Monday, February 1, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 4

'இவன் யாராக இருக்கக் கூடும். இவனுக்கும் என் வயதே இருக்கும். ஆனாலும் சிறுவனுக்கு உரிய துறுதுறுப்பு கண்களில் மின்னுகிறது. யாரோ ஒருவன் அழைத்தான் என்றவுடன் யார் என்று கூட கேளாமல் வருவது ஒரு முதிர்ந்தவன் செய்யும் செயல் அல்லவே. இந்த முதிர்வு கூட இல்லாதவனுக்கா இத்துணை ஏற்பாடு. ஒரு வேளை எனக்கு இவன் அறிமுகம் ஆனதுபோல் இவனுக்கு யாரேனும் என்னை அறிமுகம் செய்திருந்தால்? ஆயினும் நான் இவ்வளவு பேசியும் அவன் அதிகம் பேசாதது ஒரு வித முதிர்ந்த நிலை அல்லவா?' இவ்வாறாக மாற்சிம்மன் குழம்பிக் கொண்டிருந்த வேளையில், மறுபடியும் ஒரு குழந்தை போலாகி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் இந்திரசேனன். அவன் பார்த்த திசையில் பல திமில்கள் கடலில் எழும்பி இருந்தன. என்னே ஒரு வழக்காறு! மருத நிலத்தில் பகலவன் திருநாட்களில் காளையர்கள் காளைகளின் திமில் அழுத்தி 'காளையேறு' என்று பட்டம் சூடிக் கொள்வராம். அது போலே மாபெரும் படகோ, நாவாயோ செலுத்திப் பழகும் முன் முதற்கண் திமில் செலுத்திப் பழகுதல் வேண்டும் என்று விதிமுறை உளது. ஆயினும் திமில் செலுத்தல் இங்கு ஒரு வீரமாகவோ, விழாவாகவோ ஏனோ கொண்டாடப்படுவதில்லை. காளையின் வேகத்திற்கொப்ப அசையும் திமில் போல, அலைகளின் உயரத்திற்கேற்ப திமில் செலுத்துவோர் தலைகள் உயர்ந்தடங்கின.

படகு நறுவிரைத் துறையை அடைந்திருக்க வேண்டும். வாசனையால் கவரப்பட்டு இந்திரசேனனும் கரை நோக்கினான். நிறைமுகத் தீவில் பிற நாட்டு வணிகர்கள் வந்து விற்கும் பொருட்களுக்கு இணையாக புகாரின் பொருட்களும் விற்பனை ஆவதுண்டு. இங்கு வாங்கும் பொருட்களுக்கு வரி கிடையாது என்றாலும் தீவில் இருந்து வெளி செல்லும் பொது எடுத்துச் செல்லும் பொருட்களின் அளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது. அவ்வளவை மீறும் போது தண்டல் வசூலிப்பதுண்டு. இந்த சந்தையில் வாணிபம் பெருமளவில் நடப்பதில்லை என்பதால் நாளுக்கு நாள் அங்காடிகள் குறைந்து கிடங்குகளாக மாறி வருகின்றன. இங்கிருந்து நறுவிரையோடன்றி, கூலங்கள், அகில், சந்தனம், பருத்தி மற்றும் எலி மயிரால் செய்த ஆடைகள், எனப் பலவும் ஏற்றுமதி ஆகின்றன. நகரின் விழாவில் நிறைமுகம் பங்கெடுக்க வில்லையோ எனும்படி தினப்படி வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. பண்டசாலை எனப்படும் கிடங்குகள் தீவின் நடுவில் இருந்தன, இவை வெளிநாட்டினர் வாங்கி வைக்கும் பொருட்களை சேமிக்க கிரயத்தில் விடப்படும். இது தவிர பயணியர் இளைப்பாற ஓங்குயர் மாடங்களும், தீவகச் சதுக்கமும், பூவிரும் மன்றமும் உள்ளன. இவற்றுள் மன்றமும் மாடங்களும் வணிகர் தங்குமிடங்களாகவும், சதுக்கம் சுமை தூக்குவோர், நாவாய் செலுத்துவோர், நாவாய்ப் பணியாளர் தங்குமிடங்களாகவும் செயல் படுகின்றன. அதற்கும் அப்பால் மீனவக் குடிகளும், தீவின் சிறு வியாபாரிகள் குடிகளும் உள்ளன.

படகு தீவில் இருந்து விலகி மருவூர்ப் பாக்கத்தின் கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. இளவேனிற்காலம் ஆனாலும் வற்றாத காவிரியின் ஓதங்கள் படகை அலைக்கழிக்க ஆரம்பித்திருந்தன. இந்திரசேனனையும் அழைத்துக் கொண்டு தரைதளத்துக்கு மாற்சிம்மன் விரைந்தான். படகைச் செலுத்துபவன் தன் திறமையால் நிதானமாக ஒழுங்குடன் செலுத்தினான். இந்த நீரலையில் தீவங்களை இணைத்து ஒரே தீவாய்ச் சமைத்த வல்லுனர்களின் திறன் போற்றுதற்குரியது. பௌர்ணமி மற்றும் அமாவாசையின் ஓதங்களின் போதும் மூழ்காத படிக்கு செய்தது அளப்பரிய சாதனை. பூம்புகாரின் வல்லுனர்களின் திறம் கண்டு பெருமை அடைந்தான் மாற்சிம்மன். ஒரு வழியாக ஓதங்களின் சுழலில் இருந்து தப்பித்து மீனவர் விளக்கத்தை நோக்கி படகு பயணித்தது. விளக்கத்திற்கு தென் திசையில் சிறுநாவாய் முதல் பெரும் மீன்பிடிப் படகுகள் அணிவகுத்து நின்றன. வடதிசையில் சிறு படகுகள், ஓடங்கள் மற்றும் திமில்கள் நிறுத்தப் பட்டு இருந்தன. இவற்றுள் ஓடங்கள் காவிரியின் எதிர் புனலில் சென்று பட்டினப் பாக்கத்தை அடையும் படி வடிவமைக்கப் பட்டவை. மாற்சிம்மன் எடுத்து வந்த படகு தென்திசை அடைய வேண்டும் என்றாலும் மீன் பிடிப்பதற்காக எடுத்துச் செல்லப் படாததால் பண்டக்காவலர் விளக்கத்தில் சென்று படகை ஒப்புவித்த பிறகே நிலையம் சேரலாம். மாற்சிம்மனும் இந்திரசேனனும் பண்டக்காவலர் விளக்கத்தில் இறங்கியதும் படகு நிலையம் சேர்ந்து விடும்.

பண்டக்காவலர் விளக்கத்தில் மாற்சிம்மனும் இந்திரசேனனும் இறங்கியதும், காவலர் தலைவர் "எட்டிக் குமாரருக்கு வந்தனம். பாக்கம் நீங்கிய யாண்டு வந்தவர் அறியாது மயங்கினன். பொறுத்தருள்க" என்றார். தீவகத்திற்கு படகு வேண்டும் என்று கோரிய போது எவர் என்று அறியாது சிறிய வசதி குறைவான படகே அளிக்கப் பட்டது, இப்பொழுது எப்படி எட்டிக் குமாரர் என்று அறிந்தார் எனத் தெரியவில்லை. பெருவணிகர் மக்கள் பரதகுமாரர் என அறியப்படுவார், அவரினும் மிகப் பெரிய வணிகர்களுக்கு எட்டிப் பட்டம் வழங்கப் படுவதால் அவர் குமாரர் எட்டிக்குமாரர் என அழைப்பர். பண்டக் காவலர் விளக்கதின்று நீங்கி மேற்கில் செல்லுங்கால் மொழிபெயர்ப்போர் குடியும், அதைச் சூழ்ந்து மீனவர் குடியும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் பண்டக் காவலர் விளக்கமும், மொழிபெயர்ப்போர் குடியும் காணப் படும். மீனவர் குடிக்கு அப்பால் மணல் பரப்பைத் தொடர்ந்து மீன் விலை உரைப்போர் விளக்கமும் இருக்கின்றன. தேர் அங்கு தான் நிறுத்தப் பட்டிருந்தது. மாற்சிம்மனும் இந்திரசேனனும் மணல்பரப்பில் மணல் பரப்பில் நடக்கத் தொடங்கிய போது ஞாயிறு ஞாழல் முகம் கண்டு மலர்ந்தது. ... (தொடரும்)...

* அருஞ்சொற்பொருள் விளக்கம்
திமில் - கட்டுமரம் போன்ற எளிமையான படகு
நறுவிரை - நறுமண மசாலா பொருட்கள் (spices)
கூலங்கள் - தானியங்கள்
ஓதங்கள் - ஆற்று நீர்மட்டமோ, கடல் நீர்மட்டமோ ஒன்றுக்கொன்று ஏறவோ இறங்கவோ செய்யும் போது அலையும் நீரோட்டம்.
ஞாழல் - நெய்தல் நிலத் தாவரம் (மரம், பூ)

1 comment:

அண்ணாமலையான் said...

தமிழா? நடக்கட்டும்...