Tuesday, July 14, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 6

இருள். அனைத்தையும் விழுங்கக் கூடிய வல்லமை கொண்ட இருள். தன்னை நிகர்த்தார் இவ்வுலகில் இல் எனும் இறுமாப்பு கொண்ட இருள். பிரபஞ்சத்தின் கருந்துகள்கள் எதையும் விழுங்கி, விடுகின்ற ஏப்பத்தயும் கூட வெளிவிடாமல் அதையும் விழுங்கிக் கொள்ளுமாம். இருள் தன்னேர் இல்லான் ஆயின் இன்று உலகத்தில் இருளன்றி எதுவும் இராதே. இருள் மண், மரம், காடு, நீர் ஏன் மனிதர்களின் நம்பிக்கைகளைக் கூட விழுங்கி விடும் வல்லமை கொண்டது. இருளில் மனிதன் பாம்புக்கும் பேய்க்கும் பயப்படுவதில்லை. இருளுக்கு மட்டுமே பயம் கொள்கின்றான்.

மகாபாரதத்தில் வரும் சிறு சிறு சம்பவங்களில் பாண்டவர்களின் முதல்வனான யுதிற்றனின் பெருமை கூறும் ஒரு சம்பவம் இருள் பற்றியது. பறவையின் கண்களை மட்டுமே குறி பார்த்து அர்ஜுனன் வென்ற பின் நடப்பதாய் வரும் சம்பவம். இம்முறை துரோணர் ஒரு சிறு அறையைக் கொடுத்து பாண்டவர்களைத் தனியாயும் கௌரவர்களைத் தனியாயும் நிரப்பச் சொல்கிறார். கௌரவர்கள் தம் அறையில் வண்டி வண்டியாய்ப் பொன்னை நிரப்பி, அறை நிறைய பொன் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். துரோணர் ஒரு அம்பை கதவிடுக்கில் விட்டு அப்போது அந்த அம்பு இருந்த இடம் நிரம்பாமல் இருப்பதால் அவர்கள் தோற்றதாய் அறிவிக்கிறார். பாண்டவர்கள் தம் அறையில் ஒரு சிறு அகல் விளக்கை ஏற்றி வைத்து அவர்கள் அறையில் வெளிச்சம் நிறைந்து இருப்பதாய்ச் சொல்கின்றனர். அவர்களே வென்றதாய் அறிவிக்கப் படுகின்றனர்.

அரக்கர்கள் பிரம்மாவிடம் வரம் கேட்கும் பொது இன்ன இன்ன உயிர்களால் தன்னுயிர் அழியாதிருக்க வரம் வேண்டுவார்கள். அவர்களது பட்டியல் தன்னை விட மிகச் சிறந்தவர்களை உள்ளடக்கியதாய் இருக்கும். அதன் பின் எல்லா புராணங்களையும் போல அவர்களின் பட்டியலில் இல்லாத ஒரு அவதாரம் அவ்வரக்கர்களை அழிக்கும். அதே அரக்கர்கள் போல் தான் இருளும் இறுமாப்பு கொண்டு அலைகின்றது. அதற்கென்ன தெரியும் ஒரு சிறு அகல் விளக்கு எல்லா இருளையும் களைய வல்லதென்று.

என்னால் தப்பிக்க முடியுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அவர்கள் உரையாடலில் அவர்கள் கண்களைத் திறந்தால் நான் தப்பிக்க முடியும் என்றொரு வாக்கியம் வந்தது என்னுள் மேற்கண்ட கேள்வியை எழுப்பி இருந்தது.
இந்த கரடு முரடான இடத்தில் காலடி அரவம் கேட்காமல் அவர்கள் நகர்வது விந்தையாய் இருந்தது. நிச்சயம் அவர்கள் நகர்கிறார்கள் என்று என் உள் உணர்வு மட்டும் உரைத்துக் கொண்டிருந்தது. எந்த நொடியும் அவர்கள் என்னைப் பிடித்துக் கொள்வார்கள் என்ற நிலையில் என் கடைசி நொடிகளை நான் என் கை விரல்களில் எண்ணிக் கொண்டிருந்தேன்.

"I got him" மோகினியின் குரலைத் தொடர்ந்து இரு மின்மினிகள் என் கால் எட்டும் தூரத்தில் அதாவது என் பை தொங்கிக் கொண்டு இருந்த இடத்தில் தோன்றின. அவள் பையை நானாக நினைத்துக் கத்தி இருந்தாள். இப்பொழுது அவள் என்னைப் பார்த்திருப்பாள். என் மரணத்தை சிறிது நேரம் தள்ளிப் போட கிடைத்த வாய்ப்பாக எண்ணி அவளை எட்டி உதைத்தேன். ஒரு பெரிய அலறலோடு பையைப் பிடித்த வண்ணம் அவள் காற்றில் பறந்து கொண்டிருந்தாள். அவளில் இருந்து ஒரு தனி ஒளி பிரிந்து ஆலமரத்தின் குடைக்கு வெளியே விழுந்தது. அது ..(தொடரும்)....




2 comments:

சென்ஷி said...

வித்தியாசமா இருக்குது. பொறுமையா எல்லா இடுகையையும் படிச்சுட்டு வர்றேன் :)

Yamineem said...

Thanks.. Shenshe...