையின் நெருங்கிய நண்பர். பல முறை அவரைப் பார்த்தும் இருக்கிறான். அவருக்கு முதன்மை வீதியில் ஒரு பெரிய மாளிகை இருந்தும் எப்பொழுது வந்தாலும் அவர்கள் வீட்டில் தான் தங்குவார். அவரது மாளிகையில் வேலையாட்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் தந்தையார் தான் அவரை அங்கு செல்ல விட்டதில்லை. நேற்று முன்பகல் ஒரு பெரிய அம்மாள் அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து அந்த வீட்டில் பற்பல வேலைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று முன்னிரவு வரை தந்தை அங்கிருந்து தானே முன் நின்று வேலையை மேற்பார்வை இட்டார். வழக்கமாக பெரியகருப்பர் தான் இது போன்ற வேலைகளை பார்த்துக் கொள்வார். ஆனால் தந்தை தானே முன்னின்று கவனிப்பது ஆச்சர்யம் அளித்தது. அதுமட்டும் அல்லாமல் அந்த அம்மாளை வரவேற்க தாயாரையும் நிறைமுகத்தீவிற்கு நேற்று அழைத்துச் சென்றது, அவர்கள் பெண் என்பதால் நடந்த ஏற்பாடு என்று நினைத்தவனுக்கு தந்தையின் இந்த அக்கறை அந்த அம்மாள் ஏதோ முக்கியமானவர் என்று அவனுக்கு உணர்த்திற்று.

இன்று காலை வரை அந்த அம்மாள் தான் முக்கியமானவர் என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு இந்த தடபுடல் எல்லாம் வரவிருக்கும் ஒரு இளைஞனுக்கு என்றவுடன் அவனைக் காணும் ஆவலுடன் அவன் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகம் ஆயிற்று. தந்தையின் தனி ரதம் ஒன்றும் சாமானியம் அல்லவே. அதில் அமர்ந்து செல்வதற்கே ஒரு தனித் தகுதி வேண்டுமே. உண்மையில் அவன் அமர்வதே இது தான் முதன்முறை. அவர் கூறியதின் சாராம்சம் இதுதான் "இந்திரசேனன் என்னும் இளைஞன் நிறைமுகத்தீவின் சீன யவனர் படகுத் துறைக்கு வருவான். அவன் புரந்தரனுக்கு இளவல், அவ்வம்மையாரின் புதல்வன். அவன் உரோமாபுரி குருகுல வாசத்திலிருந்து வருகின்றான். அவனை அனைத்து மரியாதைகளுடன் அழைத்து வர வேண்டும்." இவ்வளவு தான். சரி உரோமாபுரி மேற்கில் இருக்கிறது, சீனமோ கிழக்கில் இருக்கிறது, இவன் ஏன் சீனப் படகுத் துறைக்கு வருகிறான். மேலும் அந்த அம்மையார் புரந்தரனின் தாயார் என்பதும் அவனுக்கு புது தகவல். நேற்று முன்னிரவு வரை ஏற்பட்ட களைப்பினால் தான் அவர் தன்னை அனுப்புவதாக முதலில் எண்ணினான். ஆனால் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது, அவனின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அவன் சீனப் படகுத்துறைக்கு வந்த போது கரையில் சிறு கடைகள் திறக்கப்பட்டு கொண்டிருந்தன. வழக்கமாக காணப்படும் பல கடைகள் மறைந்திருந்தன. இந்திரவிழாவின் காரணமாய் கடையை நகருக்குள் திறந்திருக்கலாம். கடைகள் குறைவு எனினும் வணிகர்கள் அதிகமாய் வரும் பொருளுக்காக காத்திருந்தனர். அதிலும் சீனம் தான் கற்பூரம், மூலிகைகள், வாசனையூட்டும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஏற்றுமதியில் முதலிடம். விழாக் காலங்களில் இவற்றுக்கு ஏற்படும் தேவை அதிகம் என்பதால் சீன வணிகர்கள் வரத்தும் சமீப காலங்களில் அதிகரித்து இருந்தது. ஆனால் தேவை அதிகம் என்பதால் இவற்றின் விலை விண்ணை எட்டுவது ஒவ்வொரு விழாவின் போதும் நடப்பதே. சில வணிகர்கள் அதிக இலாபம் ஈட்டும் நோக்குடன் நேரடிக் கொள்முதல் செய்ய இங்கு வந்திருப்பது இயல்பு என்றே பட்டது. அந்தக் கூட்டம் சலசலப்பின்றி இருப்பதில் இருந்து இன்னும் படகு வரவில்லை என்று தெரிந்தது. தந்தை அளித்த சித்திரத்தை எடுத்து நோக்கினான். எந்தச் சித்திரக்காரன் எனத் தெரியவில்லை, இந்த அளவிற்கு தத்ரூபமாக வரையும் சித்திரக்காரன் புகாரில் நிச்சயம் இல்லை. மேலும் இது சித்திரம் என்பதை விட அவனின் நிழல் அல்லது நகல் எனும்படி இருந்தது. தவிரவும் சீனத்திலோ, பாரசீகத்திலோ இத்தகைய காகிதங்கள் நிச்சயம் இல்லை. வளவளப்பாய் இருந்தது. சித்திரத்தை மனதில் இருத்திக் கொண்டான். சலசலப்பு ஏற்பட்டது. படகு வந்து கொண்டிருக்கவேண்டும். நிமிர்ந்து நோக்கினான்.. ஒரு படகு சீனக் கொடியுடன் வந்து கொண்டு இருந்தது. ... (தொடரும்) ....

Monday, January 4, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 1

எதிர்பாராமல் தள்ளப் பட்ட இந்திரசேனன் சுதாரித்த போது ஒரு படகில் கடலில் போய்க் கொண்டு இருந்தான். விடிவதற்கு இன்னும் சில நேரங்களே இருக்கும். வெள்ளி முளைத்திருந்தது. அவனுடன் இன்னும் பல வணிகர்கள், அரச குடும்பத்தினர், பாமரர்களும் படகில் இருந்தனர். மார்கழி மாதத்தின் முன் பனி தன் பணியை செவ்வனே செய்தது. கைகளை தண்ணீருக்குள் வைத்தான், சற்றே வெது வெதுப்பாய் இருந்தது. பயணிகளில் பலர் அரை உறக்கத்தில் இருந்தனர். பெரும்பாலனவர்களிடம் பயணச் சுமை என்று எதுவும் இல்லை. வைத்திருந்தவர்களும் ஓரிரு மூடைகள் மட்டுமே வைத்திருந்தனர். படகில் இருவர் துடுப்பு வலித்துக் கொண்டு இருந்தனர்.

"விஷயம் தெரியுமா? மஹா அழியாப்புலத்திற்கு நேற்றிரவு வந்து விட்டாராம். மன்னர் புரந்தரன் அவரை நேரே சென்று வரவேற்று உபசரித்தாராம்." யாரோ ஒரு யவனர் பேசிக் கொண்டு இருந்தார். "மெதுவாகப் பேசு. யாரேனும் கேட்டால் விபரீதமாகி விடும். உனக்கு எப்படி இது தெரியும்" மற்றொரு யவனர். "மதுர மொழி தெரிந்தவர் யாரும் இங்கு இருக்க வாய்ப்பில்லை. பயம் வேண்டாம். நீயும் மதுர மொழியிலேயே பதிலளி. இங்கு வர அழியாப்புலம் விண்வெளி நிலையத்தில் காத்திருந்த போது புரந்தரனிடம் வேலையில் இருக்கும் என் உறவினனைச் சந்தித்தேன். அவன் தான் கூறினான்." 'ஓஹோ புரந்தரன் பேசிய மொழி மதுர மொழியா' ... "மகாவிற்கு மதுரமொழி தெரிந்ததால் சில வினாடிகளிலேயே அவர்கள் சந்திப்பு நிறைவடைந்து விட்டதாம். அதன் பின் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை." "மிக அதிக வேகத்தில் வார்த்தைப் பிரயோகம் உள்ள மொழி மதுர மொழி என்பது தெரிந்ததாயிற்றே. அதனால் தானே அதற்க்கு இத்தனை பெயரும் புகழும். மேலும் என்ன கூறினான் உன் உறவினன்?" 'அதனால் தான் கதையை சில நொடிகளில் முடிக்க முடிந்ததா?'

"ஏதோ ஒரு பெண்ணின் சடலம் விண்கலத்தில் கிடைத்ததாகவும் அது பற்றியே அவர்கள் உரையாடல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறானாம். மஹா வந்த செய்தி மட்டுமே ஊடகத் துறைக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாம். வேறு எதுவும் இப்பொழுது வெளியிடும் எண்ணம் இல்லையாம்." "இப்பொழுது எங்கு இருக்கிறார் மகா?" "தெரியவில்லை". "சரி இதோடு விட்டு விடுவோம். நீங்கள் முதல் முறை புகார் வருகிறீர் அல்லவா. வியப்பில் வாயடைத்துப் போகப் போகிறீர்." "அப்படியா.. இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் உங்கள் புகார் நகரம்." "அடத்தம்பி.. விடிவதக்குள் கழிமுகத்தீவை அடைந்து விடுவோம். இந்தத் தீவு காவிரி கடலோடு கலக்கும் கழிமுகத்தில் இருக்கும் ஒரு காயல் பிரதேசம். கழிமுகத்தில் உள்ள எல்லா தீவுகளையும் மரப் பாலங்களால் இணைத்து ஒரே தீவாக மாற்றியிருக்கிறார்கள் புகார் வாசிகள். இந்த மரப்பாலங்கள் அல்லாது படகுகளும் தீவுக் கூட்டங்களை ஒன்றிணைக்கின்றன.

புகார் நகருக்கு வடபுறம் அலையாத்திக் காடுகளும், தெற்க்கே மணல் குன்றங்களும் இருக்கின்றன. இவற்றுக்கு இடையில் கரையில் இருந்து சுமார் 15 கல் தொலைவிற்கு இந்த தீவுக் கூட்டங்கள் பரந்து கிடைக்கின்றன. யவனர்களுக்கு என்றே உருவாக்கப் பட்ட இந்த தீவு மருவூர்ப்பாக்கத்துடன் அதிவேகப் படகுகளால் இணைக்கப் பட்டுள்ளது. இங்கிருந்து நகரத்துக்கு செல்ல நகர நாயகரின் அனுமதி பெற்றே செல்ல முடியும். இந்தத்தீவில் நடக்கும் அனைத்து கொடுக்கல் வாங்கல் விவகாரங்களுக்கு சுங்கம் வசூலிப்பதில்லை. பன்னாட்டு வணிகர்களின் வரவை ஊக்குவிக்கவே இந்த ஏற்பாடு. உள்ளூர் வணிகர்கள் சுங்கம் செலுத்தி நகருக்கு கொண்டு செல்வர்.

வெளி நாட்டு பயணிகள் முதலில் இறங்குவது இந்த தீவில் தான். மக்கள் போக்குவரத்து கண்காணிப்பாளர் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் அனுமதி பெற்ற பின் தனி படகில் நகரத்திற்கு கொண்டு செல்லப் படுவர். நாம் கழிமுகத் தீவை நெருங்கி விட்டோம் என்று தெரிகிறது." "ஆம் ஏதோ ஒரு கரை தெரிகிறது". மிக அருகில் சற்றே ஆரவாரமிக்க கடற்கரை தென்பட்டது. சிறு வியாபாரிகள் படகை எதிர் நோக்கி காத்திருந்தார்கள். துடுப்புகள் அல்லாது அலைகளும் படகை கரையில் கொண்டு சேர்க்க துணை வந்தன. படகோட்டி படகில் இருந்து சிறு வடம் ஒன்றை கரையில் எறிந்தான். சூரியன் எழ இன்னும் நேரம் ஆகும் என்று தெரிந்தது. படகோட்டிகள் கடலில் இறங்கி படகை தள்ளினர். வியாபாரிகள் மற்றும் சுமை தூக்குவோர் படகை சூழ்ந்து கொண்டனர்.... (தொடரும்)...