Sunday, July 5, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 4

வானம் இருண்டு இருந்து. கோபுர தீபம் அணைந்தாலும் ஆலயத்தின் பள்ளியறை தீபம் மட்டும் இன்னும் அமிழ்த்தப் படவில்லை. நிலவு முன்னைக் காட்டிலும் இன்னும் பிரகாசமாய் அதி பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டு இருந்தது. பால் நிலவு, நிலாச் சோறு எல்லாம் அர்த்தம் அற்றதாகி இருந்தது. தலைவனைப் பிரிந்த தலைவி பாலை நிலவைப் பாழ் நிலவே என வர்ணித்தது மட்டும் ஏனோ அர்த்தம் செறிந்ததாய்த் தோன்றியது. இருந்த வெளிச்சமும் நிலவினுடயது. வெயிலுக்கு பயந்து பாம்பின் பட நிழலில் ஒதுங்கிய தவளையின் கதை ஏனோ நினைவில் வந்து உறுத்தியது. ஏன் இந்த எண்ணம். பாம்பும் நிலவும் எப்படி ஒன்றாக முடியும். இருவரும் பரம எதிரிகள் என்று இலக்கியமும் அம்மாவும் கூட சொல்லி இருக்கிறார்கள். ஒரு வேளை நாக பூஷண சந்திர மௌலியாகிய சிவன் சமரசம் செய்து இருப்பரோ. இப்பொழுது கடவுளையும் நான் நம்புவதாய் இல்லை. எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மோகினி தான். அவள் தான் என்னைக் காப்பாற்றுவாள்.

ஆம். காப்பாற்றினாள். நான் கரையில் ..ஓடையின் அக்கரையில்... மோகினியின் அக்கறையில்... நிலவின் ஒளி ஓடை நீரை இரத்தமாய் மாற்றிக் காண்பித்தது. அது இரத்தம் தானா என்று ஊர்ஜிதம் செய்ய நான் விரும்ப வில்லை. அதோ அந்த ஆல மரம் வாரல் என்பன போல் மறித்துக் கை காட்டிற்று. அந்த மோகினி அந்த மரத்தின் பின் சென்று தானே மறைந்தாள். ஒரு வேளை அது அவள் தற்கொலை செய்த இடமாய் இருக்குமோ. ஒரு வேளை அவள் மோகினியாய் இல்லாமல்லிருந்தால்? நான் அம்மரத்தை நோக்கியே செல்வது எனத் தீர்மானித்தேன். ஆனால் நான் கேட்பது என்ன?

"He is there"ஒரு ஆண் குரல் . "Let him come out of the stream" இது பெண்.

முதலில் ஒலித்தது கண்ணன் குரல். அடுத்தது மோகினி. அவர்கள் இங்கே தான் இருக்கிறார்கள். மிக அருகில். நான் ஓடையில் இருந்து வெளியே வரக் காத்திருக்கிறார்கள். கண்ணனை சந்திக்கும் ஆவலில் வேகமாய்.. அந்தக் குரல்கள் எண்ணி இருக்காத வேகத்தில்.. ஓடையில் இருந்து எகிறிக் குதித்து வெளியேறினேன். குரல் வந்த திக்கில் உள்ள ஒரு மரம் சலசலத்தது.

கண்ணனின் குரல் கண்ணனின் உருவத்திற்குப் பொருந்தவில்லை என்றேன் அல்லவா. இதோ இங்கே என் கண் முன் ஓடி வரும் உருவத்திற்கு கச்சிதமாய்ப் பொருந்தும். ஆனால் அந்த உருவம் ஒரு மனிதனுடயது இல்லை. நான் அதைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டு நின்றேன் என்றால் அது என்னைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடி விடும். நான் அங்கு நிற்கவில்லை. அதோ அந்த ஆல மரத்தை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறேன். மூச்சிரைக்க. என் பயணப் பையுடன். அந்த ஆலமரம் தான் எனக்கு நிம்மதி தரும் என, எந்த விதமான நிம்மதி என அறியாமல்... (தொடர்கிறது...)

No comments: