Sunday, July 5, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 5

இருள் நீடிக்கிறது. பிரபஞ்சத்தில் இல்லாத இருள். பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்களால் ஒளி உண்டு. இங்கு அதுவும் இல்லை. இங்கு எதுவும் இல்லை. இருள் மட்டும் தான் இருக்கிறது. அதை நிலவால் களவாட இயலாது. இவ்விருள் நிலவின் கைக்கு எட்டாத தூரத்தில். ஆனால் இந்த இருளும் நிரந்தரம் அல்ல. நிலவால் கூட களவாட இயலாத இருளை மின் மினிப் பூச்சிகள் களவாட இயலும். முதன் முறை வெளிச்சத்திற்கு பயப்படுகின்றேன். மின்மினிப் பூச்சிக்கும். அந்த மின்மினிப் பூச்சிகள் மட்டும் இங்கு வந்தால் நான் இனி வெளிச்சமே காண முடியாது எனத் தோன்றியது . நீல மின்மினிகள். ஆம் நீல நிற LED மாதிரி பளிச் என்ற வெகு தூரம் காணக் கிடைக்கின்ற பிரகாசமான நீல நிற மின்மினிகள்.

இப்போது சொல்ல வில்லை என்றால் எப்போதுமே என்னால் சொல்ல முடியாது என எண்ணுகிறேன். கண்ணனின் குரலுக்கு ஏற்ற மனிதன் அல்லாத உருவம் துரத்துவதாய் சொன்னேன் அல்லவா. ஆனால் அதை முழுவதுமாய் மனிதன் இல்லை என்று மறுத்துக் கூற முடியாது. அரை மனிதன். அரை என்றால் உயரத்தில் அல்ல. பரிணாமத்தில். சற்றே குரங்கு என்று சொல்லி விடக் கூடிய அரை மனிதன். அரையில் ஏதுமில்லா அரை மனிதன். புகார் வச்சிரக் கோட்டத்து காபாலிகனையும் கால் தூசி என்று என்ன வைக்கும் கொடுமையான உருவம் கொண்ட இரத்தம் குடிக்கும் காட்டேரி. இரத்தக் காட்டேரி. ஆங்கிலத்தில் Dracula. அவன் வாயில் வீசும் பசும் இரத்தத்தின் கவுச்சி நெடி இன்னும் என் நாசியில் நீடித்து இருக்கிறது. அவன் வாயின் கோரப் பற்களின் வாயிலாக குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவனாய் இருக்கலாம் எனக் கருத வாய்ப்பளித்தான். கண்கள் மிருகங்களுக்கே உரித்தான இருட்டிலும் பளிச் என்று தெரியும் ஒளிமிக்க கண்களாய் இருந்தது. நீளமாய் இருந்தது. ஆனால் மிக நீலமாய் இருந்தது. அவன் எந்நேரத்திலும் வரக் கூடும். அவன் அந்த நீல மின்மினிப் பூச்சிகளைக் கண்களில் ஏந்தி எக்கணமும் வரக் கூடும்.

அதற்கு முன், என் சுமையைக் குறைத்தாக வேண்டும். பையை அருகில் தென்பட்ட ஒரு விழுதில் கட்டித் தொங்க விட்டேன். இன்னும் இருள் இருக்கிறது. கண்களுக்குப் பழகாத இருள்.அரை மனிதனின் கண்களுக்குப் பழக்கப் படாத இருளாகவே நீடிக்க வேண்டும். இருள் நீடிக்கின்றது. இருள் இன்னமும் நீடிக்க வேண்டும். மின்மினிப் பூச்சிகளால் களவாட முடியாத இருளாகவே நீடிக்க வேண்டும். ஆனால் என் கண்களுக்கு எட்டாத ஓடைக் கரையில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டு தானே இருக்கிறான். அந்த மின்மினிகளுக்கு ஒளியை ஏற்றிக் கொண்டு தானே இருக்கிறான்.

ஒளி பெற்ற மின்மினிகள் ஆறு. ஆறும் ஆல மரத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தன. பறந்தன அல்லது மிதந்தன. அருகில் மிக அருகில் ஒரு குழந்தையின் சிணுங்கல். "I wanna taste his blood". அதே நாராசமான அமெரிக்க ஆங்கிலம். தமிழ் மழலையின் சங்கீதம் ஆங்கிலத்தில் சிறிதும் துளிர்க்கவில்லை. ஆனால் சங்கீதமாய்க் கேட்டன நான்கு காதுகளுக்கு. மோகினி உரைத்தாள் "Dear, just close your eyes for awhile. I will catch that insect for you". "Darling, Dont open your eyes. Otherwise that insect will trace us and will try to escape." இக்குரல் கண்ணனுடயதாய் இருந்தது. மின்மினிகள் மறைந்தன. (தொடர்ந்து வருகின்றது)...

No comments: