Wednesday, July 22, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 7

நெருப்பு. அழியா பூதம். அமைதியானது கனன்று எழும் வரை. குரூரமானது அமிழ்ந்து அடங்கும் வரை. சட்டென்று நொடியில் உருவாகும் வல்லமை கொண்டது. நெருப்பு கொண்ட இடம் தன் அடையாளத்தை அழித்துக் கொள்கிறது. நேற்றைய நிலை இன்று இல்லை என்று ஆக்கும் மகா சக்தி. இதனாலோ என்னவோ பூதங்களுள் ஒன்றாய் கருதப் படுகின்றது. நல்லோர் தீயோர் என்று பார்க்காது புடைத்துண்ணும் பூதம். எமனின் கைக் கூலி. கல்லுக்குள் ஒளிந்து இருக்கும் நெருப்பு உரசும் போது பற்றிக் கொள்கின்றது. கங்கில் பற்றிக் கொண்ட நெருப்பு விசுறும் போது பற்றி எழுகின்றது. உள்ளத்துள் எழுகின்ற நெருப்பு நாவிற்கு வரும் போது கனல் தெறிக்கின்றது.

ஆனாலும் சில நெருப்புகள் வீட்டில் செல்லப் பிள்ளைகள் போல் வளர்க்கப் படுகின்றன அடுப்பங்கரையில். பிரகாசித்திருக்க அணையாது காக்கப் படுகின்றன தெய்வ சந்நிதானத்தில். தேவர்களிடத்து யாசிக்க நெய்யூற்றி வளர்த்தப் படுகின்றன யாகக் குண்டத்தில். புல் இரவு முழுவதும் சேகரித்து வைத்த தலைக் கனத்தை அதிகாலையில் எங்கோ தூரத்து எழும் நெருப்புக் கோளம் கரைத்து விடுகின்றது. மாநகர் கூடலில், பெண்கள், குழந்தைகள், அறவோர், பசுக்களன்றி ஏனையோருக்கு அப்பத்தினி தெய்வம் வைத்த நெருப்பும் நல் வகையினதாம். கூண்டுக்குள் அடைபட்ட நெருப்பு வழித் துணையாய் அமைவதோடன்றி, பயத்தையும் விரட்டி அடிக்கின்றது.

மோகினியின் கையில் இருந்த பை அவளது கூர்மையான கை விரல் நகங்களால் கிழிக்கப் பட்டிருக்க வேண்டும். என் பையில் இருந்த டார்ச் அவள் பறக்கும் போது வேறு திசையில் எகிறி விழுந்து ஓடைக் கரைப் பாதைக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டு விழுந்து கிடந்தது. "Let him come out of the stream" ஞாபகத்திற்கு வந்தது. அவர்கள் ஏன் நான் ஓடையை கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். புரிந்தது. அவர்களால் ஓடையைக் கடக்க முடியாது. நான் செல்ல வேண்டிய இடமும் அதுதான். ஆனால் இந்தக் குரங்கு மனுஷி என்ன ஆனாள்?

"Mom" என்றபடியே இரு சிறு மின்மினிகள் காற்றில் தோன்றின. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஏற்கனவே தெரிந்த இரு மின்மினிகளை நோக்கி அவை பறக்கத் தொடங்கின. இது தான் சரியான சமயம். ஆனால் இன்னும் இரு மின்மினிகள் இங்கே இருக்கின்றதே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம் பிறந்து விட்டது எனக்கு. இங்கேயும் சாவு அங்கேயும் சாவு என்ற நிலையில் எதற்கும் மனம் துணிந்து விடுகின்றது.

டார்ச்சை நோக்கி ஓடினேன். இந்த இருண்ட பிரதேசத்தில் எனக்கு வழி காட்ட அதுவும் தேவை எனப் படவே அதை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து குனியும் போதுதான் கவனித்தேன். ஒளி ஓடைப் பாதைக்கு மட்டும் இல்லாமல், ஒரு நிழற்படத்திற்கும் வெளிச்சம் தந்து கொண்டு இருந்தது. அதில் சிரித்துக் கொண்டு இருந்தவர்கள் இருவர். அவர்கள் ..(தொடரும்).....

No comments: