Sunday, February 7, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 5

அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளின் காரணமாக எவர் நல்லவர் எவர் தகாதவர் என பிரித்தறியும் உணர்வை ஒருவாறு இழந்திருந்தான் இந்திரசேனன் . அதனால் தான் மாற்சிம்மன் அழைத்ததும் யார் எவர் என்று எதுவும் கேளாமல் அவனுடன் செல்ல சம்மதித்தான். அது மட்டும் அல்லாது அவனுடன் பேசுவதற்கு அவன் மொழி தெரிய வேண்டுமே என்ற பயமும் இருந்தது. மதுர மொழியை கேளாதே கற்றவனுக்கு அருந்தமிழ் புரியாதது ஆச்சர்யமளித்தது. அவனுக்கு பேசுவதில் தான் பிரச்சனை இருந்ததே ஒழிய அதைப் புரிதலில் எந்த குறுக்கீடும் இல்லை. இப்பொழுதும் அவன் ஏதாவது பேசுவான் என்றே காத்துக் கொண்டிருந்தான். அவனை அன்றி அந்த புதிய நகரைப் புரிந்து கொள்ள வழி ஏது? வந்து இறங்கியதும் அவன் பேசிய மொழிகள் அலுப்பை ஏற்படுத்தினாலும், அவன் பேச்சை கேட்டாக வேண்டிய சூழல் இந்திரசேனனுடையது. அவனுக்கு உரிய பதில் மொழியை பாவங்களிலும், சைகைகளிலும் தெரிவித்திருந்தாலாவது படகில் வரும் பொழுது ஏதாவது பேசி இருப்பான். தான் நாகரிகக் குறைவாக நடந்து கொண்டதாகவே உணர்ந்தான். இந்த பிரச்சனைகளோடு பசியும் சேர்ந்து கொண்டு இருந்தது.

மணற்பரப்பைக் கடந்ததும் ஒரு அழகிய தேர் காத்துக் கொண்டு இருந்தது. அதிகாலை சூரிய வெளிச்சத்தில் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டு இருந்தது. வண்டியை இழுத்துச் செல்லவதற்கு கட்டப் பட்டிருந்த விலங்கு குதிரை மாதிரியான தோற்றத்தில் இருந்தது. பரிணாம வளர்ச்சியில் குதிரைக்கு ஒரு படி முன்னதான அதே இனத்தைச் சார்ந்த ஒரு விலங்கு வகையாக இருக்கலாம். தேரில் ஏறி அமர்ந்ததும், தேரோட்டி செலுத்த தேர் கடல் இருந்த திசைக்கு எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கியது. சந்தனம் மற்றும் இன்னும் வித விதமான வாசனைப் பொருட்கள் விற்கும் வீதி, நவரத்தினங்கள் விற்கும் தெரு, நவதானியங்கள் விற்கும் தெரு, பட்டு மற்றும் கதர் துணிகள் விற்கும் தெரு, இவற்றைக் கடந்து சென்றதும் பெரிய பெரிய மாளிகைகள் கொண்ட ஒரு பிரமாண்டமான ஒரு சாலைக்குள் தேர் நுழைந்தது. 'இதற்கு மேலும் தாங்காது.. கேட்டு விட வேண்டியது தான்'.

"நாம் எங்கு இருக்கிறோம்? இவை எல்லாம் என்ன?" "சேனரே.. இருபெரும் பாக்கத்து பட்டினத்தின் மருவூர்ப் பாக்கம் இதுவேயாம். கூல வீதி, அருங்கல வீதி, காருகர் வீதி துறந்து, நகர வீதியில் உளம். கடற்கல வாணிகன் பெருமனை மாடம், யவனப் பெருமனை, வேயா மாடம், பண்டசாலை, மான்கட்காலதர் மாளிகை கொண்டதாம் நகர வீதி." இந்த உரையாடலால் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்து இருந்தது. எல்லா தெருக்களையும் குறுக்காக கடந்த தேர், இந்த நீண்ட சாலையில் அதன் நீளவாக்கில் ஊர்ந்து மற்றோர் சாலையில் புகுந்தது. மாற்சிம்மன் அறிமுகம் செய்த படி, அந்தத் தெரு இசைப்பாணர் தெரு, அதைத் தொடர்ந்து சித்திரக்கார வீதி, பொற்கொல்லர் வீதி, கருங்கைக் கொல்லர் வீதி, பின் தச்சர், கைவினைஞர், குயவர் வீதிகள் கடந்து சென்றன. அதைத் தொடர்ந்து தேர் ஒரு காட்டிற்குள் நுழைந்தது. வெறும் காட்டை எதிர்பார்த்தவனுக்கு அதற்குள் இருந்த பெரிய சந்தைகளும், வழிபாட்டு இடங்களும் , சிறு மண்டபங்களும் வியப்பளித்தன. வியப்பு தேக்கின கண்களுடன் மாற்சிம்மன் முகம் நோக்கினான். குறிப்பறிந்து "இவ்விடம் பொழில் சூழ் நாளங்காடியாம். ஐவகை மன்றங்களும், பலி பீடிகைகளும் இதன் கண் உள" என்றான்.

மரங்கள் வானளாவ உயர்ந்து இருந்தன, இருப்பனவற்றுள் ஒரு சில மரங்களையே அவனால் இனம் காண முடிந்தது. பெருமளவு நாவல் மரங்கள் இருந்தன, ஆங்காங்கே வேப்பமரங்களும், அரச மரங்களும் இருந்தன. சிறு சிறு கடைகள் மரத்தடியில் இயங்கி வந்தன. எதோ உலோகத்தாலான நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன, பண்ட மாற்று வழக்கும் இருந்தது. ஐந்து அடுக்கு கொண்ட கட்டடங்கள் இருந்தன. இதுவரை மண்ணால் ஆனா வீடுகளே இருந்த நகரில் இப்பொழுது தான் கல் கட்டடமே கண்ணில் பட்டது. பெரிய பெரிய மண்டபங்கள், சில கோயில்கள் போலவே இருந்தன, கோபுரங்கள் மட்டும் தான் இல்லை. பெரிய மதில் சுவர், குளங்கள், அமர்ந்து பேசும் இடங்கள் என பொழுது போக்குவதற்கு என்றே உருவாக்கம் செய்ததாகவே பட்டது. ஆயினும் வணிகர் தவிர பிறர் எவரையும் காணவில்லை. விழாக் காலம் ஆதலால் அனைவரும் கோயிலில் இருக்கலாம். மக்கள் கூட்டம் உள்ள ஒரு கட்டிடமும் இல்லாததைக் கொண்டே இவை எதுவுமே கோயிலாக இருக்க முடியாது என்று உணர்ந்து கொண்டான். சற்று தொலைவில் மரங்களினூடே சலசலத்து ஓடும் ஒரு நதி தெரிந்தது. அங்கு கணிசமான கூட்டம் தெரிந்தது. அந்தக் காட்டைக் கடந்த தேர் மற்றோர் மிகப் பெரிய நகரை அடைந்தது. இந்த நகரம் அகன்ற தெருக்களும், கலை நயமிக்க வேலைப்பாடு கொண்ட வீடுகளையும் கொண்டிருந்தது. செல்வச் சீமான்கள் இருக்கும் மிகப் பெரிய குடி என அறிந்து கொண்டான். இது குறித்து கருத்து கேட்க மாற்சிம்மனிடம் திரும்பிய பொழுது, தேர் நிறுத்தப்பட்டது. நிறுத்தியவர் தோரணையில் அவர் மிகப் பெரிய செல்வந்தர் எனவும், அதிகார பலம் கொண்டவர் எனவும் புரிந்தது. .. (தொடரும்) ..

No comments: