Sunday, December 20, 2009

புத்தகம் புகுந்த கதை - 8

டைசியா மற்றும் அவள் துணையும் எதிரி நாட்டைச் சார்ந்தவர்கள். இவர்கள் கீழ்த் திசையில் உள்ள மாய இனத்தைச் சார்ந்தவர்கள், பெரும்பாலும் சிங்கம் அல்லது குரங்குகளின் உருவில் அறியப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் மனிதர்களின் கலப்பால் மனித உருவத்தையும் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பேசும் மாய மொழி இன்றளவும் சங்கேதக் குறி நிபுணர்களால் விடுவிக்க முடியாத ஒரு அதிசய மொழி ஆகும். விஞ்ஞான தொழில் நுட்பத்தில் கை தேர்ந்தவர்கள். நம்மை விடவும் புத்திசாலிகள். புத்திசாலிகளுக்கே உரித்தான வித்தியாசக் குணங்களால் அவர்களால் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் அதிலும் முக்கியமாக ஒற்றுமையுடனும் வாழ முடியவில்லை. தங்கள் திறமைக்கு ஏற்ற வாழ்க்கை தங்களுக்கு அமையவில்லை என்ற குறை உடையவர்கள். இதன் பொருட்டே நம்மீது பொறாமை உணர்வு கொண்டு பகைமை பாராட்டி வருகிறார்கள். ஆயினும் மாய இனத்தவர்களிடையே ஒரு சில நல்லவர்களும் இருந்தார்கள். அவர்களின் உதவியால் மட்டுமே நாம் இந்த அளவு வளர்ச்சி காண முடிந்தது. இதற்கு கைமாறாக நாம் அவர்களுக்குக் கொடுத்தது மாயர்களுக்கு இன்றளவும் கிடைக்காத நிம்மதி.

ஆய்வகத்தில் இருந்த இரு குரங்குகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு இது வரை கண்டு பிடிக்கப் படவில்லை. மேலும் கண்ணன், சித்ராங்கதா மற்றும் அந்த ஆய்வகக் குரங்குகளும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் இறந்து போனதற்கான சாட்சியங்கள் நமக்கு பல வருடங்களாகவே வந்த வண்ணம் உள்ளன. நம்முடைய அடுத்த அரசன் இது வரை யார் என்றே தெரியாத நிலையில் அவரைக் கொல்வதர்க்கென்றே மாயர்களால் உருவாக்கம் செய்யப்பட்டவன் பெய்லீ. அவனே மாயர்களின் கணிப்புகள்(ஜோதிடங்கள்) பலவற்றிலும் இடம் பெறுகின்றான். நமக்கு கிடைத்த மிகச் சில குறிப்புகளை மிகுந்த முயற்சியுடன் ஆராய்ந்ததில் உங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைத்தன.

அனால் உங்களைக் கண்டறிவதில் பல சிரமங்கள் இருந்தன. மாயர்களின் குறிப்பு படி கண்ணன் அல்லது சித்ராங்கதா அறிமுகமான மூன்று நாட்களில் நீங்கள் பெய்லீயை சந்தித்து விட்டு இங்கு வந்து சேர்வீர்கள். ஆனால் இது வரை நீங்கள் இருவரில் யாரையும் நேரில் சந்திக்காததால் நீங்கள் இந்த சமயத்தில் வருவீர்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கண்ணனின் புகைப்படம் மூலம் ஏற்பட்ட அறிமுகமே போதுமானது என்ற கோணத்தில் நாங்கள் எண்ணவில்லை. நாங்கள் இன்னும் குறைந்தது ஒரு மாத காலம் ஆகும் என்றே நினைத்திருந்தோம்.

மாயர்களின் மேதாவித்தனம் மரபு சார்ந்தது. மிகவும் புத்திசாலிகளான மாயர்களே மன்னர் ஆகின்றனர். குறிப்புகளின் படி பெய்லீ மாயர்களின் மன்னர் வழி வந்தவன். அவன் தந்தை மன்னன் என்று அறியப்படவில்லை என்றாலும் அவன் மறுசுழற்சி நாளுக்குள் மன்னன் ஆவான் என்று நம் கணிப்புகள் உரைக்கின்றன. ஆயினும் மறுசுழற்சி நாள் வரை அவன் எந்த படையெடுப்பும் மேற்கொள்வதாக நம்மவர்களின் கணிப்பில் இல்லை. மாயர்களுக்கு மறுசுழற்சி நாள் என்ற ஒன்று கிடையாது என்பதால் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அதற்கப்பாலும் கணிக்கப்பட்டு உள்ளன. ஆனால் நம் கணிப்புகள் யாவும் அந்த நாளுடன் முடிவுறுகின்றன. (தொடரும்)...

No comments: