Wednesday, March 17, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 7

பெருநிதிச் செல்வரும், அதிதியும் இந்திரசேனனின் எந்த குழப்பத்தையும் தீர்க்கவில்லை. இது வரை அவன் அறிந்த தகவல்கள் மட்டுமே அவர்கள் மூலம் கிடைத்தது. அவன் கேள்விகளுக்கு விடை அளிப்பவர் புரந்தரன் மட்டுமே என்பதை உணர்ந்து கொண்டான். அவன் குழப்பம் தீர இன்னும் பதினாறு நாட்கள் காத்திருக்க வேண்டும். மாற்சிம்மனின் மொழியைப் புரிந்து கொள்வதில் இருந்த சிக்கலை பெருநிதிச் செல்வரிடம் தெரிவித்த போது அவர் முகத்தில் குழப்பம் கலந்த ஆச்சர்ய ரேகைகள் படர்ந்தன. கண்களைப் பார்த்து பேசியவரின் பார்வைக் கோணம் சற்று தாழ்ந்து எழும்பியது. "முற்றிலும் புரியவில்லையா? இல்லை புதிய மொழி என்ற அசௌகர்யமா? இரண்டாவது தான் சரி என்று நினைக்கிறேன்" என்றார். "ஆம். அவன் சொல்வது முழுவதும் புரிகிறது, ஆனாலும்.." "அது தானே.. நீ நினைத்தால் எந்த மொழியையும் புரிந்து கொள்ள முடியுமே". இந்த வாக்கியம் தான் குழப்பி விட்டது. மதுர மொழி புரியும் என்ற காரணத்தினால் மட்டுமே சொன்ன வாக்கியமாக இது படவில்லை. மேலும் "கற்றுக் கொள்ள முடியும்" என்பதற்கும் "புரிந்து கொள்ள முடியும்" என்பதற்கும் ஓரிரு படி வித்தியாசம் அவர் பேசும் போது இருந்தது புலப்பட்டது.

"என்ன இந்திரசேனா.. ஏதோ பலத்த யோசனையில் இருப்பதாக படுகிறது. விழாவைக் கண்டு களிக்கும் எண்ணம் இல்லையா?".. "இல்லை மாற்சிம்மா.. இவ்விசித்திரங்களை எண்ணி வியந்த வண்ணம் உள்ளேன். நான் இன்னும் முழுதுமாக புகருக்குள் நுழையவில்லை என்றே உள்மனம் சொல்கிறது." வரும் வழியில் பேசிக்கொண்டே வந்ததில் இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைக்கும் அளவுக்கு பழகி விட்டிருந்தனர். பட்டினப் பாக்கத்து பெரு வீதி ஒன்றில் நின்று கொண்டிருந்தனர். கேரளத்துச் செண்டை போன்ற வாத்தியங்கள் முழங்கிக் கொண்டு இருந்தன. யானைகள் கூட்டம் கூட்டமாய் நிற்கும் பெரிய மைதானத்தை அடைந்து இருந்தார்கள். "இந்திரசேனா.. இதோ நாம் வேழத் திடலில் நிற்கிறோம், சற்றே தாமதமானதால் விழாவின் முதல் பகுதிகளைக் காண முடியாவிட்டாலும், 'வேழ வேடிக்கை' காண முடிந்ததே." அப்பொழுது தான் கவனித்தான், அவர்கள் முக்கிய பிரமுகர்கள் நுழையும் வழி வந்ததால் தான் மக்கள் கூட்டத்தை காண முடியவில்லை. மைதானம் யானைகளால் நிரப்பப் பட்டிருந்ததென்றால், மைதான ஓரங்கள் அடுக்கு மாடி கொண்ட தற்காலிக மரக் கட்டடங்களால் அமைக்கப் பட்டு இருந்தன. "அதோ அந்த மரக் கூடங்களைக் காண்கிறாய் அல்லவா, அவை உண்மையில் தேர்கள், சக்கரங்கள் முதல் அடுக்கில் இருக்கின்றன, மக்கள் நிற்கும் பகுதிகள் அதற்க்கு மேல் உள்ளன. இந்த சக்கரங்கள் மைதானத்தைச் சுற்றி இருக்கும் நிலையான அச்சில் இலகுவாக சுற்றி வரும்படி அமைக்கப் பட்டுள்ளன. தேரின் அடிப் பகுதியின் கனத்தைப் பொருத்து தேரின் கொள்ளளவு மாறுபடும். சக்கரத்தின் பாதி அச்சிற்குள் இருப்பதால் தேர் எளிதில் விழாது. பிற நாட்களில் ஒரு தேர் மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கும், அவை யானைகளால் மைதானத்திற்குள் இழுத்துச் செல்லப்படும். இது போன்ற விழா நாட்களில் இந்த தேர்கள் நகர்த்தப் படுவதில்லை, மேலும் இது போன்ற பல தேர்கள் பார்வையாளர்கள் அமர்வதற்காக நிறுத்தப்படும். யானைகளால் பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவண்ணம் உயரமாகவும், அச்சிலிருந்த அசைக்க முடியாததாகவும் இருப்பதால் இந்த ஏற்பாடு."

'நிஜம் தான். யானைகளுக்கு மதம் பிடித்தாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அமைக்கப் பட்டு இருந்தன. கீழ்ப் பகுதியில் யானையின் துதிக்கைக்கு அடங்கக் கூடிய உருவங்கள் எதுவும் இல்லை. மோதினாலும் உடையும் வகையிலோ, நகரும் வகையிலோ எதுவும் இல்லை.' இந்திரசேனனும், மாற்சிம்மனும் அழகான வேலைப் பாடுகள் கொண்ட ஒரு தேரில் ஏறி அமர்ந்து கொண்டனர். மைதானம் மிகப் பெரியதாய் இருந்தது. எண்ணற்ற தேர்கள் இவ்வாறு நிறுத்தப் பட்டிருந்தன. யானைகள் சில ஆயிரம் என்றால் மக்கள் சில இலட்சங்களாவது இருப்பர். முதலில் கூட்டம் கூட்டமாக நின்றதாக பட்ட யானைகள் ஏதோ ஒலி கேட்டதும் ஒரு முறைமையில் நின்றன. "என்ன சத்தம் அது?". "அதுவா யானைகளின் குழூஉக்குறி. யானைகள் புரிந்து கொள்ளும் சங்கேத ஒலி. மிகக் குறைவான எளிமையான வார்த்தைகள் என்பதால் ஒலிப் பிரிபெருக்கி இல்லதே வெகு தொலைவிற்கு கேட்கும் அளவுக்கு உரக்க ஒலி எழுப்ப முடியும். கொட்டி, ஈ என்று ஓரிரு அசைச் சொற்கள் மட்டுமே பயன் படுத்தப்படும். அவ்வப்பொழுது அளபெடுப்பதும் உண்டு." தந்தம் உள்ள யானைகள் ஒரு புறம், இல்லாத பெண் யானைகள் ஒரு புறம் என்று தனித்து நின்றன. பெண் யானைகள் ஆண் யானைகளை விட எண்ணிக்கையில் அதிகம் தென்பட்டன. ஆண் யானைகளின் குறும்புகள் பெண் யானைகளிடம் இல்லை. குறும்பும், காம இச்சையும் யானைகளின் கண்களில் மட்டுமே கட்டுண்டு இருந்தன. அவைகளின் உடல்கள் பாகனின் மொழிகளுக்கே கட்டுண்டு இருந்தன.

விதவிதமான அசைவுகள், யானைகளால் இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா எனும்படி பல வித்தைகள் செய்தன. அவ்வப்பொழுது யானைகளின் நிலையைப் பரிசோதித்து சிலவற்றை வெளியேற்றிக் கொண்டே இருந்தனர், ஆயினும் யானைகளின் கூட்டம் குறைந்தபாடில்லை. இரவின் விழா விளக்குகளிலும், விடியலின் விழா இசையிலும், எற்பாட்டின் விழா அபிநயங்களிலும், அந்தியின் விழா வண்ணங்களிலும், வாசனைகளிலும் நிரம்பி இருக்கும். முற்பகல் தொடங்கி உச்சி வரை உள்ள பொழுது வேலை செய்வதற்கென்றே விழா இன்றி அமைந்தது போலும். ஆனாலும் முற்பகல் வெண்ணொளி யானைகளின் கரு விலாக்களில் வரைந்த ஓவியங்களையே இங்கொரு விழாவாக்கி அழகு செய்திருந்தனர். வெட்டிவேர் கலந்த நீர் ஆவியாகும் போது வரும் குளிர் நிறைந்த தென்றல் யானைகள் கிளப்பும் புழுதியுடன் சேர்ந்து மண்வாசம் கமழச் செய்தது. வெண்மணல் சக்கரையாய் இனித்ததோ இல்லையோ, அதில் ஊரும் எறும்புகளின் சுறுசுறுப்புக்கு எந்த விதத்திலும் குறை வைக்கவில்லை இந்தக் கருங்கரிகள். உச்சிப் பொழுதில் ஒரு வழியாக காட்சி முடிந்ததும், கூட்டம் சீராய் கலைய ஆரம்பித்தது. அப்பொழுதான் இந்திரசேனன் முழுவதுமாக மைதானத்தை கவனித்தான். .. (தொடரும்)..

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in