Thursday, December 31, 2009

புத்தகம் புகுந்த கதை - 10

'வெளி'யிலிருந்து "விண்கலம் புகார் நகரத்துக்குள் நுழைந்து விட்டது. ஆனால் தரை இறங்குவதற்கு அனுமதி கிடைக்க இன்னும் சில நேரம் பிடிக்கும். அதுவரை புகார் நகரைச் சுற்றிப் பார்க்க விரும்பினால் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும். விருப்பமா?".. "நன்றி.. கண்டிப்பாக..யப்.. பூ..! "

ஒரு குதிரையின் மீது அமர்ந்து கொண்டு இருந்தேன். தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட சாலை அது. சாலைகளில் தென்னை மாவிலை தோரணங்கள் கட்டப் பட்டு இருந்தன. கமகமவென்று சந்தன வாசம் வீசிக் கொண்டு இருந்தது. ஊரின் ஒரு மூலையில் இருந்து மேல தாள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டு இருந்தன. மேலே என்ன? எதோ ஒரு பறக்கும் தட்டு? வளையல் ஓசையைத் தொடர்ந்து பெண்களின் சிரிப்பொலி கேட்டது. தூரத்தில் பெண்கள் சிலர் வந்து கொண்டு இருந்தனர். நடுவில் ஒரு இளம்பெண் மிகையான அலங்காரங்களுடன் வந்து கொண்டு இருந்தாள். ஆபரணங்கள் அதிகமாய் மறைத்த அங்கம், குழல் மறைத்த பாதிமுகம், கருப்பு என்று சொல்லிவிட முடியாத சற்றே வெளுத்த நிறம். தொலைவில் வருவதால் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. குதிரையை விரட்டி அவர்களை நெருங்கினேன். மங்களகரமான முகம், அழகானதா? சொல்ல முடியவில்லை.. ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வதனம்.. ஆனால் யாரையும் கண்டு கொள்ளாத பாவம். திமிரா? இருக்காது..ஆனால் அந்த பாவம் அவளை அழகியாக்கியிருந்தது. "எக்ஸ்..சாரி.."

குதிரை பின்பக்கமாக நகர ஆரம்பித்தது. வேகமாக பின்புறம் ஓடியது. சாலை முன்புறம் நகர்ந்தது. குதிரை மறைந்தது. நின்று கொண்டு இருந்தேன். ஆனாலும் சாலை முன்புறம் அதிக வேகத்தில் நகர்ந்து கொண்டு தான் இருந்தது. நகரம் மறைய ஆரம்பித்தது. மறுபடியும் விண்கலத்தில்.. "ஸா..மன்னிக்கவும்.. தமிழில் பேச வேண்டும் என்பதை மறந்து விட்டேன்.." "பரவாயில்லை.. உங்களைத் திரும்ப அழைத்தது அதற்காக அல்ல.. தரை இறங்க அனுமதி கிடைத்து விட்டது." 'இயந்திரம் என்பது சரியாகத்தான் இருக்கிறது' நினைத்தேன். "மன்னிக்கவும். பல வாகனங்கள் வரிசையில் நிற்பதால் இப்பொழுது விட்டால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி வரும். உங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று வாங்கிய கால இடைவெளிக்குள் சேர்ப்பிக்க வேண்டிய கடமை வாகனங்களுக்கு இருக்கிறது."

தரை இறங்கிய பின் வெளியே.. "பின்னால் திரும்பி இடக்கையை மேல்நோக்கி கீழேயும், வலக்கையை கீழ்நோக்கி மேலேயும் வைத்து.. இரு கைகளையும் அமுக்குவது போல் இணையுங்கள்." செய்தேன். விண்கலம் மறைந்தது. திரும்பினேன். "கதவைத் திறந்து வெளியே சென்று, காத்திருக்கவும்.." என்று மீண்டும் அதே அசரீரி.

காத்திருக்கும் அறையில்.. எக்கச் சக்கமான நபர்கள் காத்து இருந்தார்கள். "இந்திரவிழா அல்லவா? அதான் இத்தனை கூட்டம்" அருகில் இருந்தவர் தமிழில். "விழாக் காலங்களுக்கு இன்னும் சில படகுகளை சேர்த்திருக்கலாம். இந்த அரசாங்கம் என்று தான் ஒழுங்காக செயல்படுமோ. யாரோ முக்கிய நபர் வருகிறார் என்று பல வின்கலன்களைக் காக்க வைத்து விட்டார்கள்." "இந்திரசேனன் அழியாப்புலத்திலிருந்து".. அழைத்தார்கள். "எங்கிருந்து வருகிறீர்கள்" எனக் கேட்டார் அவர். 'உரோமாபுரி என்றா சொல்வது.. ' யோசித்துக் கொண்டு இருக்கும் போதே.. ஒரு பெண் வந்து "இந்திரசேனரே.. உங்களைத் தான் அழைக்கிறார்கள்".. "தலைநகரத்தில் இருந்து தான் வருகிறீர்களா?" என்றார் அவர். "ம்" தலையை எல்லா திசையிலும் அசைத்தேன்.

அந்த பெண் அழைத்து சென்று "இங்கே கை வையுங்கள்" என்றாள். ஒரு சிறிய ஒளியூட்டப்பட்ட பலகை அது. வைத்தேன். இந்திரசேனன் வெகு வேகமாக என்னில் இருந்து தூக்கி எறியப்பட்டான். நான் காணாமல் போய் இருந்தேன்.. இல்லை இருந்தது. ... (அடுத்த பாகத்தில் தொடரும்)...

No comments: